தொடர்கள்
கதை
சத்ருஜித் - 1 -  கி. ரமணி

20260221054459836.jpeg

சுப்ரதனுக்கு பதிமூன்று வயசு இன்னும் முடியவில்லை. அழகிய பாலகன்.

இடுப்பில் மஞ்சள் வஸ்திரம் கட்டியிருப்பான். தோளில் ஒரு உத்ரீயம். நெற்றியில் சிவப்பு திலகம். கையில் ஒரு சிறிய வில். (அவன் தந்தை அவனுடைய பன்னிரெண்டாம் பிறந்தநாளுக்கு அளித்தது.) இடுப்பில் சில மென்மையான அம்புகள் சொருகி இருப்பான். கைகளில் செப்பு கங்கணம் கழுத்தில் வெள்ளி தாயத்து..

சுப்ரதனின் தகப்பன் தேவதத்தன் ஒரு யானைப்பாகன்.. மற்றும் யானைப்படை வீரன். சுப்ரதனின் மிகச் சிறந்த நண்பனான பதினெட்டு வயது சத்ருஜித், ஒரு ஆண் யானை. தேவதத்தன் வளர்த்த போர் யானை.

உயரம் பத்தடிக்கு மேல். எடை நாற்பது பாரத்துக்கு மேல் இருக்கும். (ஒரு பாரம் இன்றைய நூற்றி பத்து கிலோக்கு மேல்) தோல், கரும் சாம்பல் நிறம். ஆழமான சிறிய கண்கள், போர் வாள்கள் போல் வளைந்து நீண்ட தந்தங்கள், நுனியில் பளபளக்கும் இரும்புப் பூண். நெற்றியில் குங்குமம்.

கழுத்து நிறைய வெண்கல மணிகள் சேர்ந்த மாலை. பெரிய காதுகளை சத்ருஜித் வேகமாய் அசைக்கும் போது, அருகே சிறியதாக ஒரு புயலே உண்டாகும் என்று சுப்ரதன் சொல்வான்.

பாஞ்சால மன்னனும் திரௌபதியின் தகப்பனும் ஆன துருபதனின் யானைப்படையில் இருந்தான் தேவதத்தன்.

அவனுடைய பயிற்சிக்கு உட்பட்டு பல யானைகள் இருந்தாலும் அவன் வளர்த்த யானை சத்ருஜித் தான். மூன்று வயதிலிருந்து சத்ருஜித் தேவதத்தனிடம் தான் வளர்ந்தது. பல்லாயிரக்கணக்கில் யானைகள் படையில் இருக்கையில் அரசு தேர்ந்த பாகன்களின் பொறுப்பில் சில யானைகளை விடுவதுண்டு.

தேவதத்தன் சுப்ரதனிடம் அடிக்கடி சொல்லுவான். "சத்ருஜித் தான் உன்னுடைய அண்ணன்" என்று.

சுப்ரதன் சத்ருஜித்துடன் வளர்ந்தான். வெளியே எங்கு சென்றாலும் சத்ருஜித் தன் நீண்ட தும்பிக்கையால் சுப்ரதனை அணைத்துத் தூக்கித் தன் முதுகு மீது அனாயாசமாக அமர்த்திக்கொண்டு விடும்.

கீழே இறக்கும் போதும் அப்படியே.

சத்ருஜித்துக்கு கரும்பு ரொம்ப பிடிக்கும். தங்கள் வீட்டுக்குப் பின்பக்கம் இருக்கும் கரும்பு வயலுக்கு சுப்ரதன் யாரும் பார்க்காத போது, சத்ருஜித்தை நுழையச் சொல்லி கரும்புகளைப் பிடுங்கி உண்ண விட்டு விடுவான். அகமகிழ்ந்து போன சத்ருஜித் நன்றிக் கடனாக சந்தையில் இருக்கும் அப்பக்கடையிலிருந்து சில அப்பங்களை தும்பிக்கையால் அள்ளி சுப்ரதனிடம் கொடுக்கும்.

ஊரில் இருக்கும் மற்ற பிள்ளைகளுக்கு சுப்ரதனிடம் பயம் கலந்த மரியாதை உண்டு. காரணம் அவனுடைய மெய்க்காவலன் சத்ருஜித் தான்.

