தொடர்கள்
இசை
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகள் – ஒரு இசைப் புரட்சி - வேங்கடகிருஷ்ணன்

20260416071353892.jpg

அன்னக்கிளியில் தொடங்கி உலக சிம்பொனிவரை...

1976 மே 14.
தமிழ் திரையிசையின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அந்த நாளில் வெளியான அன்னக்கிளி திரைப்படம் ஒரு புதிய இசைக் காலத்தைத் தொடங்கியது. அந்தப் படத்தின் மூலம் அறிமுகமானவர் இன்று உலகம் முழுவதும் “இசைஞானி” என்று போற்றப்படும் இளையராஜா .

அவரது இசை வெறும் பாடல்களாக மட்டும் இல்லை; அது மண்ணின் மணமும், கிராமங்களின் உயிரும், மனித உணர்வுகளின் ஆழமும் கலந்து பிறந்த ஓர் அனுபவம். “அன்னக்கிளி உன்னைத் தேடுதே” என்று ஒலித்த அந்தக் குரல், நகரங்களில் வாழ்ந்த மக்களுக்குக் கூட கிராமத்தின் வாசனையை உணர்த்தியது.

அந்தக் காலகட்டத்தில் தமிழ்த் திரைப்பட இசை பெரும்பாலும் நகர்ப்புற மெட்டுகளிலும், இந்திப்பட இசைத் தாக்கத்திலும் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் இளையராஜா கொண்டு வந்தது முற்றிலும் வேறுபட்ட ஓர் இசை மொழி. நாட்டுப்புற இசையின் இயல்பான தாளம், தெருக்களில் கேட்கும் நாதஸ்வரம், கோயில் திருவிழாக்களின் உற்சாகம், மழை பெய்யும் வயல்களின் அமைதி — இவை அனைத்தையும் இசையாக வடித்துக் காட்டினார்.

20260416071419432.jpg

இந்த மகத்தான திறமையை முதலில் அடையாளம் கண்டவர் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் . எழுத்தாளர் K. S. செல்வராஜ் மூலம் இளையராஜாவை அறிந்த பஞ்சு அருணாசலம், “இந்த இளைஞனின் இசை தமிழ்சினிமாவை மாற்றப் போகிறது” என்பதை மிகவும் ஆரம்பத்திலேயே உணர்ந்தார். அதன் விளைவாகவே “அன்னக்கிளி” உருவானது.

அந்தப் படத்தின் முதல் பதிவே ஒரு சினிமா காட்சியைப் போலவே அமைந்தது. பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே மின்தடை ஏற்பட்டது. மீண்டும் தொடங்கினர். ஆனால் பதிவு பொறியாளர் ‘ரெக்கார்ட்’ பொத்தானை இயக்க மறந்துவிட்டதால் பாடல் பதிவாகவே இல்லை. மூன்றாவது முறையாகவே அந்தப் பாடல் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டது. பலர் இதை ஒரு தடையாகக் கண்டிருக்கலாம். ஆனால் அந்தப் பாடலே பின்னர் தமிழகமெங்கும் ஒலித்த மகத்தான வெற்றிப் பாடலாக மாறியது.
அந்த நாளின் அந்தச் சிறிய தடுமாற்றம், பின்னாளில் ஒரு இசைச் சாம்ராஜ்யத்தின் தொடக்கமாக மாறியது என்பது வரலாற்றின் அழகான பரிகாசம்.

அதன் பின்னர் நடந்தது ஒரு இசைப் புரட்சி.


ஐந்து தசாப்தங்களாக, 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. காதல், துக்கம், தத்துவம், பக்தி, கிராமம், நகரம், மழை, மௌனம் — எந்த உணர்வாக இருந்தாலும் அதற்கென தனி இசை மொழியை உருவாக்கியவர் அவர்.

ஒரு பக்கம் “சிந்துபைரவி ”, “மௌன ராகம்”, “நாயகன்”, “புன்னகை மன்னன்”, “கரகாட்டக்காரன்” போன்ற திரைப்படங்களில் மக்கள் மனதை உருக்கிய மெட்டுகள்; "திருவாசகத்தையும், திவ்ய ப்ரபந்தத்தையும், பகவத் கீதையையும் இசையோடு கோர்த்து ஒலி மாலைகளாய் இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் வழங்கினார். மறுபக்கம் மேற்கத்திய சங்கீத வடிவங்களை இந்திய இசையுடன் இணைத்த சிம்பொனி முயற்சிகள் — இவை அனைத்தும் அவரை ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்ல, ஒரு இசை அறிஞராக உயர்த்தின.

சாதாரண ஒரு திரைக்காட்சி அவர் பின்னணி இசைக்கோர்ப்பு செய்ததும் வேறு ஒரு உயரத்திற்கு செல்வதை ரசிகர்களும், விமரிசகர்களும் ஒரு சேரக்கண்டு வியந்தார்கள். இந்த மாயாஜாலத்தை மேடையில் பல ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இளையராஜா நிகழ்த்திக்காட்டினார்.

இது பயிற்சியை, முயற்சியா, பூர்வ ஜென்மத்து தொடர்ச்சியா, கடவுளின் தனிப்பட்ட ஆசிர்வாதமா, எதுவென்றே ஆராய்ச்சியில் நாம் இறங்கும் போதே அவரின் இசையில் கட்டுண்டு மெய்மறக்கிறோம்....அதுவே அவர் சொல்லும் பதில்..."என் இசை உனக்கு போதும்"


அவரது சிம்பொனி வெளியீடு இந்திய இசை உலகிற்கு பெருமை சேர்த்த நிகழ்வாகும். மேற்கத்திய ஆர்க்கெஸ்ட்ரா அமைப்புகளையும் தமிழ்மண்ணின் இசை உணர்வுகளையும் இணைத்து உலக அரங்கில் தமிழ் இசையின் குரலைக் கொண்டு சென்றார்.

இளையராஜாவின் இசையில் ஒரு விசித்திரமான நெருக்கம் இருக்கிறது.
அவரது பாடல்களை கேட்கும் போது ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தை நினைவுகூர்கிறார்கள். அதுவே அவரின் வெற்றி. இசையை அவர் கேட்டவர்களின் நினைவாக மாற்றிவிட்டார்.

50 ஆண்டுகள் என்பது ஒரு கால அளவு மட்டுமல்ல.
அது தலைமுறைகளைத் தாண்டிய தாக்கம்.
கிராம ரேடியோவில் தொடங்கி, உலக இசை மேடைகள்வரை சென்ற பயணம்.
ஒரு இசையமைப்பாளரின் வெற்றியை விட, தமிழ்மண்ணின் இசை உலகம் அடைந்த பெருமை. மூன்று தலைமுறை ரசிகர்கள் அவரின் இசையை மட்டுமே சுவாசித்து வளந்தர்வர்கள். 80 ஸ் , 90 ஸ் , 2k கிட்ஸ் வரையில் அவரின் இசையால் வசமாகா இதயம் எது?
சின்னதாய் பெற்ற மகன் இசைத்தாயால் வளர்க்கப்பெற்று தமிழ்த்தாயால் ஊட்டப்பட்டு இன்று இசை உலகின் தலை மகனாய் நிற்கிறார்,

20260416071551331.jpg

“அன்னக்கிளி”யில் தொடங்கிய அந்த இசைப் பயணம் இன்னும் தொடர்கிறது.

ஏனெனில், சில மனிதர்கள் காலத்தை கடந்தவர்கள்.

இளையராஜா அப்படிப்பட்டவர்.....