தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 14 : “மருந்தோ மருந்து” – மோகன் ஜி

20260217210027998.jpg

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம். இந்த நீதிநூல் நல்லாதானார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.

சுக்கு,மிளகு,திப்பிலி எனும் மூன்று மருந்துவ குணமுடைய பொருட்களே திரிகடுகம் ஆகும். இந்த மூன்று மருந்துப் பொருட்களும் உடல்நலம் பேணுவது போல், திரிகடுகத்தின் ஒவ்வொரு செய்யுளும் இயம்பும் மூன்று கருத்துக்கள் மனநலம் காக்கும் மருந்தாய் மிளிர்கிறது.

ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்களும் ஒரு மையக் கருத்தை உணர்த்துவதாய் நேர்த்தியாய் புனையப் பட்டிருக்கும்.

ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால், தொன்மையான பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி ஆகிய மருந்துவப் பெயருடன் மூன்று நீதிநூல்கள் உள்ளன.

இதனால் அன்றைய சமுதாயத்தில் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தமருத்துவம் ஆகியவை பரவலாக விளங்கியிருந்ததும் உடல் உழைப்பாளிகளாய் மக்கள் இருந்ததால் உடல் ஆரோக்கியம் இயல்பாகவே இருந்திருப்பதும் தெளிவாகிறது.

கணவன் மனைவி உறவுநலம், அருளுடைமை, புலால் மறுத்தல், மெய்யுணர்தல் போன்ற பல வாழ்க்கை நலன்களை பேசும் இந்தநூல் நூறு

வெண்பாக்களைக் கொண்டது. அவற்றில் சில பாடல்களை விவாதிப்பதே இந்தப் பதிவின் நோக்கம். அங்குமிங்குமாய் சில பாடல்களை

தேர்ந்தெடுத்து தந்துள்ளேன்.

பாடல் 1

கல்லார்க் கினனாய் ஒழுகலும், காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்

அறியாமை யான்வருங் கேடு.

விளக்கம்:

கல்வியறிவு இல்லாதவருடன் உறவு கொண்டு நடப்பதும்,

மனதில் திண்மையுடனான அன்பு மிகுந்த மனைவியை அடித்தலும்,

சிற்றறிவுள்ள மதியீனரை தம் இல்லத்துள் சேர்த்தலும் ஆகிய இம்மூன்றும்..

தம்முடைய அறியாமையால் விளையும் கேடுகளாகும்.

பாடல் 2:

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன்வேறு கூறின் பொறையும் - அறவினையைக்

காராண்மை போல ஒழுகுதலும், - இம்மூன்றும்

ஊராண்மை என்னுஞ் செருக்கு.

விளக்கம்:

ஏனையோர் தன்னை நயந்து புகழும்போது நாணத்துடன் கூச்சம் கொள்ளுவதும், தம்மை விரும்பாதவர் தகுதியை தாழ்த்தி வேறுபட கூறும் நேரம் பொறுமை காத்தலும்,

மேகத்தின் ஆளுமையேபோல் பலன் எதிர்பாராது பிறர்க்கு உதவுதலும்,

ஆகிய இம்மூன்றும்

ஒருவருக்கு ஊர் வியக்கும் ஆண்மையாகிய செல்வமாகும்.

பாடல் 3:

உண்பொழுது நீராடி யுண்டலும், என்பெறினும்

பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்

சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம்மூன்றும்

தூஉயம் என்பார் தொழில்.

விளக்கம்:

உண்பதற்குரிய நேரம் வருங்கால், குளித்த பின்னரே உணவருந்துதலும்;

எவ்வளவு பெரும்பயன் கிடைப்பதாயினும்,ஒருபக்கமாய் சார்ந்து

பொய்சாட்சி சொல்லாமல் விலகுதலும்;

உணவின்றி வாடி, உடல்அழியும் நிலை வந்தாலும், தாம் கொண்ட நற்குணங்களை நீக்காது நிற்றலும்

ஆகிய இவை மூன்றும் தூயவர் வாழ்க்கை முறையாகும்.

பாடல் 4;

பெண்விழைந்து பின்செலினும், தன்செலவிற் குன்றாமை;

கண்விழைந்து கையுறினுங், காதல் பொருட்கின்மை;

மண்விழைந்து வாழ்நாண் மதியாமை; - இம்மூன்றும்

நுண்விழைந்த நூலவர் நோக்கு.

விளக்கம்

ஒரு பெண் தானேவிரும்பி பின்வந்தபோதும், அவளைச் சேராது தன்னடத்தை குன்றாமையும்;

தன் இடம்தேடிவந்து கைப்பட்டபோதும், அடுத்தவர் பொருளின் மேல் ஆசைக்கொள்ளாமையும்;

மண்ணாசை கொண்டு, வாழும்காலத்தை உயர்வென்று மதியாத மனவுறுதியும்

ஆகிய இவை மூன்றும் நுட்பமாய் நூல்களை ஆராய்ந்து தெளிந்தோரின் கருத்தாகும்.