குரு ஷேத்திரத்தில் போர் சீக்கிரம் ஆரம்பமாகும் என்று நேற்று அப்பா தேவதத்தன் அம்மா தாராவிடம் சொல்லுவதைக் கவலையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சுப்ரதன்.

​"அப்பா! அப்போ நீ போய் சண்டை போடுவாயா?."

"ஆமாம் சுப்ரதா. போர் நடக்கும் போது வீரன் வேற என்ன செய்வான்?"

"ரொம்ப நாள் நடக்குமோ போர்?" என்று கேட்டாள் அம்மா தாரா.

"ஆமாம் இது மிகப்பெரிய போராக இருக்கப் போகிறது. பதினெட்டு அக்ஷௌகிணி படைகள் சண்டை போடப்போகின்றன.

ஒரு அக்ஷௌகிணி என்றால் 21870 ரதங்கள், 21870 யானைகள், 65610 குதிரைகள் 109350 போர் வீரர்கள் கொண்ட படை என்று பொருள். நம் பாண்டவர் பக்கம், ஏழு அக்ஷௌகிணி, துரியோதானாதிகள் பக்கம் பதினோன்று.

மொத்தத்தில் பல லட்சக்கணக்கில் ரதம் யானை, புரவி காலாட்ப்படைகள் கொண்ட சமுத்திரம். எல்லா மகாரதர்களும் பங்கேற்க போகிறார்கள். அதனால் போர் எவ்வளவு நாள் நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. ஒரு வாரம் ஆகலாம் மாதமாகலாம் வருஷமும் ஆகலாம்."

போர் நடக்கும் குருஷேத்திரத்துக்கு பக்கத்தில் நம் ஞான கூடம் கிராமத்தில் பூர்வீக வீட்டில் நாம் முதலில் போய் இருப்போம். அங்கிருந்து நான் போர்க்கு சென்று விடுவேன். நீங்கள் போர் முடியும் வரை அங்கு இருங்கள்."

"அப்பா! போருக்கு சென்றால் எப்பொழுது திரும்பி வீட்டுக்கு வருவாய்?"

சிரித்தான் தேவதத்தன். "போர் முடிந்த பின் தான். நடுவில் வரமாட்டேன். போர்க்கு நடுவில் என்னைப் பற்றி ஏதாவது உங்களுக்கு செய்தி வந்தால் அது என் வீர மரணம் பற்றி தான் இருக்கும்." மீண்டும் சப்தமிட்டு சிரித்தான் தேவதத்தன்.

அம்மா "இது என்ன பேச்சு" என்று தேவதத்தனின் வாயை மூடினாள்.

தேவதத்தன் அடுத்த நாள் இரண்டு குதிரை பூட்டிய ஒரு ரதத்தில் சில முக்கியமான வீட்டுக்கு தேவையான உபகரணங்களுடனும் மனைவியுடனும் ஞான கூடம் கிளம்பினான்.

சுப்ரதனை தன் கழுத்தில் உட்கார வைத்துக் கொண்டு சத்ருஜித் உற்சாகமாக ரதத்தின் வேகத்துக்கு இணையாக நடந்தது.

வழியில் ஒரு பெரிய கரும்பு வயல். சுப்ரதன் சத்ருஜித்தைத் தட்டிக் கொடுத்து கரும்பு வயலை நோக்கி செலுத்தினான்.

பக்கத்தில் ரதத்திலிருந்து தேவதத்தன் "என்ன செய்கிறாய் சுப்ரதா?. கரும்பு வயலுக்கு போனால் சத்ருஜித் எளிதில் திரும்பி வரமாட்டான். நமக்கு நேரம் ஆகிறது. திரும்பி வா" என்றான்.

"சத்ருஜித் தனக்கு வேண்டிய அளவுக்கு கரும்புத் தின்றவுடன் திரும்பி வந்து விடுவான் அப்பா. இந்த சமயத்தில் நீங்களும் குதிரைகளுக்கு தீவனம் வையுங்கள். நீண்ட பயணம் அல்லவா. இந்த பிராணிகள் தானே நம்மை சுமக்கின்றன. அவைகளுக்கு பிடித்தமான உணவை உண்ணட்டுமே."

