
“பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!” என்பது நடைமுறையில் அனைவருக்கும் கூறும் ஆசி.
அது என்ன 16?
நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, ஆனந்தமான இல்லறம், மழலை செல்வம், அள்ள அள்ள குறையாத தனம், நல்ல படிப்பு, புகழ் போன்ற பல இந்த பதினாறில் அடக்கம். இந்த 16 நாம் அனைவரும் விரும்புவதே!
ஆனால் இம்மாதிரி அரிய பலன்களை பெற நமக்கு என்னென்ன குணங்கள், தகுதிகள் இருக்க வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். அம்மாதிரியான தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த குணங்களை நமக்கு எடுத்து காட்டுபவர் ராம பிரான் தான் !
ராமாயணத்தின் தொடக்கத்தில் வால்மீகியை சந்திக்க நாரதர் வருகிறார். வால்மீகி அவரிடம் “மஹரிஷி! மனிதனுக்கு முக்கியமான 16 குணங்களை இருப்பிடமாக கொண்டவர்கள் யார் யாரென்று கூற முடியுமா?” என்று வினவினார்.
அதற்கு நாரதர் “ஒவ்வொரு குணத்திற்கும் யார் யாரென்று அங்குமிங்கும் தனித்தனியே தேட வேண்டாம்! இந்த 16 குணங்களும் ஒருவரிடமே அடைக்கலம் கொண்டுள்ளன” என்று பீடிகையுடன் தொடங்கி அந்த 16 குணங்களையும் விவரித்து, கடைசியில் “அந்த ஒருவன் யாரென்றால் அவனே தசரதனின் மகன் ஸ்ரீ ராமன்” என்று முடித்தார்.
அந்த 16 குணங்கள் யாவை?
1. நல்லொழுக்கம் கொண்டவன்
2. வீரம் மிக்கவன்
3. எது சரி எது தவறு என்று பகுத்தறிய திறமை பெற்றவன்
4. செய்நன்றி மறவாதவன்
5. சத்ய சீலன்
6. எடுத்த காரியத்தில் மன உறுதியுடன் செயல் படுபவன்
7. தர்மத்தின் உருவகம்
8. அனைத்து ஜீவராசிகளிடத்திலும் நட்பு பாராட்டுபவன்
9. சிறந்த ஞானி, அறிவாளி
10. உடல் வலிமை மிக்கவன்
11. பார்க்க பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பவன்
12. புலன்களை அடக்கியவன்
13. கோபத்தை கட்டுப்படுத்தியவன்
14. அதே சமயத்தில் எதிரிகளை பயத்தால் நடுங்க வைப்பவன்
15. மேன்மை பொருந்தியவன்
16. ஒரு குறை கூட இல்லாதவன்
ராமாயணம் என்பது வெறும் கட்டுக்கதை அல்ல! பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த உன்னதமான,உண்மையான சரித்திரம். ராமன் மட்டுமல்ல, ஹனுமான், பரதன் உட்பட அனைத்துப் பாத்திரங்களும் தங்கள் அப்பழுக்கற்ற நடத்தை மூலம் “வாழ்வை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும்” என்று முன்னுதாரணமாக திகழ்கின்றனர.
சரி உண்மையாகவே இருக்கட்டும். அதெல்லாம் நடந்து பல நூற்றாண்டுகள் ஆகி விட்டதே , இதெல்லாம் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்துமா , பயன் படுமா என்று ஐயம் வருவது இயற்கையே.
பல நூற்றாண்டுகள் முன்னே எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் உள்ள சூழ்நிலைகளிலும், பிரச்சனைகளுக்கும் இதில் தீர்வு உள்ளன என்பது உண்மை। இவற்றில் ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்.
இன்றைய சூழ்நிலையில் சிறுவர்களிடமும், பெரியவர்களிடமும் நாம் கேட்கும் வாக்கியம் “I am depressed; I am stressed” என்பதுதான்! இம்மாதிரி மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி என்பதை சீதையை பிரிந்த ராமன், மற்றும் கடினமான தேடுதலில் ஈடுபட்ட ஹனுமானும் நன்கு உணர்த்துகிறார்கள். இல்லற வாழ்க்கையிலும், தொழிலிலும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது எப்படி என்பதற்கு இவைகளை விட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது!
