
இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்ததில்லை.
சந்திரா ரவி !!
ஹாங்காங் தமிழர்களுக்கு பரிச்சயமான நபர்.
ஒட்டப் பந்தய வீரர். மலையேற்ற வீரர். நீச்சல் வீரர். சைக்கிள் வீரர்.
இப்படி பல பரிமாணங்களை உடைய சந்திரா ரவி, சாதனைகள் புரிய முயன்ற அளவு தன் உடல்நலத்தை கவனிக்க தவறி விட்டாரோ என்று கலங்கிப் போயிருக்கிறார்கள் அவரது நண்பர்களும் உறவினர்களும்.
இந்த வார துவக்கத்தில் அத்தனை பேரையும் சோகத்தில் ஆழ்த்தி விடைபெற்று சென்றார் ரவி.
இத்தனை பரிமாணங்களுக்கு மேல் அவர் ஆகச் சிறந்த மனிதர்.
ஏனெனில் தனக்காக மட்டும் ஓடாமல், தன்னுடைய நண்பர்கள் அத்தனை பேரையும் பல விதங்களில் ஊக்குவித்து ஓட வைத்தவர். மலையேற வைத்தவர்.
அதனால் தான் வியாழக்கிழமை அவரது இறுதி சடங்கு நிகழும் நாளில் அவரது நண்பர்கள் ஸ்டிராவா என்ற வலைதளத்தில் அவருக்காக ஓடுகிறோம் என்று அதிகாலையில் ஓடி பதிவு செய்தார்கள்.

ஸ்டிராவா வலைதளத்தில் யார் ஓடி பதிவு செய்தாலும் அதில் முதல் லைக் போடுவது ரவியாகத்தான் இருக்கும். இனி ஸ்டராவா பக்கங்கள் உடனடி லைக் பெறப் போவதில்லை.
ஹாங்காங்கில் வருடந்தோறும் நடக்கும் 100 கி.மீ மலையேற்றத்தை இரண்டு முறை செய்தவர். தொடர்ந்து அதில் பங்கேற்பவர்களை உற்சாகப்படுத்தி ஆங்காங்கே அவர்களுடன் தொடர்ந்து மலையேறுபவர்.
தொழில் முறையில் வேலைப் பளு மிக அதிகமாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய வார இறுதிகளில் அவரை மலையேற்றத்திலோ அல்லது ஓடு தளத்திலோ பார்க்கலாம்.
துங் சுங் என்று அவர் வசித்து வந்த பகுதியில் அவர் கால் படாத இடமேயில்லை.
அந்த ஏரியா ரன்னர்ஸ் கிளப்பில் அவர் தான் ஸ்டார்.
ஒரு முறை புயல் சின்னம் 10 போட்டிருக்கும் போது அங்கு கொந்தளித்துக் கொண்டிருந்த கடல் அலைகளுக்குள்ளே ஓடிப் போய் ஒரு முறை இரு முறையல்ல மூன்று முறை குதித்ததாக என்னிடம் பெருமையாக சொன்னார். என்ன வருத்தம்னா கைல கட்டியிருந்த வாட்சு தான் விழுந்திருச்சு என்று சிரித்துக் கொண்டே சொன்னவரை கடிந்து கொண்டேன்.
புயல் சின்னத்தில ஏங்க ரிஸ்க் எடுக்கறீங்க என்றால் அதற்கும் சிரிப்புத் தான்.
பல முறை தன்னுடைய சக்தியையும் மீறி மலையேறி, ஓடி, மயங்கி விழுந்ததெல்லாம் நடந்திருக்கிறது.
அவரையும் அவர் குழுவினரையும் நான் முதல் முறை அரை மராத்தான் ஓடி முடிந்ததும் வியப்பில் சென்று பேட்டி கண்டேன்.
2024 ம் ஆண்டு மராத்தான் ஓடும் போது என்னை அழைத்தார். ராம், வேட்டி சட்டை கட்டிக் கொண்டு ஓடப் போகிறேன் என்றார். 40 கி.மீட்டருமா ?? என்றவுடன் ஏன் அதில என்ன கஷ்டம். மோடி மஹாபலிபுரம் வேட்டி சட்டை போட்டுக்கிட்டு போனார்ல.... உள்ளூர் மக்களுக்கு வேட்டி சட்டைனா என்னன்னு காட்டுவோம் என்று சிரித்தார். அதை சன் டிவியில் என் நண்பனின் உதவியோடு ஒளிபரப்பினோம்.

(சந்திரா ரவி சன் டீவி செய்திகளில்)
சென்ற வருடம் அவருக்கு தெரிய வந்த கான்சரைக் கூட அவர் பொருட்படுத்தவில்லை.
இந்த வருடம் நடைபெற்ற மராத்தான் போட்டியில் அரை மராத்தான் தான் ஓடப் போகிறேன் ராம். ஏன் ரெஸ்ட் எடுத்துக்கலாமே என்றதும் அதெல்லாம் ஐயாம் ஓகே. ஓடாம இருந்தாதான் எனக்கு கஷ்டம் என்றார்.

பாதி வழியில் ஓடு தளத்தில் சந்திக்கும் போது என்ன உற்சாகம். குருநாதா என்று அவர் காலில் விழுந்தேன். ஏய் அதெல்லாம் அப்புறம். ஓடு ஓடு..ஒடு என்றார்.......
ஒரே வருத்தம். 2023ல் எங்களுடன் கைலாஷ் மலைக்கு வர இருந்தாவர் இந்தியர்கள் அந்த வருடம் அனுமதியில்லை என்ற காரணத்தால் வர இயலாமல் போனது தான்.
கடைசியாக அவருடன் மலையேறியது சென்ற மே மாதம் 2025ல்

மற்றவர்கள் போல ரொம்ப சீரியசான மனிதர் இல்லை அவர். அவருக்குள் எப்பொழுதுமே ஒரு குழந்தைதனம் இருக்கும்.
அவரது ஓவ்வொரு அசைவுக்கு இசைவு சொல்வது அவரது மனைவி சுகுணா. மகன் பிரஷாந்த், மகள் பூஜா.
சமீபத்தில் பிறந்த இரட்டை பேத்திகள்.
அப்படி ஒரு தருணம் தான் கடைசியாக அவர் ஒரு மரத்தின் மீதி ஏறி சுற்றி வந்த வீடியோ.....
அவருக்கு அப்படி ஒரு நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் அன்று தெரியவேயில்லை.........
எல்லாவற்றிலும் அவசரம்... இலக்கு.... ஏன் இத்தனை அவசரம் ரவி ????
ஹாங்காங் மலைகளும், ஓடு தளங்களும், மராத்தான்களும் இனி ரவியில்லாமல் வெறுமையாகவே இருக்கப் போகிறது. !!

Leave a comment
Upload