தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 5 - ஜி.ஏ. பிரபா

20260410232557686.jpeg

5) ஏகாக்ஷரி

எகாரரூபா சைகாக்ஷர் ஏகாநேகாக்ஷராக்ருதி I

ஏதத் ததித் யநிர்தேச்யா சைகானந்த சிதாக்ருதி II

​அம்பிகை ஏகாந்த ரூபமாய் இருப்பவள்.

​பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் இரண்டாவது அக்ஷரம் ”ஏ”. ஸ்ரீவித்யைக்கு பிராணரூபமாய்ப் பரப்பிரும்மத்தைக் குறிக்கிறது. அந்தப் பிரணவ ஸ்வரூபிணியாய் விளங்குகிறாள் அம்பிகை.

நமக்குள் பிரணவ சக்தியாய் விளங்குபவளும் அவள்தான். ஜெகன்மாதாவான அவளே பல அக்ஷரங்களின் தொகுப்பாய் விளங்குகிறாள்.

​சொல்லும் பொருளும் என விளங்கும் தத்வ ரூபிணி அவள்தான். ஓசை வடிவமாக இருக்கும் அவள்தான்,பல அக்ஷரங்களின் வடிவாகவும் இருக்கிறாள். நாராயணி என்றாலும், நாராயணன் என்றாலும் ஒரே பரம்பொருள்.

​இதையே ஏகோ நைக ஸவ க கிம்

​யத்தத் பதமனுத்தமம் - - - - -என்கிறது விஷ்ணு சஹஸ்ரநாமம்.

​இதுதான் அது, அதுதான் இது என்று குறிப்பிட்டுக் கூற முடியாதவள் அம்பிகை. ஆனந்தமும், அறிவும் ஒன்றேயாகி விளங்கும் ரூபம் அவள். வாக்கால் விளக்கப் பட முடியாது. ஆனால் வாக்கு எதனால் விளக்கப் பெறுமோ அதுவே பிரம்மம் என்கிறது உபநிஷத். அந்தப் பிரம்மமாக இருப்பவள் நாராயணி.

​இந்தப் பிரபஞ்சம் அக்ஷர வடிவமானது. ஸ்ரீசக்கரமே அதன் வடிவம். அந்த ஸ்ரீசக்கரமே அம்பிகை இருக்குமிடம். ஸ்ரீபுர நாயகி என்றுதான் லலிதா சாஸ்ரனாமத்தில் குறிக்கப் படுகிறாள் தேவி. அண்டவெளிக்கு முடிவும், ஆரம்பமும் கிடையாது.

​சாதாரண மனித அறிவால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

மகரிஷிகளும், முனிவர்களும் பலகோடி ஆண்டுகள் தவமிருந்தும் கண்டறியாத பிரம்ம ரூபம் அம்பிகை.

​இந்த ஸ்ரீசக்கரம் ஸ்ரீ லலிதாம்பிகையின் சாம்ராஜ்ஜியம். இதில் அனைத்துக் கடவுள்களுக்கும் இடம் உண்டு. எனவேதான் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்வதால் அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.

​சரஸ்வதியும், மகாலக்ஷ்மியும் சாமரம் வீசுகின்றனர். நவகிரகங்கள், இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் அன்னையை வலம் வருகின்றார்கள். எனவே லலிதா பரமேஸ்வரியை வழிபடுபவர்களுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. சகல தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

​பதினாறு சமஸ்கிருத உயிர் எழுத்துக்கள் அக்ஷரம் என்று அழைக்கப் படுகிறது. அவை ஈசனின் தம்ருகத்திலிருந்து வெளிப்பட்டது என்றும் தேவியின் தனித்துவமான அம்சங்களை வெளிப்படுத்தும் வகையின் அமைந்துள்ளது என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.

​பெரிய யாகங்கள், ஹோமங்களின் போது முனிவர்களால் ஆழ்ந்து இந்த அக்ஷரங்கள் தியானிக்கப் பட்டன. ஒவ்வொரு அக்ஷரமும் ஒரு தேவியின் வடிவாக கோவில் கோபுரங்களில் செதுக்கப் பட்டன.

​ஸ்ரீ ஆகர்ஷிணி தேவி, ஸ்ரீ ஐஸ்வர்யாத்மிகா தேவி, ஸ்ரீ அஜாமுகி தேவி, ஸ்ரீ அக்ஷர தேவி, ஸ்ரீ அஞ்சனா தேவி, ஸ்ரீ ஈஷினி தேவி, ஸ்ரீ ஏலா தேவி, ஸ்ரீ லதும்பிரா தேவி, ஸ்ரீ லுஞ்சிகா தேவி, ஸ்ரீ ஓம், ஸ்ரீ ஒவ்ஷதா தேவி, ஸ்ரீ ருகார தேவி, ஸ்ரீ ருத்திதாயீ, ஸ்ரீ உக்ரா தேவி, ஸ்ரீ ஊர்த்வகேஷி, ஸ்ரீ யேகபதா தேவி என்பவை தேவியின் அக்ஷர வடிவங்கள்.

​அனைத்தும் பரம்பொருளாய் விளங்கும் அந்தச் சக்தியின் வடிவங்கள்தான். எனவேதான் ஒரே பரம்பொருளான அம்பிகையை லலிதா திரிபுர சுந்தரியாகப் பாவித்து வணங்கு என்று மகான்கள் லலிதா சஹஸ்ரநாமத்தையும், லலிதா த்ரிசதியையும் சொல்லச் சொல்கிறார்கள்.

​கீதையில் அர்ஜுனன் கேட்கிறான். பிரம்மம் என்றால் என்ன என்று. அதற்கு பகவான், பிரம்மம் மேலானது, அழியாதது, அதன் இன்றியமையாதத் தன்மை அத்யாத்மா என்று அழைக்கப் படுகிறது. அதாவது சுய அறிவு. அந்த அறிவு கொண்டே நாம் அனைத்தையும் அறிய முடியும். ஆனால் நமக்குள் அந்த அறிவாகவே இருப்பவள் அம்பிகை. நல்லது எது?அல்லது எது என்று உணர்த்துபவள் அவளே.

​அவள் கருணையால்தான் நம்மால் எது நல்லது, எது தீயது என்று அறிய முடியும். நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே அம்பிகையைப் பற்றி அறியவும், துதிக்கவும் முடிகிறது. அம்பிகை ஒலி வடிவமாக இருப்பதால் அவளை மகிழ்விக்க தோத்திரங்கள், மந்திரங்கள் உதவுகின்றன.

​ஸ்ரீலலிதா, சௌந்தர்யா லஹரி, அபிராமி அந்தாதி போன்றவை அக்ஷர வடிவில் அம்பிகையை துதிக்க உதவுபவை. இந்த உலகையே படைத்து, காத்து, அழித்து வரும் அம்பிகை மகிழ்வது இந்த தோத்திரங்களால்தான்.