தேவதத்தான் பதிலே சொல்லாமல் பணிந்தான்.

ஞான கூடத்தில் வீட்டில் மனைவியையும் சுப்ரதனையும் விட்டு விட்டு சத்ருஜித்தின் மீது ஏறிக் கிளம்பினான் தேவதத்தன்.

"நான் அருகில் இருக்கும் என் பாஞ்சால மன்னர் துருபதனின் பாசறைக்கு, போர் பயிற்சி கூடத்திற்கு போகிறேன். ஒரு வாரத்தில் குரு ஷேத்திரத்தில் பாண்டவ துரியோதனாதிகளின் போர் ஆரமிக்கப் போகிறது.

எனது வேலை யானை மீது அமர்ந்து யானையைச் செலுத்துவது தான். எனக்கு பின்னே அம்பாரியில் மாவீரர் ஒருவர், அமர்ந்து போர் புரிவார். நானும் யானையும் அவரது கருவிகள் மற்றும் காப்பாளர்கள். அவ்வளவுதான். அந்த மாவீரனைக் காக்கும் பணியில் நானோ, சத்ருஜித்தோ இறக்க நேரிடலாம். ஆனால் இதுதான் எங்கள் கடமை."

"உங்களுக்கோ சத்ருஜித்துக்கோ ஒன்றும் ஆகாதபடி நாங்கள் கடவுளை வேண்டுகிறோம்" என்றாள் அம்மா.

"இந்த சண்டை நடக்காமல் இருந்தால் லட்சக்கணக்கில் மனிதர்கள் குதிரை யானைகள் எதுவும் இறக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா. இதெல்லாம் அவசியமா? இதெல்லாம் யாருக்காக?" என்றான் சுப்ரதன்.

சிரித்தான் தேவதத்தன். "போர் நடப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பாண்டவரா? கௌரவரா? யார் சரி? எது தர்மம்? என்பது பற்றி என் போன்ற வீரர்களுக்கு கவலை இல்லை. அது எங்கள் வேலையும் இல்லை. போரில் சண்டை போடுவது எங்கள் கடமை. தர்மம் அல்லது வேலை. என் மன்னன் துருபதன், இளவரசன் திருஷ்டத்யும்னன் இவர்கள் சொல்படி நடப்பது என் வேலை. அதனால் பாண்டவர் பக்கம் இருந்து போர் செய்வேன். மற்றது விதிப்படி நடக்கும்."

"அப்பா உங்களுக்கும் சத்ருஜித்துக்கும் வெற்றி நிச்சயம். சத்ருஜித்துக்கு பசி அதிகம்பா. பட்டினியோடு அவனை போருக்கு கொண்டு செல்லாதீர்கள். அவனுக்கு கோபம் வந்தால் தாங்காது! ஜாக்ரதை!" சப்தமாக சிரித்தான் சுப்ரதன்.

"அட, எனக்கு தெரியும்பா, நான் வளர்த்த யானையை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..." என்று கூறிவிட்டு சுப்ரதன் கன்னத்தை கிள்ளிவிட்டு "நான் செல்கிறேன். பாஞ்சாலம் வெல்க." என்று கம்பீரமாக சத்ருஜித்தை தட்டிக்கொடுக்க

சிறிய பிளிறலுடன் தன் தும்பிக்கையால்

சுப்ரஜித்தின் தலையை தடவிவிட்டுக் கிளம்பியது சத்ருஜித்.

ஒரு வழியாக மகாபாரத யுத்தமும் ஆரம்பித்துவிட்டது.குருஷேத்திரத்தில். இரண்டு எதிரி படைகளும் லட்சக்கணக்கில், அவரவர்களுக்கான பாசறையில் வந்து தங்கினார்.

உணவகம், பயிற்சி மைதானம், மருத்துவக்கூடம் போர் யானைக்கூடம், குதிரைகள் லாயம், சற்று தள்ளி பாலுக்கான பசுக்கள், அசைவ, சைவ உணவுக்கு வேண்டிய மிருகங்கள், பறவைகள், காய்கறி, தானியங்கள் என்று எல்லாம் ஆங்காங்கே தயாராக இருந்தன.

