
மே மாதம் முதல் தேதி மாலையில் நண்பர் குமாரின் இரண்டாவது நூலான களிறு நடை கவிதை நூலின் வெளியீட்டு விழா நடந்தேறியது. இயக்குநர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வழக்கம் போல கலர்ஃபுல்லாக வந்திருந்தார். அங்கு வந்திருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு அந்த நூலை தானே ஸ்பான்சர் செய்து தன் கையாலேயே வழங்கினார். இந்த நூல் வெளியீட்டு விழாவை முன்னெடுத்தது அகநி பதிப்பகம் சார்பான அதன் பதிப்பாளர் மு.முருகேஷ். விழாவிற்கு வந்திருந்த பார்த்திபன், அகநி என்கிற சொல்லுக்கு அர்த்தம் தேடியபடி வந்தேன். நெருக்கமான நட்பிதம் என்று அதை அர்த்தப்படுத்தலாம் என்று தெரிவித்தார்.
எனக்கு சில மாதங்களாய் ஆர்த்ரடீஸ் பிரச்சனை காரணமாக மூட்டு வலி. பெங்களூரு தாண்டி நரசிம்மபுரா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுக்க வேண்டும் என்கிற திட்டம் இருக்கிறது. இன்னும் செல்லவில்லை. இருந்தாலும், இந்த விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என்று வேண்டிவிரும்பி குமார் அழைத்ததால், இந்த விழாவை தவறவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன்.
வாசலிலேயே நித்யாவும் அவரது மகள் கவிபாரதியும் என்னை தற்செயலாக கவனித்துவிட்டு வரவேற்றார்கள். எங்கு சந்தித்தாலும், என்னை பேச விட்டு மெய்மறந்து கேட்பது குமார் குடும்பத்தாரின் வழக்கம்.
இந்த கட்டுரையில் களிறு நடை கவிதை நூலை காட்டிலும் அந்த கவிதை நூலை ஆக்கிய கவிதை மனதின் ரஸவாதம் பற்றிய சில கணங்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஜென் வழியாக ஒரு புரிந்துணர்வு மனநிலை எங்களுக்குள் வாய்த்தாலும் எங்களின் துவக்கம் அப்படி இருக்கவில்லை. எங்களது சந்திப்புகளின் சாரம் எங்கே துவங்கினாலும், இறுதியில் அது ஜென்னில் தான் வந்து நிறையும். ஜென் குறித்த பலவிதமான பரிமாணங்களை அனுபவங்களிலிருந்தும், உள்ளுணர்வுகளிலிருந்தும் எடுத்து பகிர்வேன். அவர் முழுமையான விழிப்புணர்வோடு அவற்றை உள்வாங்கி கொள்வார். அப்படியான ஜென் மொழிகள் இந்த கவிதை தொகுப்பிற்குள் அவருடைய படைப்பு சக்தியின் சிறகடிப்பில் எங்கெங்கோ பறந்து சில அற்புத தருணங்களை இதன் கவிதைகளுக்குள் கொண்டு வந்து தந்திருக்கின்றன.
குமார் எதிலும் நேர்த்தியை கறாராக எதிர்பார்க்ககூடியவர். அறத்திற்கு பங்கம் வருகிறபோது, ரௌத்திரம் தெறிக்கும். படைப்பில் சமரசமற்றவர். எதிரெதிரே சாலையில் கடந்து செல்கிறபோது கூட கவனிக்காமல் சமயங்களில் செல்வார். அந்த கலைமனதிற்குள், அதற்கான ஆயிரம் காரணங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் நாங்கள் பரஸ்பரம் மௌனங்கள் வழியாகவே புரிந்து கொள்கிறவர்களாக இருக்கிறோம். ஒற்றை புன்னகை எங்களுக்குள் ஓராயிரம் பக்கங்களை ஒரு நொடியில் பேசிவிடும் தான்.
