
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயில் மாசி மாத தேர்த்திருவிழாவின் போது, வெள்ளை மரக் குதிரை வாகனத்தில் அரங்கநாதர் சுவாமி பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்வு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த வாகனத்தை அளித்த பிரிட்டிஷ் இஞ்ஜினியர் ஜே.எல்.எல். மோராண்ட் என்பவர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கோவை-மேட்டுப்பாளையம் இரயில் பாதை பணிக்காகக் கோயிலை இடிக்க முயன்றபோது, அவர் கனவில் பெருமாள் சாட்டையடி கொடுத்து உணர்த்தியதால், தன் தவற்றை உணர்ந்து வெள்ளை மரக் குதிரையைக் காணிக்கையாக வழங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, ஆங்கிலேயர் காலத்திலும் உள்ளூர் மக்களின் வழிபாட்டு முறைகள் மதிக்கப்பட்டதை உணர்த்துகிறது.

கோயிலை இடிக்கத் தீர்மானித்த இஞ்சினியர்:
இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்,
கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் இரயில்வே தண்டவாளப் பாதை பணியை மேற்பார்வை செய்தவர் ஒரு பிரிட்டிஷ் இஞ்ஜினியர் ஜே.எல்.எல். மோராண்ட் என்பவர். இவர் மிகவும் கட்டுப்பாடும் திட்டமிடலும் கொண்ட மனிதர்.
தன் வரைபடத்தில் இருந்த திட்டம் எந்தத் தடையும் இல்லாமல் நிறைவேற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.
அந்த இஞ்ஜினியர் தயாரித்த திட்டத்தின் படி இரயில்வே தண்டவாளம் செல்ல வேண்டிய பாதையில் ஒரு பழமையான பெருமாள் (காரமடை அரங்கநாதர்)கோயில் இருந்தது.
அந்த கோயில் அங்கிருந்த மக்களின் பக்திக்கு அடையாளமாக இருந்தது. அவர் அந்த கோயிலை இடிக்க உத்தரவு இட்டார். இந்த செய்தியானது ஊர்மக்களிடம் பரவியதும் அவர்களுக்கு மன வருத்தத்தைத் தந்தது.

இஞ்ஜினியர் கனவில் நடந்த அதிசயம்:
ஊர் மக்களின் பிரார்த்தனைக்குப் பதிலளிக்கும் விதமாக, அன்று இரவு அந்த பிரிட்டிஷ் இஞ்சினியர் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான கனவு கண்டார். அந்த கனவில் வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கும் ஒரு குதிரை மீது அமர்ந்திருந்த அரங்கநாதப் பெருமாள் அவருக்குத் தோன்றி, இரயில் பாதையின் திசையை மாற்றுமாறு அவருக்கு அறிவுறுத்தி தன் கையில் இருந்த சாட்டையால் இரண்டு அடிகள் அடித்ததை இஞ்சினியர் தன் கனவில் உணர்ந்தார்.
அந்த சாட்டை அடியின் அதிர்ச்சியில் அவர் திடீரென விழித்துக் கொண்டார். தான் கண்ட கனவு சாதாரண கனவு அல்ல என்று அவர் உள்ளத்தில் உணர்ந்தார். உடனே, அவருடைய முந்தைய இரயில் பாதைத் திட்டத்தை முழுவதுமாக மாற்றி, கோயிலைத் தவிர்த்து வேறு வழியில் அமைக்கச் செய்தார்.
பெருமாளுக்கு அளித்த வெள்ளை மரக் குதிரை வாகனம்:

இந்த அதிசய அனுபவத்துக்குப் பிறகு அந்த பிரிட்டிஷ் இஞ்ஜினியர் பெருமாளின் மீது அதீத பக்தி கொண்டு, அந்த கோயிலுக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு வெள்ளைக் குதிரையைக் காணிக்கையாக வழங்கினார். இந்த வெள்ளைக் குதிரை பெருமாளின் கனவில் தோன்றிய உருவத்தை நினைவுபடுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்றுவரை, அரங்கநாதரின் உற்சவ மூர்த்தி இந்த வெள்ளைக் குதிரையின் மீது தான் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பழமை வாய்ந்த இக்கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்ற ஊரில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டுப்பகுதியில் உள்ள வைணவ ஸ்தலங்களில் இக்கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இத்தகைய தனித்துவம் வாய்ந்த கோயிலை நாமும் நேரில் சென்று தரிசிப்பது சிறப்பாகும்.


Leave a comment
Upload