
ஒரு வண்ணான் சொன்னான் என்பதற்காக தன் மனைவி சீதையை, அதுவும், ஒரு கர்பிணிப் பெண்னை, காட்டிற்கு அனுப்பியது நியாயமா?
பதில் : வால்மீகி ராமாயணத்தில் வண்ணான் சொன்னான் என்பதெல்லாம் இல்லை. பத்ரன் என்ற ஒற்றன் ராமனிடம் வந்து நாட்டில் சீதையைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கூறுகிறான்.
அதன்படி, ராமன், சீதையை காட்டிலிருக்கும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்புகிறான். சுமந்திரன் தேரோட்ட லக்ஷ்மணனுடன் சீதை அனுப்பி வைக்கப்படுகிறாள்.
லக்ஷ்மணனும் சுமந்திரனும் திரும்புகையில், லக்ஷ்மணன், “யாரோ சொன்னாரென்று கற்புக்கரசி சீதையை காட்டிற்கு அனுப்பலாமா” என்று வினவுகிறான்,”
முன்வினை
அதற்கு சுமந்திரன், “இது முன்னமே தெரியும். முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடக்கிறது. தேவர்கள் கை ஓங்கியிருக்கிறது. அசுரர்கள், பிருகு முனிவரின் மனைவியிடம் தஞ்சம் புகுந்தனர். அவளும் அபயம் அளித்தாள். அசுரர்களை அழிக்க நினைத்த நாராயணன் பிருகு முனிவரின் மனைவியிடம் , “அவர்கள் தீய சக்தி. அந்த அசுரர்களை அடைக்கலம் அளிப்பது தவறு. அவர்களை வெளியே விடுங்கள். அவர்களை அழிக்கணும். அவர்களுக்கு துணை போவது தவறு,” என்று கூறுகிறார். இருந்தும், முனிவரின் மனைவி மறுக்கிறாள்.
நாராயணான், நன்மையை நிலை நாட்டணும், தீமையை அழிக்கணும் என்பதற்காக இடையில் வந்த முனிவரின் மனைவியைக் கொன்று அதன் பின்னர் அவளால் தஞ்சம் அளிக்கப்பட்ட அசுரர்களையும் கொல்கிறார்.
இதைக் கண்ணுற்ற பிருகு முனிவர், “நீ! எப்படி என் மனிவியைக் கொன்று என்னை என் மனைவியிடமிருந்து பிரித்தாயோ, அதே போலே, நீயும் பூமியில் பிறந்து, மனைவியைப் பிரிந்து ஆயிரக்கணக்கான வருடங்கள் கஷ்டப்படணும்,” என்று சாபமிடுகிறார். ரிஷியின் சாபம் நாராயணனை ஒன்றும் செய்யாது தான். எனினும், ரிஷியின் வாக்கு பொய்க்கக்கூடாது என்று சாபத்தை ஏற்றுக்கொண்டார்.
இதைக்கேட்ட முனிவர் பயந்து விட்டார். “ஐயோ பகவானே, நீங்கள் அசுரரைக் கொன்று நல்லதுதான் செய்தீர்கள். என்னை மன்னிக்கவும். என் வாக்கு பொய்த்தாலும் பரவாயில்லை. அதற்காக நீ பூமியில் பிறந்து கஷ்டப்படத்தேவையில்லை..
ராமன் அதற்கு, ரிஷியே! ரிஷிகள் சொல்வதுதான் சாஸ்த்திரம் என்பதாகும். [வால்மீகி ரிஷி சொன்னதினாலேத்தானே ராமாயணத்தை நம்புகின்றோம். அதே போல வ்யாச மகரிஷி சொன்னதினால் தானே மகாபாரதம் நம்பப்படுகிறது].இப்ப ரிஷி சொன்ன வாக்கு பொய்த்தது என்றால், எல்லா ரிஷிகளுக்கும் இழுக்கல்லவா?
இதை ஏற்றுக்கொண்டு, நான் உலகுக்கு ஒரு தத்துவத்தை உணர்த்தப்போகிறேன். அதுதான் பர தத்துவம். [அதனால் தான் ராமாயணத்தை வேத சாரம் ராமாயணம் என்கிறோம்]
வேதம் சொல்வது, “ஜீவாத்மா பகவானுக்கு அவன் இஷ்டப்படி இருக்கணும். அதாவது, பர தந்திரனாக இருக்கணும். உபநிஷத்தின் படி, ஜீவாத்மா பெருமாளுக்கு சரீரம் மாதிரி. நாம் என்ன சொல்கிறோமோ அதன் படித் தானே உடம்பு இருக்கு. அது போல பகவானின் ஆணைப்படி தானே அவனது சரீரமான ஜீவாத்மாவும் இருக்கவேண்டும்.