தவிர சமையல் வல்லுநர்கள், மருத்துவர்கள், மற்ற மர, இரும்பு, கட்டிடக் கலை வல்லுநர்கள், சிறு வியாபாரிகள், கடைகள், என்று இந்த இடமே கிட்டத்தட்ட ஒரு சிறிய நகரம் போல் காட்சி அளித்தது.

குருஷேத்திரப் போர் சரஸ்வதி நதிக்கரையில் நடந்தது என்று சொல்லப்படுகிறது. அந்தக்காலத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் சரஸ்வதி மிகப் பெரிய நதியாக பூமி மேல் ஓடியது என்று மஹாபாரதம் கூறுகிறது.

சரஸ்வதி தற்போது பூமிக்கு அடியில் செல்வதாகக் கருதப்படுகிறது. வீரர்களின் தேவைக்கு வேண்டிய தண்ணீர் எல்லாம் சரஸ்வதி மற்றும் அருகிலேயே உள்ள ஹிரண்யவதி நதியில் இருந்து யானைகள் குதிரைகள், ரதங்கள் மூலம் கொண்டுவரப்பட்டது.

முதல் நாள் யுத்தம் கண்ணன் அர்ஜுனனுக்கு சொன்ன பகவத் கீதையுடன் இனிதே ஆரம்பித்தது. அடுத்த ஆறு நாட்களில் பீஷமர் புயல் போல் சண்டை போட, பீமன் சில கௌரவ சகோதரர்களைக் கொல்ல, பின் துரியோதனனுடன மோத,அர்ஜுனன் பீஷமருடன் மோத,....ஒரு சமயத்தில் பொறுமை இழந்த பரந்தாமன் கையில் சக்கரத்துடன் பீஷ்மரைக் கொல்ல இறங்கி சக்ரபாணி ஆகி அப்புறம் பின்வாங்கி, தன் ரதத்தில் ஏறி மறுபடி பார்த்தசாரதி ஆக... இப்படி எல்லாம் நடந்தது.

முதல் ஒரு வாரத்தில் பாண்டவர் பக்கத்தில் விராட மன்னனின் இரு மகன்கள் இறந்தனர். துரியோதனனின் எட்டு தம்பிகள் இறந்தனர். நிறைய அலுத்துப்போகும் அளவு போர், ரத்தம், ரணம்.. எங்கு பார்த்தாலும். ஏராளமான குதிரைகள், யானைகள் மற்றும் போர் வீரர்களின் உயிரிழப்பு. ஆனாலும் போர் இன்னும் முக்கிய நிலையைக் கூட எட்டவில்லை. இன்னும் எவ்வளவு நாளோ!. யாருக்கும் புரியவில்லை.

ஞான கூடத்தில் சுப்ரதனின் அம்மா தாரா தினமும் அழுது கொண்டிருந்தாள். சுப்ரதன் கேட்டால் "ஒன்றும் இல்லை" என்று கண் துடைத்துச் சிரிப்பாள்.

"போர் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. போர் பூமியில் இருந்து எந்த செய்தியும் இல்லை. இது நல்லதாகவும் இருக்கலாம்.. ஆனால் அம்மாவைப் பார்த்தால் பாவமா இருக்கு. அம்மாவுக்காகவாவது இன்று கிளம்பி போர் முடிந்த சாயுங்கால வேளையில் குரு ஷேத்ரம் சென்று அப்பாவைப் பார்த்து விட்டு.. அது முடியவிட்டால் குறைந்த பட்சம் அவருடைய நலம் விசாரித்து விட்டு வரணும். முடிந்தால் சத்ருஜித்தையும் பார்க்கலாம். அவனைப் பார்த்து ஒரு வாரம் ஆச்சு." யோசித்தான் சூப்பரதன்.

பின் அம்மாவிடம் கூட சொல்லாமல் குரு ஷேத்ர போர் பூமிக்கு கிளம்பிவிட்டான்.

(தொடரும் )