நான் பாக்யராஜ், ரேவதி, ராஜன்சர்மா, வஸந்த் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு, 2010 வாக்கில் பார்த்திபனிடம் வந்து சேர்ந்தேன். சண்முகத்தின் தனலட்சுமி, கடற்கரை முதலான ஸ்கிரிப்ட் வேலைகளை அவரோடு சேர்ந்து செய்தேன். பிற்பாடு கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அவரோடு சேர்ந்து பயணித்திருக்கிறேன். பல கோணங்களில் அந்த திரைக்கதையை உருவாக்கினோம். இறுதியில் தேர்வானது இப்போதிருக்கிற வடிவம். அந்த பயணத்தின்போது தான் குமார் அறிமுகமானார். அவர் அதற்கு முன்னால் கிட்டத்தட்ட 8 வருடங்கள் அவரோடு பயணித்துவிட்டு தனித்து இயங்க துவங்கியிருந்தார். இருந்தாலும் நானும், குமாரும் இப்போதும் பார்த்திபன் சாரோடு தொடர்பிலேயே தான் இருக்கிறோம். அவ்வப்போது, முக்கியமான தருணங்களில் சந்தித்துக்கொள்வோம். மற்றபடி அவரவருக்கான எழுத்து, இயக்கம் குறித்த தேடல்களில் அவரவர் வழிகளில் பயணிக்கிறவர்களாய் இருக்கிறோம். மாதத்தில் சில முறையேனும் தொடர்பு எல்லைக்குள் வந்துவிடுவோம்.
அத்தனையும் ஆசீவகத்தின் தற்செயல் கோட்பாட்டு சித்தாந்தந்தின வெளிப்பாடாகவே உணர்கிறேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் பிரத்யேக காட்சியை ராயப்பேட்டையில் உள்ள லேபில் அவரோடு நாங்கள் நான்கு பேர் மட்டும் பார்த்தோம். அங்கிருந்து சார் புறப்படுகையில் அவருடைய காரை திருப்ப, குமார் உதவிக் கொண்டிருந்தார். அப்போது தான் அதிலுள்ள ஈடுபாடு, நேர்த்தியை கவனித்தேன். கச்சிதமாக நாம் எடுக்கிற செயலை நிறைவேற்ற வேண்டுமென்கிற முனைப்பு அவருக்குள் இருப்பதை உணர்ந்தேன். அதற்கெல்லாம் மூலகாரணம் நமக்குள்ளிருக்கிற ஆழ்ந்த விழிப்புநிலை தான். அந்த டீப்ஃபோகஸ் வாயிலாகவே எடுத்த காரியத்தை துல்லியமாக ஈடேற்ற முடிகிறதென்பதை அந்த தருணம் உணர்ந்து கொண்டேன். அவர் சொல்லித்தராமல் நான் அவரிடம் கற்றுக்கொண்ட பாடம் அது. அதன்பிறகு பத்து வருடங்களுக்கும் மேலாக இந்த உறவு சீராக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நினைத்தால் சந்திப்போம். அவ்வளவு தான். சந்திக்கிறபோது நேற்று தான் பிரிந்து இப்போது சந்திப்பது போல சந்தித்துக்கொள்வோம். இதுவரை 100 புத்தகங்கள் எழுதிவிட்டேன். அதில் பெரும்பாலான புத்தகங்களை வாங்கி படிப்பதோடு, பலருக்கும் பரிந்துரைப்பார். பெண்ணியம் பற்றிய எனது நூலான வித்துகளின் கனா வம்சி பதிப்பகம் வெளியிட்டது. அது முதலில் விகடகவி இணைய வாரஇதழில் தான் தொடராக வெளிவந்தது. அதற்கு மூலகாரணம் குமார். அப்படியாக, சினிமா இலக்கியம் என்ன செய்து விட முடியும்? என்கிற இரண்டாவது தொடரும் அதில் எழுதி, இப்போது சத்யா பதிப்பகம் அதை புத்தகமாகவும் கொண்டு வந்துவிட்டார்கள்.
