
அர்ச்சனா எப்போதுமே ஒரு அவசரக் குடுக்கை. எல்லாவற்றிலும் அவசரம், பதைபதைப்பு, அவசர முடிவு என்றிருப்பவள். படபடவென்று பேசுவாள். சட்டென கோபம் வந்து பட்டென மறைந்து விடும். வெகுளி தான்.
சிலிண்டர் பிரச்சினை! நாடு தழுவிய பிரச்சினையாக உள்ளது. முகநூல், வாட்சப் எல்லாவற்றிலும் இதேதான் பதிவுகள். சில பதற வைக்கும் பதிவுகள். சில பக்குவமாய் சுலபமான, டயட்டான அடுப்பில்லா சமையல் குறிப்புகள் என டிஆர்பி அதிகரித்துக் கொண்டிருந்தது.
கணவன் அக்ஷய் தனக்குத் தெரிந்த ஒருவருக்கு உதவுவதாக உத்தரவாதம் தந்து விட்டான். அர்ச்சனாவின் அர்ச்சனைகளையும் மீறி வீட்டிலிருந்த ஃபுல் சிலிண்டர் ஹோகயா. புலம்பித் தீர்த்தாள் அர்ச்சனா. அக்ஷைய் காது தீயந்து போகும் வரை! ஓடிக் கொண்டிருக்கும் சிலிண்டரில் சாக்பீஸால் எழுதிய தேதிப்படி இன்னும் பத்துப் பதினைந்து நாள் வரும். பிறகு???? கேள்விக்குறிகளுடன் அர்ச்சனா.
டி.வி ரிமோட்டும் கையுமாகவே இருந்தாள். செய்திச் சேனல்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். “கப்பல் வருதாங்க, சிலிண்டர் வந்துடுமாம். இருந்தாலும் நாம ஜாக்கிரதையாக இருக்கனும். வெயில் காலம் தானே? கூல் காஃபி குடுச்சுக்கலாம். காய்கறி, பழ சாலட் சாப்பிட வேண்டியது தான் என்றாள். அக்ஷைய்க்கு தலை சுற்றியதில் முதுகெல்லாம் தெரிந்தது.
“ஒருவாரத்தில் சரியாகிடும்னு சொல்றாங்க நியூஸ்ல எல்லாம். நல்லதே நினையேன். எப்பப்பாரு ஒரே கத்தல்தான்” இது நாட்டு நடப்புத் தெரிந்தும் சிலிண்டரையும் கொடுத்துவிட்டு தில்லுத் துறையாய் பேசும் அக்ஷய்.
“லாஃப்ட்லேந்து கரண்ட் அடுப்பு (இன்டக்சன் ஸ்டவ்) எடுங்க. அந்த ‘ஸ்டீம் ஆல்’ஐயும் எறக்கிடுங்க. வெந்தவரைக்கும் சமைச்சுப் போடுவேன். வாயை மூடிக்கிட்டு சாப்பிடனும் சொல்லிப்புட்டேன்” என்றாள். வேறு வழி? கேஸ் இருக்கும் போது மட்டும்...
அன்று முதல் இரண்டு மூன்று நாட்களாய் வெந்ததும் வேகாததுமாய் சாப்பாடு கிடைத்தது. ருசியெல்லாம் பார்ப்பதற்கில்லை.
வீட்டில் ஏசி போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. மின்சாரக் கட்டணம் அதிகமாகிவிடும்.
ஏற்கெனவே ரீடிங் எடுக்க வருவதற்கு முன்பாக யூனிட் கண்கானிப்பிலேயே இருப்பவள்.
இதோ இன்று எல்லாம் தலைகீழானது. நண்பருக்குக் கொடுத்த சிலிண்டர் ஃபுல்லாக கிடைத்து விட்டது. அரச்சனா சிலிண்டரை மறைத்து வைத்தாள். யாரும் கேட்டால் என்ன காரணமானாலும் கொடுக்க மாட்டாள்.
அக்ஷைய் ஏஜன்ஸியில் புக் செய்தது வேறு புக்காகிவிட்டது. இப்போது நிலைமை தலைகீழானது. சிலிண்டர் தீர வேண்டுமே என்ற பிரச்சினை. எம் டி சிலிண்டர் வேண்டும். சீக்கிரம் தீர்க்க வேண்டும். சிலிண்டர் வருமா? எப்போது வரும் என்று தெரியாது
ஒரு வாரம்தான் ஆனது.
இந்த அமக்களத்தில் மாசக்கடைசியில் வீடு வேறு மாற்றுகிறார்கள்!
அதற்குள் சிலிண்டர் வரவேண்டும். எடுத்துக் கொண்டு போக வேண்டும். பிறகு விலாசம் மாற்றிக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.
சிலிண்டர் தீர வேண்டுமே என்று பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சாம்பார், பொரியல் செய்து கொடுக்கிறாள். ஒன்றும் புரியவில்லை. கடவுளே சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல், ஏன் எந்த நாடும் எந்த நாட்டையும் எதிரியாகப் பார்க்காமல் போர் நிறுத்தம் வந்து மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உலக அமைதியும் மிகவும் அவசியமாகும். நாமும் வேண்டுவோம்.

Leave a comment
Upload