தொடர்கள்
கதை
ஒரு Cr(i)eme ஸ்டோரி - பா அய்யாசாமி

2026041606383622.jpeg


யப்பா ஸ்ட்ராங்கா டீ ஒன்னு போடுப்பா.. என வந்தமர்ந்தார் Si முருகன்.

அப்புறம் என்ன விசேஷம் ஊருக்குள்ளே?! என கடைக்காரரிடம் கேட்டதற்கு

எல்லாம் வழக்கம் போலத்தான் என்றவர் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார்.

கடையருகே வந்த பிச்சைக்காரர், டீ கொடு எனக்கும் என்றார்.

என்ன கொடுத்து வச்ச மாதிரியில்லே கேக்குறே? எடுக்கிறது பிச்சை முறைப்ப பாரு அவனுக்கு ! என எகிறினார்.

திட்டாதைய்யா.. கொடு..ஒன்றும் குறைஞ்சிட மாட்டே நீ என்றார் SI.

அவனைப் பார்த்தீங்களா?! உழைச்சு சாப்பிடலாமில்லே என்றார் டீக்கடை

அதானே! என்றார் Si

எதற்கு உழைக்கணும்? கேட்டார் பிச்சைக்காரர்

அவனது கேள்வியையும் ஆளையும் பார்த்தால் சாதாரண பிச்சைக்காரன் போல தெரியலையே என ஆர்வமானார் Si.

சாப்பிடத்தான், சேமிக்கத்தான் என்றார் si அவனிடம்

நான் ஏன் சேமிக்க, எனக்கு யார் இருக்கா?! என்றார் பிச்சைக்காரர்

சாப்பாடு?

அதுதான் பிச்சையிலே கிடைச்சுடுதே என்றார்.

ஐயா அவன் கூட பேசாதீங்க,நம்ம கையிலேயும் ஓட்டை கொடுத்துடுவான் போல என்றார் டீக்கடை.

டீயைக்குடித்தபடி நீ இத்தனை வருசமாக கடையைப் போட்டு உழைக்கிறல்ல,
ஏன் நீ பிரதமர் ஆகலை ?! என்றதும் பிச்சைக்காரனுக்கு கொழுப்பை பார்த்தீங்களா?! என்ற போது,

ஆமாம் நான் பிச்சைக்காரன் நீங்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள், நீ வாங்குகிற டீ பொடியிலே கலப்படம் செய்யறே, இதோ இவன் வீடுவீடாய் திருடிப்பிழைக்கிறான், இவர் போலீசு
யார் யாருக்கோ கீழ்படியனும், இந்தப் பொழைப்பிற்கு...

சரியாகத்தான் சொல்றான் இவன் என்ற Si சூடா வடை ஒன்றைக் கொடுய்யா, அவனுக்கும் என்றார்.

சூடான வடையை Si க்கும், பழைய ஆறிப்போன சமோசாவை பிச்சைக்காரனிடம் கொடுத்தார்..

பார்த்தீங்களா ?


"நாய்க்கு கூட அதுக்கு என்ன புடிக்குதோ அதைப்போடுவானுங்க..ஆனா எங்களுக்கு எது எவருக்கும் தேவைப்படாதோ அதைப் போடுவானுங்க"

ஏன் நாங்களும் மனுச சாதிதானே,நீங்க நல்லா இருக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு, எங்களுக்கு கிடைக்கலை. அவ்வளவுதான் வித்தியாசம் என்றார் பிச்சைக்காரர்.

சட்டென எழுந்த si முருகன் எதிரில் நின்ற திருடனின் சட்டையைப் பிடித்தார்.

போலீஸ் ஜீப் ஒன்று வர அதில் அவனை ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் நோக்கிப்பறந்தது.

நகர்பகுதியில் நடந்த தொடர் திருட்டுகளின் விசாரனைக்காகவும் அவர்களைப் பிடிக்கவுமே தகவல் கிடைத்து முருகன் Si நகர் பகுதிக்கு வந்தியிருந்தார்.

யோவ் பிச்சை ! பொதுவாக நீங்கதான் எந்த வீடு பூட்டிக் கிடக்குது,கோலம் போடாத வீடு என தகவலைச் திருடர்களுக்குச் சொல்லும் இன்பார்மர்னு சொல்லுவாங்க, நீ என்னய்யா அவனை போலீசுகிட்டே மாட்டி விட்டுட்டே என்றார் டீக்கடை.

நீங்க ராத்திரியானால் கடையை கட்டிகிட்டு கிளம்பிடுவீங்க,ராத்திரியிலே நடக்கின்ற எல்லா கருமாந்தித்தையும் நாங்கள்தான் பார்க்க வேண்டி கிடக்கு என்றவரை, நீ பார்த்து பத்திரமாக இருந்துக்கோ என அனுப்பிவைத்தார் டீக்கடைக்காரர்.

" நான் இந்த நகர் மக்கள்கிட்டே பசிக்குத்தான் பிச்சையெடுக்கிறேன். என்றைக்காவது உங்கள் சொத்திலேயோ, சோத்திலேயோ கை வச்சிருக்கேனா, உங்க சாப்பாடை சாப்பிட்டிருக்கேன்,
எதோ என்னால் முடிந்தது என்று சொல்லி நகர்ந்தார் பிச்சைக்காரர்.