இதற்கு சரியான மேற்கோள், அம்மி. அதில் உப்போ, புளிப்போ, இனிப்போ, கசப்போ, காரமோ எது போட்டு அரைத்தாலும், முகம் கோணாது அரைக்கிறதே. அதுபோல பகவான் இன்பமோ, துன்பமோ, எது தந்தாலும் அதை பகவானின் ஆணை என்று பக்தன் பூமியில் வாழவேண்டும். இதை உணர்த்தி விடுகிறேன் என்றான் ராமன்.
அதனால் இங்கு ராமன் பரமாத்மா, சீதை ஜீவாத்மா. சீதை பகவானான ராமன் என்ன முடிவு எடுக்கிறானோ!, அதன் படி நடப்பது என்று தீர்மானிக்கிறாள்.
ஆக, முன்பு சொன்ன ஒற்றனின் கூற்று செய்தியை சீதையும் அறிகிறாள். தன்னால் தானே ராமனுக்கு இழுக்கு. நிலைமை இப்படியிருக்க, ராமன் இதை சீதையிடம் எப்படி சொல்வான்? சொல்வானோ? சொல்லமுடியாது.
ஆதலால் பரதந்திரனான சீதை தாமே ராமனிடம் இது பற்றி பேசி விடுவது என்று தீர்மானிக்கிறாள். ஆதலால் ராமனின் முக ஜாடை குறிப்பறிந்து நாமே அதை முன்வந்து செய்தால் என்ன என்று நினைக்கிறாள்.
இந்த சூழ்நிலையில், ராமன் சீதை நோக்கி, சீதே! கர்பமுற்றிருக்கிறாய். உனது ஆசை என்ன என்று கேட்கிறான்.
உடனே, சீதை இந்த நிலையைப் பயன்படுத்தி, தனக்கு ரிஷிகளின் மத்தியில் இருந்து கொண்டு அவர்கள் எழுப்பும் வேத மந்திரங்களைக் கேட்க்க வேண்டும் என்று ஆசை, மேலும் எனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளும் அந்த வேத கோஷ சூழலில் வளருவதையே விரும்புகிறேன் என்று கூறி விடுகிறாள்.
ராமனைப் பிரிந்து சீதை உயிர் வாழ்வாளா என்ன? ஏனெனில்,, ராமனின் வாரிசுகள், இரட்டைக்குழந்தைகள் அவளது வயிற்றில் வளருகின்றன. அவரது திருவுள்ளப்படி, குழந்தைகளை வளர்ப்பதுதான் சரி. உடலை மாய்த்துக்கொள்ளல் சரியல்ல, என்று நினைக்கிறாள். அதற்காக வாழ்வேன் என்று வாழ்கிறாள்.
ராமாயணத்தை வால்மீகி எழுத வேண்டும் என்று ராமன் நினைத்ததால் கர்பிணி சீதையை அவரது ஆசிரமத்திற்கு அனுப்புவதன் மூலம் அந்த விஷயத்தை நினைவூட்டுகிறார். அவரது குழந்தைகளை அங்கு வளர்ப்பது மூலம் ராமாயணம் உருவாகும். பிறக்கும் வாரிசுகளுக்கும் ராமாயணம் உபதேசிக்கப்படணும், பின்னர் அவர்கள் மூலமே ராமரிடமே அவனின் சரித்திரம் சொல்லப்படணும் என்பது அவனது சித்தம்.
சீதையும் குழந்தைகளை ராமனிடம் ஒப்படைக்கும் வரை உயிருடன் இருந்தாள்.
பின்னால், சீதை ஏன் ராமனை அடையவில்லை என்றால், சீதை பெருமாளுக்கு உரியவள். என்று, எல்லோரும் அவளை இன்னொருத்தருடன் இணைத்துப் பேசினார்களோ அவள் வாழமாட்டாள்.
சீதையை காட்டில் விட்டு விட்டு வந்த லக்ஷ்மணன் ராமன் அழுவதைக்கண்டு, “அண்ணா!! நீ தானே சீதையை காட்டுக்கு அனுப்பினாய்! பின் ஏன் அழுகிறய்? என்று கேட்கிறான்.
அதற்கு ராமன்,” லக்ஷ்மணா! சீதையை காட்டுக்கு அனுப்பியவன் ராஜாராமன். இங்கு அழுபவன் சீதாராமன், என்றான்.

Leave a comment
Upload