இடம் என்கிற சிறியஅளவிலான குளிரூட்டப்பட்ட கூடத்தில் தான் விழாவை அகநி பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. இடம் என்பது வெளி. இடம் என்பது வெறுமை. எதுவுமற்றது. எல்லாமுமானது. உள்ளே நுழைந்ததும் முருகேஷும், குமார் ஓடிவந்து வரவேற்றார்கள். அமர்ந்ததும் நமது இருக்கை நோக்கி சுவையான சிற்றுண்டி, தண்ணீர் பாட்டில், காஃபி தேடி வந்தது. விழா 5.30 முதல் 8.30 வரையென மூன்று மணி நேரம் நடந்தது. ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. ஏனென்றால் யாருக்குமே அவ்வளவு நேரம் கடந்திருக்கிறது என்பது உரைக்கவே இல்லை. அது எப்போதாவது அபூர்வமாகவே நடக்கும். அன்று அந்த அபூர்வம் நடந்தது. வந்திருந்த பார்த்திபன், கவிராயர், அமிர்தம் சூர்யா, மஞ்சுளா, பித்தன் வெங்கட்ராஜ், முருகேஷ் மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று அனைவரும் நூல் பிடித்தாற்போல, பேசிய அத்தனையும் அந்த கவிதை நூலுக்குள்ளிருந்தே பேசினார்கள். குமார் மட்டும் சற்று விலகி, அவர் பார்த்திபன் சாரிடம் பணிபுரிந்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பான தருணங்களுக்குள் போய் வந்தார். அவர் நூலாசிரியர். அதனால் அந்த உரிமையை அவரே எடுத்துக்கொண்டார். மொத்தத்தில் அந்த விழா கவிதை நூல் குறித்த அறிமுக விழாவாக மட்டுமில்லை. அங்கு அப்போது நிகழ்ந்த அத்தனையிலும் கவிதை தெறித்ததை உணரமுடிந்தது.
இவருடைய முதல் நூல் சில வருடங்களுக்கு முன்னால் இதே இடத்தில் வெளியிடப்பட்டது. காலமே போதி மரம். காலம் என்பது மாயை. நிகழ் மட்டுமே நிஜம். கடந்த காலம், எதிர்காலம் என்பது காலத்தின் மாயத்தோற்றங்களே. அதுவே ஜென் மனநிலை கற்றுத் தருகிற பாடம். அந்த சூட்சுமம் வசப்பட விடாமல் தொடர்ந்து பயணித்தாக வேண்டும். நிற்காமல் ஓடும் நதியோடு நீந்தியாக வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் நிகழ் நழுவிவிடும். பிற்பாடு அதற்கான பிரயத்தனங்களை தொடர்ந்து மறுபடி அந்த நிகழை எட்ட வேண்டியிருக்கும். நிகழோடான பயணம் ஒரு தொடர் செயல்பாடு. அதில் நழுவுவதும், பின் எட்டிப்பிடிப்பதும் காலத்தின் விளையாட்டு.

காலமே போதிமரம் என்று முதல் நூலை கொண்டு வந்தார். அதுவும் விகடகவியில் தொடராக வந்த தொடர் தான். அதில் மனிதத்தை பலவிதமான மனிதர்கள் வழியாக கொண்டாடியிருப்பார். இந்த விழாவில் அவரை அறியாமல் ஒரு நடிகையின் சமூக மனநிலையை போல, ஐம்பது வயதை தாண்டி விட்டதை ஒரு ஒவ்வாமையாக நினைத்து, ஒரு விசயம் நடந்தது எப்போது என்று சொல்ல மாட்டேன். அப்படி சொன்னால் என்னுடைய வயது தெரிந்துவிடும் என்று விட்டார். காலமே போதிமரம் எழுதியவருக்கும் காலம் ஆட்டம் காட்டத்தான் செய்கிறது. காலமற்றவர்களுக்கு வயதென்று ஒன்று உண்டா? இங்கே உள்ள பௌதீக உடம்பிற்கான வயது என்பது வெறும் எண் மட்டும் தானே. ஆக்கப்பூர்வமான, முன்னோக்கி சிந்தனையிருக்கிற ஒருவர் வாழ்நாள் முழுக்க இளமை ததும்ப, குழந்தை மனத்தோடே தான் இருக்கிறார். குமாரும் அப்படிப்பட்டவர் தான். ஆனாலும், வார்த்தைகளில் சமயங்களில் சறுக்கி எழுந்து விளையாட நினைத்திருக்க கூடும்.