இன்று இருக்கும் வேகமான உலகத்தில் அனைவரும் சொல்வது “எனக்கு நேரம் இல்லை!” நேரம் பொன்னானது. இதை சரியாக திட்டமிட்டு செய்பவர்கள் வெற்றி வாகை சுடுகிறார்கள். இந்த time management திறனை பல இடங்களில் ராமனும் ஹனுமானும் திறம்பட செய்துள்ளனர். அவர்களின் இந்த செய்கைகளை படித்து, உள் வாங்கி, வாழ்க்கையில் நடைமுறை படுத்தினால் நம் சாதனைகள் பன்மடங்கு பெருகும்.
இப்போது வேலைக்கு செல்ல மிக முக்கியமானதாக கருதப்படுவது soft skills எனப்படும் மென்மை தொடர்பு திறன். வேலை கிடைப்பதற்கு முதல் சவால் ஒரு நேர்காணலில் வெற்றி பெறுவது! நேர் காணல் செய்பவர்கள் எப்படி இரண்டே நிமிடங்களில் வேட்பாளரின் ஞானம், ஞாபக சக்தி, பேச்சு திறன் முதலியவைகளை கணிக்கிறார் என்பதை ராமன் ஹனுமானை முதல் சந்திப்பிலேயே விளக்குகிறார்- இது வேலைக்கு விண்ணப்பம் செய்யும் ஒவ்வொருவரும் அவசியம் படித்து உணர வேண்டியது.
பணியில் சேர்ந்தவுடன் நுகர்வோர், மேலாளர்கள், சக ஊழியர்கள், போட்டியாளர்கள் போன்ற பல வகைப் பட்டவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள் வேண்டி இருக்கும். அவரவர் மன நிலையை உணர்ந்து அதற்கேற்ப தனது பேச்சையும் செய்கைகக்கையும் மாற்றிக் கொள்ள் வேண்டும். வள்ளுவர் கூறும் “அவை அறிதல்” என்னும் Audience Analysis செய்ய திறன்களை ஹனுமான் சீதையிடம் பேசுவது, ராவணனை மிரட்டுவது, சுக்ரீவனுக்கு வழி காட்டுவது, ராமரிடம் அதீத மரியாதையுடன் நடந்து கொள்வது என பற்பல சூழ்நிலைகளில் விளக்கி உள்ளார்.
எந்த முயற்சியிலும் திறமையான திட்ட மேலாண்மை (project management) மிக முக்கியமானது . இன்றைய கால கட்டத்தில் வெற்றிப் பாதையில் செல்ல இன்றியமையாதது. இலங்கைக்கு செல்ல பாலம் அமைப்பதிலும் சரி, சீதையை தேடும் கடினமான பணியிலும் சரி, project management எவ்வாறு செய்ய வேண்டும் என ராமரும், ஹனுமானும், சுக்ரீவனும், விபீஷணனும் தங்கள் செய்கைகள் மூலம் நன்கு விளக்கி உள்ளனர்.₹
இம்மாதிரி ராமர் நமக்கு கற்று தரும் பாடங்கள் பல உள்ளன. “அன்றாட வாழ்விற்கு ராமாயணம் காட்டும் வெற்றிப் பாதை “ என்ற புத்தகத்தில் இது போன்ற 20 பாடங்கள் விளக்கப் பட்டுள்ளன.
இம்மாதிரி நற்குணங்களை கொண்ட ராமர் ஆண்ட அயோத்தி பூலோக சுவர்கமாக விளங்கிற்று. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் இருந்து விடும், நாடும் செழிப்புடன் இருந்தனர். நாமும் அம்மாதிரியான ராம ராஜ்ஜியத்தில் வாழ இறைவன் அருள் புரிவானாக!
நாமும் ராமரின் பாதையில் சென்று வெற்றி பெற்று “ராம ராஜ்யத்தில்” இருந்து ஆனந்தம் அடைவோமாக!
கட்டுரையின் ஆசிரியர் கலிஃபோர்னியாவில் உள்ள Stanford University இல் மேலாண்மையில் முதுநிலை பட்டமும், IIT Madras ல் கணினி அறிவியலில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தகவல் தொழில் நுட்ப துறையில் 40 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பல வெளிநாடுகளிலும் பணி புரிந்து நிறுவனங்களை தொடக்க காலத்தில் இருந்து பெரிய நிறுவனங்களாக வளர்த்த அனுபவம் கொண்டவர். IIIT Bangalore, IIT Madras போன்ற பல பல்கலை கழகங்களில் Adjunct Professor ஆக இருந்தார். இவர் பல புத்தகங்களை எழுதி உள்ளார். இவர் எழுதிய புத்தகங்களில் இரண்டு சீன மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இவரின் Managing Global Software Projects என்னும் புத்தகம் சிறந்த நூலுக்கான தேசிய விருதை பெற்றது.

Leave a comment
Upload