ஏய்! உன் கூட்டாளிகள் யாரு?! மொத்தம் எத்தனை பேரு நீங்க, எங்கெல்லாம் கை வச்சீங்க, ஒழுங்கு மரியாதையா சொல்லிடு, வெளு வெளுனு வெளுத்ததான்னு சொல்லுவேன்னா இன்றைக்கு முழுவதும்
உனக்கு உதைதான் என மிரட்டி அவனை ஜட்டியோடு நிலையத்தின் லாக் அப்பில் அடைத்தார் Si முருகன்.

"எல்லோரும் அடிச்சு உதைச்சு கேட்டும் ஒரு பதிலும் வரலை" என்றா் முருகன் ஆய்வாளரிடம்.

ஒரே ஏரியாவில், யாரும் வீட்டிலில்லை என தெரிந்தே மூன்று வீடுகளில் ஒரே நாளில் 7,16,22 பவுன் நகை,ரொக்கம் ஐம்பாதாயிரம் அடிச்சிருக்கான், இதிலே நம்ம Dspக்கு உறவுக்கார வீடு ஒன்று, அவனிடம் ரெகவர் செய்யாமல் விடாதீங்க என்றவர் அவர் பங்கிற்கு அவனுக்கு நான்கு அரை விட்டுப் போனார்.

மதிய வேளையில் காவல் நிலையத்திற்கு வந்த ஒருவர்

"சார்,ஊரெல்லாம் திருட்டு பயமாக இருக்கு,எங்க ஊரிலே விசேஷம் வச்சிருக்கோம்,
நாங்க குடும்பத்தோட வெளியே போக வேண்டிருக்கு, அதனால் எங்க வீட்டிற்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பைக் கொடுங்க என்று மனுவாக எழுதிக் கொடுத்தார்.

"குட்"இத மாதிரி எத்தனை பேரு சொல்றீங்க, திருடு நடந்தப்பின்னே எங்களை பாடாய் படுத்திடவேண்டியது, இதேபோல் முன்னெச்சரிக்கையாக இருந்தால் எல்லோருக்கும் நல்லது என்று சொல்லி கடிதத்தை வாங்கிய முருகன்,

நடராஜன்,
வங்கி ஓய்வு,
நான்காம் தெரு
ஜெயா நகர்


என்று படித்தவர், ஓகே அருகாமையில் உள்ள லொகேசன் ஏதாவது சொல்லுங்க என்றதும்
நகரிலே போஸ்டு ஆபீஸ் இருக்கும் சார் அதன் பக்கத்துவீடு "பத்திரமாகப் பார்த்துகோங்க சார்"
என்றார்.

நீங்க ஊருக்குப் போங்க நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்த முருகன்,

இவர்களுக்கு வேணும்யா...நகை இருந்தால் வங்கி லாக்கர்லே கொண்டுபோய் வைக்கவேண்டியது
தானே, நம்மகிட்ட இருக்கின்ற ஆட்களை இவன் வீட்டிற்கு காவல்போடணுமாம்,
மிச்ச வேலையை எவன் பார்க்கிறது என சப்தமிட்டடது வரை லாக்கப்பில் இருந்த திருடனுக்கும் காதில் விழுந்தது.

டீ கொண்டு வந்த பையனிடம், டீயை லாக்கப்பில் அவனுக்கும் கொடு என்றார் si.

கண்காணிப்பாளர் அலுவலகம்.

ஆய்வாளர்,
Si முருகன் நான்கு கான்ஸ்டபிள் அனைவரும் சூழ்ந்திருக்க,

எப்படியா இந்த திருடர்களை கேட்ச் பண்ணினீங்க என ஆர்வமாய் கேட்டார் கண்காணிப்பாளர்.

பிச்சைக்காரன் ஒருவன் அடையாளம் காட்டியதில் ஒருத்தனை முதலில் பிடித்துவிட்டோம்,
ஆனால் மொத்தமா அந்தக் குரூப்பை பிடிக்க, அவனை அடித்து விசாரித்தும் ஒன்றும் சொல்லாமல்
போனதும்,வேற பிளான் ஒன்றினை போட்டோம் சார் என்றார் ஆய்வாளர்.

தனது வீட்டிற்கு பாதுகாப்புக் கேட்டு வந்தவரும்,டீக்கடைப் பையனும் நம்ம si முருகனின் ஏற்பாடு சார் என்றதும் இன்டரஸ்டிங் என்றார் கண்காணிப்பாளர்.

டீ பையன்கிட்டே கைதி போன் கேட்டால் கொடு திரும்ப டீ கிளாஸ் எடுக்க வரும் போது வாங்கிகிட்டுப்
போயிடு என சொல்லித்தான் அனுப்பினோம். திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது.

பூட்டிய வீட்டிற்குள் காத்திருந்து திருட வரும்போது கும்பலை மொத்தமாகப் பிடித்தோம் சார் என்றார் Si.

வெல்டன் என்றவர் ரெகவர் செய்ததைக் காட்டி நாளிதழில் செய்தி வரும்படி செய்திடுங்கள், தகவல் கொடுத்தவருக்கு ஏதாவது சன்மானம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.