களிறு நடை நூலில், பட்டாம் பூச்சிகளுக்கு என் பெயர் தெரியவில்லை. எனக்கு பட்டாம்பூச்சிகளின் பெயர் தெரியவில்லை ஆனாலும் நாங்கள் பட்டாம்பூச்சிகள் என்கிறார். அடையாளங்களோ, பிரிவினைகளோ, பேதங்களோ அற்றிருப்பதே பெயரற்றிருப்பதன் குறியீடு. அப்படித்தான் டி. குலசேகராக இருந்த நான், தி.குலசேகராகி, பின் குலசேகராகி, இப்போது அந்த குலசேகரையும் கண் தெரியாத வனத்திற்குள் உதறி தொலைத்துவிட தருணம் நோக்கியிருக்கிறது மனமற்ற மனது. பின்அட்டைப்பட கவிதையில், உதிர்ந்த இலைகளை சேகரித்து வைத்தேன். மரமானது. மரத்தை உலுக்கியபோது வானம் தெரிந்தது என்பார். முதலில் வனம் தெரிந்திருக்கும். வனத்தின் வழி வானம் பிடிபட்டிருக்கும் என்று தோன்றுகிறது.
குமார் மனிதத்தோடு அன்றாடம் இரவு நேரத்தில் அறிமுகமில்லாத பசியாளர்களுக்கு தன்னால் முடிந்த அளவிற்கு உணவளிக்கிற சேவையை பல காலம் தொடர்ந்து வருபவர். அதேசமயம், பல்லுயிர் ஓம்புதல் வரம் என்பதே வாக்கு. அவர் அந்த அட்சய சேவையை மனிதர்களோடு நிறுத்திவிடாமல், வாயில்லா ஜீவன்களாகிய பறவைகள், விலங்குகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்பது எனது அன்பின் வேண்டுகோள். மனிதர்களாவது வாய்விட்டு பசியை சொல்லிவிட முடியும். பறவைகளும், விலங்குகளும் எப்படி சொல்லும்??
இந்த கவிதை தொகுப்பில் எங்கள் உரையாடல்களின் போது தெறிக்கும் ஜென் மொழிகள் போல, சிலபல கவிதைகளில் ஜென் கூடிவந்திருக்கிறது. ஜென் என்பதே பேதங்களற்றது. அந்த வகையில் நாங்கள் எப்போதுமே உண்மைக்கு நெருக்கமாக இருக்கவே முயற்சித்திருக்கிறோம். எங்கள் உரையாடல்களும், பகிர்தலும் அப்படியாகவே இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் அவர் எங்களைப்போன்ற சில எழுத்தாள, திரைக்கலைஞர்களுக்கு நூல் பரிசளித்தார். சிலருக்கு கூடுதலாக அன்புப்பரிசு. என்னை எப்போது சந்திக்க வந்தாலும் ஒரு பரிசோடே வருவார். அது அவரின் இயல்பு. பரிசளிப்பதில் அப்படியொரு பிரேமை அவருக்கு. பார்த்திபன் சார் உடனே வந்திருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு பிரதி பதிப்பாளரை தரச்சொன்னார். அதற்கான பணத்தை அவர் ஸ்பான்சர் செய்வதாக அப்போதே அறிவித்தார். அவரின் விழா குறித்து அவருக்கு பிடித்தமான வாய்ஸ் மெயில் வழியாக பகிர்ந்து கொண்டபோது இந்த சிறுசிறுபேதங்களை கூட இனிவரும் காலங்களில் தவிர்க்கலாம். எல்லோரையும், எல்லாவற்றையும் ஒன்றாக பாவிப்பதே பிரபஞ்ச சூட்சுமம் வசப்பட்டவர் செய்யும் நடைமுறை என்பதை அப்போது