தொடர்கள்
Other
மேற்காசியப் போரும் தமிழக அரசியலும் - பால்கி

20260220192741546.jpg

தேர்தலுக்கு நாள் குறிச்சாச்சு.

நிகழும் பரபாவ ஆண்டு சுப யோகம் சுப தினம் கூடிய சித்திர மாதம் 10ஆம் நாள்.

அதாவது, ஆங்கில வருடம் 2026, ஏப்ரல் 23 வியாழக்கிழமை

முஹுர்த்த நேரம்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை.

தகுதியான பந்து மித்திரர்களுடன் திரளாக வந்து தேர்தலை நங்கு நடத்தித் தருமாறு ஞானேஷ் குமார் கேட்டுக் கொண்டார். அரசியல் நிர்ணய சட்டப்படி அவர் தான் முன்னின்று நடத்துகிறார்.

இவ்வளவு பீடிகை எதற்கு?

சட்டு புட்டுனு மேட்டருக்கு வான்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது.

பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மேல குண்டு போட்டங்களா? ஆமாம் அதுக்கு என்ன இப்ப?

இல்ல, அதுக்கு ரெண்டு நாளுக்கு முன்னத் தான் பெஞ்சமினோட கட்டி அணைச்சிகிட்டு பேசிட்டு வந்தாரு நம்ம மோதி.

ஏர் இண்டியா 1 டில்லி வந்து சேர்ந்து 24 மணி நேரம் கூட ஆவல….போர் ஆரம்பமாயிடிச்சி.

சரி அதுக்கு என்ன? இவரு போயி…

அதெப்பிடி?

அன்னிக்கி கூட பெஞ்சமின்,எங்களுக்கு மோதியோட சப்போர்ட் ரொம்ப இருக்குன்னு சொல்லலியா?.

போர் தீவிரமாக தீவிரமாக, ஈரான் தனதருகே இருக்கும் 33 – 39 கி.மீ அகலமே உள்ள வடக்கே ஈரானுக்கும் தெற்கே ஓமான், அரபு ஐக்கிய அமீரக நாடுகளுக்கும் பொதுவாக உள்ள கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. இந்த நீரிணை மூலமாகத்தான் உலகின் 35% கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் கப்பல்கள் மூலமாக எடுத்துச் செல்கின்றன. இந்தியாவிற்கு இந்த ரூட் மூலம் தான் 40% எண்ணெய் வருகிறது. முக்கியமாக கேஸ் இங்கிருந்து தான்.

இந்த போரில் தனது முக்கிய தலைவர்களை இழந்த ஈரான், எதிரி நாட்டு கப்பல்களை தாக்கத் தொடங்கின.

இதனால் உலகெங்கும் எண்ணெய் விலை 100 டாலருக்கு மேல். விலையேற்றம் ஒரு புறமென்றாலும் இந்த நீரிணைப்பாதை நெருக்கப் பட்டதைத் தொடர்ந்து, நமது நாட்டில் சிலிண்டர் கிடைப்பது அரிதாகும், அரிதாகி விட்டது, இனி கிடைப்பது கஷ்டம் என எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழங்கினர். சோஷியல் மீடியாக்கள் அதைப்பற்றிக் கொண்டு எரித்தன. நாடு அந்த செய்தியில் மாட்டிக்கொண்டது.

கேஸ் வினியகஸ்தர் கடைகள் முன் கிமீகளில் லைன் நிற்கிறார்கள் என்று செய்திகள் படங்களுடன் பரவியது. அப்புறம் தான் தெரிந்தது அந்த படம் 2013ல் ஏற்பட்ட கேஸ் தட்டுப்பாடு சமயத்தில் எடுத்தது எனத் தெரிந்து அதை விலக்கிக் கொண்டனர்.

மத்திய அரசு நாடாளு மன்றத்தில் பெட்ரொலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நிலமை கட்டுக்குள் தான் இருக்கு என்று கூறியும் எதிர் கட்சியினரின் புலம்பல்களுக்குத் தான் நாடு அசைந்தது.

20260220192823130.jpg

[செயற்கைகோள் மூலம் பிடித்த ஹோர்முஸ் நீரிணை]

கூடவே, ஹோர்முஸ் நீரிணை வழியாக நமது கப்பல்கள் இந்த போர் நெரிசலில் அவ்வளோ தான் என்றும் இதற்கு மோதியின் இஸ்ரேல் தோஸ்தியும் ஈரானின் கமேனெயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது போன்ற கையாலாகாத்தனமான வெளி நாட்டுக் கொள்கை தான் என்று நிமிட்ட்டுக்கு நிமிட் எதிர்கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே நாளொரு கப்பல் என அந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் எண்ணெயோடு இந்தியா வந்தடைந்த வண்ணம் இருந்தன. ஈரானோ இந்தியாவின் எப்போதும் உதவும் கரங்களை நினைவில் கொண்டு இந்திய கப்பல்களைத் தாக்க மாட்டோம் என்று வேறு கூறிவிட்டனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஈரானோடு பேசிய வண்ணமிர்ந்தார். நமது நாட்டில் இருக்கும் ஈரானின் தூதுவரும் இணக்கமாகவே பேசி வந்தார்.

மும்பையில் வீடுகளுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சேலத்து பங்க் நண்பர் வேறொரு செய்தி சொன்னார்.

அதாவது, பெட்ரோல் டீசல் கொள்முதலில், எண்ணெய் கம்பெனிகள் எப்போதும் கொடுக்கும் 3 நாள் கிரெடிட் பீரியடை நீக்கி விட்டு இந்த கையில் பணத்தைக்கொடு டாங்கர் நிறப்பிக்கொண்டு போங்கள் என்ற புதிய ரூலைத் தாற்காலிகமாகப் போட, பங்க் உரிமையாளர்கள் பணம் புரட்டுவதில் திகைத்துள்ளார்கள். நிலமைக்கு ஏற்ப எண்ணெய் கம்பெனிகள் நடந்து கொண்டாலும், இதில் ஒரு புதிய சிக்கலை உருவாக்க தமிழக ஆளும் கட்சி பங்க் நடத்துனர்கள், இதை ஒரு சாக்காக வைத்து மத்திய அரசுக்கு கெட்ட பெயரைக் கொண்டு வர, இது இந்த தேர்தலில் ஒரு பேசு பொருளாக்கிட முனைகிறார்கள். பெட்ரோல் டீசல் இல்லை என்று போர்ட் போட்டுவிட்டால் மக்கள் பீதியடைவார்கள். கேட்டால் தட்டுப்பாடு. அதையும் மீறி உலக நடப்பு தெரிந்தவர் கேட்டால், எங்களுக்கு (தமிழ் நாட்டுக்கு ) மத்திய அரசு எண்ணெய் கொடுப்பதில்லை. வஞ்சிக்கிறது என்று ஒரு பஞ்சப்பாட்டை பாடலாம் என்ற ஸ்கிட் தயாராகி விட்டது.

உலக அளவில், இந்த போரினால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடோ, அனாவசிய விலையுர்வோ நமக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் என்று ட்ரம்ப் இந்தியாவை ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிக்கொள்ள இசைவும் அளித்துள்ளார் என்பது உப செய்தி.

இப்போது புரிந்ததா? மேற்காசியப் போருக்கும் தமிழக அரசியலும் என்ன சம்பந்தம் என்று.

90 களில் ஏம்மா கத்திரிக்கா வெலை கூடிப் போச்சின்னு கேட்டா, கறிகாய் விற்பவள்,” சாமீ! ஈரான் ஈராக் போர் தான் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.