தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்.- 17 - ஆரூர் சுந்தரசேகர்.

ஒரே நாளில் நவக்கிரக கோயில்களைத் தரிசிக்கலாம் வாங்க..!!

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஒருவரின் வாழ்க்கையில் நவகிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளை(தோஷங்கள்) ஜோதிட ரீதியாகக் குறைத்து, நன்மைகளைப் பெறவும், சுப பலன்களை அதிகரிக்கவும், ஒன்பது கிரகங்களின் அருளைப் பெற்று, ஆரோக்கியம், செல்வம், மற்றும் வாழ்வில் மகிழ்ச்சி, மன அமைதி, மற்றும் தடைகளை நீக்கி வெற்றி பெறவும் இந்த நவக்கிரக வழிபாடு உதவுகிறது. நவக்கிரக தோஷ நிவர்த்திப் பரிகாரங்களுக்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் உள்ள நவகிரக கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

ஒரே நாளில் நவக்கிரக கோயில்களைத் தரிசனம்:

The heroes of the nine planets that bring good luck..!! - 17


கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் அமைந்துள்ள ஒன்பது நவகிரகக் கோயில்களையும் திட்டமிட்டுப் பயணித்தால் ஒரே நாளில் தரிசிக்க முடியும்.
கும்பகோணத்தில் தொடங்கி, திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), மற்றும் திருநள்ளாறு (சனி) எனச் செல்வது சிறந்தது. கோயில்கள் மதியம் 1:00 முதல் 4:00 வரை மூடப்பட்டிருக்கும். எனவே, காலை நேரத்தில் அதிகக் கோயில்களை முடித்து, மதிய இடைவேளைக்குப் பின் அடுத்தடுத்து தரிசிக்கலாம். ஒவ்வொரு கோயிலிலும் 30-45 நிமிடங்கள் மட்டுமே செலவிட முடியும் என்பதால், இது விரைவான பயணமாக இருக்கும்.
அதிகாலை (சுமார் 5:00 - 6:00 மணி) பயணத்தைத் தொடங்கி, இரவு 8:30 மணிக்குள் அனைத்துத் தலங்களையும் வரிசையாகத் தரிசனம் செய்து முடிக்கலாம். நவக்கிரக கோயிலை மாநகர பேருந்து மூலம் செல்வது சற்று கடினம். அதனால் சொந்த கார் அல்லது வாடகை கார் (Taxi) மூலம் செல்வது நேரத்தை மிச்சப்படுத்தும், பயண செலவு அதிகமாகும்.

சிறப்பு பேருந்து சேவை:
TNSTC (தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்) கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவக்கிரக ஸ்தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்க தற்போது சிறப்பு பேருந்து சேவைகளை இயக்கி வருகிறது. காலை 6 மணிக்குப் புறப்பட்டு இரவு 8 மணிக்குள் அனைத்து கோயில்களையும் தரிசித்துத் திரும்பும் இந்த பயணத்திற்கு நபர் ஒருவருக்குக் கட்டணம் சுமார் ரூ.750. இதில் காலை மற்றும் மதிய உணவு அடங்கும். விடுமுறை நாட்களில் கூட, கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஒரே நாளில் நவக்கிரக கோயில்களை முடிக்கும் வகையில் நேர அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் செல்வதற்கு ஏற்றவாறு குளிர்சாதன வசதியுடன் கூடிய சிறப்பு ஏ.சி பேருந்துகளும் விடப்பட்டுள்ளன. இந்த பேருந்தில் ஒரு நபருக்கு ரூ.1350 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையத்தளம் அல்லது மொபைல் புக்கிங் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும். நேரடியாகப் பேருந்தில் சென்று பயணச்சீட்டு பெறும் வசதி இல்லை.
முன்பதிவு மற்றும் தற்போதைய கட்டண விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ TNSTC இணையதளத்தைச் சரிபார்ப்பது நல்லது.

திங்களூர் (சந்திரன் ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஒன்பது நவக்கிரக கோயில்களில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது திங்களூர் (சந்திரன் ஸ்தலம்). கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கி.மீ தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்குச் சரியாகக் காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7.00 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

ஆலங்குடி (குரு ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

இரண்டாவதாகத் தரிசனம் செய்யவேண்டியது ஆலங்குடி (குரு ஸ்தலம்). ஆலங்குடியை அடைத்த 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். இதற்கு நடுவில் காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்துக் கொள்ளலாம்

திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

மூன்றாவதாகத் தரிசிக்கவிருப்பது திருநாகேஸ்வரம் (ராகு ஸ்தலம்). கும்பகோணத்திற்கு மிக அருகிலேயே 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில் 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாகச் செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

சூரியனார் கோயில் (சூரியன் ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

நான்காவதாகச் செல்லவிருப்பது சூரியனார் கோயில் (சூரியன் ஸ்தலம்). நாம் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோயிலை அடைந்து விடலாம். சூரியனார் கோயிலில் உள்ள சிவசூரியநாராயண கோயில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாகக் கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இங்குச் சூரிய பகவானைத் தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

கஞ்சனூர் (சுக்கிரன் ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஐந்தாவதாகத் தரிசிக்கவிருப்பது கஞ்சனூர் (சுக்கிரன் ஸ்தலம்). சூரியனார் கோயிலிலிருந்து கஞ்சனூர் 5 கி.மீ தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கு அக்னீஸ்வரர் ஸ்வாமி கோயிலுக்குச் சென்று விட முடியும். 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாகச் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஆறாவதாகத் தரிசிக்கவிருப்பது வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் ஸ்தலம்). நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கி.மீ தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

திருவெண்காடு (புதன் ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஏழாவதாகத் தரிசனம் செய்ய வேண்டியது திருவெண்காடு (புதன் ஸ்தலம்). வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்குக் கிளம்பினால் 16 கி.மீ அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிடத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்குக் கிளம்ப வேண்டும்.

கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

எட்டாவதாகத் தரிசனம் செய்யவிருப்பது கீழ்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்). திருவெண்காட்டிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 6.15 மணிக்கு அடைந்து விடலாம். ஜாதகத்தில் கேதுவினால் தோஷம் அடைந்த மக்கள், அதற்குப் பரிகாரம் செய்ய இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். 45 நிமிடத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்குத் திருநள்ளாறு புறப்படலாம்.

திருநள்ளாறு (சனி ஸ்தலம்):

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஒன்பதாவதாகத் திருநள்ளாறு (சனி ஸ்தலம்). நவக்கிரக ஸ்தலங்களின் வழிபாட்டில் இறுதியாகச் செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்குப் புறப்பட்டால் 40 கி.மீ தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகமாகச் சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோயிலில் சிவபெருமானையும், சனி பகவானையும் ஒரு மணி நேரம் தரிசிக்கலாம். 9.30 மணிக்குத் திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த பிறகு கும்பகோணத்திற்குத் திரும்பலாம்.

The heroes of the nine planets that bring good luck..!! - 17

ஒன்பது நவக்கிரக ஸ்தலங்களையும் மிகுந்த திருப்தியுடன் தரிசனம் செய்து, பூர்வஜென்ம புண்ணியத்தை அளிக்கும் நவகிரகங்களின் அருளைப் பெறலாம்.