சொன்னேன். அவர் மனம்மடுத்துக்கொண்டார். அவர் ஒரு தேர்ந்த வாசகன். தேர்ந்த உழைப்பாளி. தேர்ந்த தேடல்மனதுக்காரர். நுண்ணுணர்வும், விழிப்புணர்வும் சரிவிகிதத்தில் சங்கமித்திருப்பவர். நிறைகளோடு, சொல்கிற ஆக்கப்பூர்வமான குறைகளையும் சரிசமமாக பாவித்து ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அவருக்கு அந்த ஆலோசனையை சொல்கிறபோது, எனக்குள் காக்கை குருவி எங்கள் ஜாதி, நிற்பதுவே நடப்பது, கரிய நிறத்தில் காணுதயே நந்தலாலா என்று ஞானக்கவிஞனின் அறத்ததும்பல் பட்டுத் தெறிக்கிறதை பரிபூரணமாய் உணர்கிறேன். அவரும் உணர்கிறதை உணர்ந்து கொள்கிறேன்.
விழா நிறைவடையும்போது, உயிர்மை வெளியிட்ட எனது நூலான, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் கலையும் வாழ்வும் நூலை அவருக்கு பரிசளிக்கும்விதத்தில், அதில், அன்பார்ந்த ‘நம்’குமாருக்கு களிறு நடையாக வாழ்க்கை தொடர வாழ்த்துகள் என்று எழுதி கையெழுத்திட்டு, நித்யாவிடம் தந்து, குமாரிடம் தந்துவிடும்படி சொன்னேன். உடனே நித்யா புன்னகைத்தபடி, ஏன் எனக்குலாம் கிடையாதா என்றார். ஜென்னின் பிரபஞ்சம் தன் அத்தனை பக்கங்களையும் திருப்பி காட்டி புன்னகைக்கிறது என்கிறேன். அந்த நிகழ்வில் நான் கேட்ட ஆகச்சிறந்த சொற்டொராக அதை உணர்கிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அந்த நூலை அவருக்கு பரிசளிக்க ஒரு காரணம் இருக்கிறது. வாழ்க்கையின் தன்னுடைய கடைசித்துளி வரை இருந்த அத்தனையையும் மனிதர்களுக்காக, மற்ற உயிரினங்களுக்காக வாரிவாரி மிச்சம் வைக்காமல் வழங்கியவர் கலைவாணர். அப்படியாக அன்பை வாரிவாரி இரைக்கிற மனிதர்களுள் ஒருவர் தான் குமார் என்பதால் அந்த நூலை அவருக்கு வழங்கினேன். வந்திருந்த நண்பர்களோடு சில நிமிடங்கள் உரையாடிவிட்டு, நிறைவாய் வீடு திரும்புகிறேன்.

ஒவ்வொரு முறை நீங்கள்
பேசும்போதும்...
மனக்கண்களில்...
பெரிய
அரச மரத்தடியில் புத்தன்
அவனுக்குப் பிடித்த மஞ்சள் துகில் போர்த்தி
கண் மூடித்
தன் தாமரை உதடுகள் திறந்து பேசுவது போல்
எனக்கொரு காட்சி வரும்
நெருங்கி சென்று பார்த்தால்
அது தி. குலசேகர் என்று தெரியும்
-குமார்
*
குமாரில் குலசேகர்.
குலசேகரில் குமார்.
பெரிதினும் பெரிது
பிரபஞ்ச உறவு. சிறிதுபெரிது கடந்த உறவு. பேரன்பு நேசம் உணர்கிறோம். பிரபஞ்சமெங்கும் அதே நொடி அதே உணர்வு பரவுகிறது.
ஜென் மௌனமாய் புன்னகைக்கிறது.
*
விழா மேடையில் இருந்து.........

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் பேச்சு

Leave a comment
Upload