தொடர்கள்
கதை
தீராத கடன் - பா.அய்யாசாமி

20260427080205956.jpeg

ஏம்பா கண்ணுசாமி உம்மவனுக்கு பெண் பார்க்கலையா, கல்யாண வயசாகிட்டுல்லே, காலாகாலத்திலே முடிச்சு வைய்யா.. எத்தனை வருசம் பொம்பளை இல்லாத ஊடாக கிடந்திடுச்சு, உனக்கும் ஆக்கிற வேலை, வூட்டு வேலையெல்லாம் குறையுமில்லே என அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு,

இப்பத்தான் அவன் படிப்பையே முடிச்சிருக்கான், அவனுக்கென கடமையெல்லாம் இருக்கு,சட்டுனு கல்யாணத்தை செஞ்சு அவனை சங்கடத்திலே விட்டுடக்கூடாது என பதிலுரைத்த கண்ணுசாமி ஊரிலே வேலி கணக்கிலே நிலம் வைத்து விவசாயம் செய்து வசதியாய் வாழ்ந்து,

விதியின் விளையாட்டில் நண்பனிடம் தோல்வியடைந்தவர்.

பெரும்பாலும் ஏமாற்றப்பட்டவர்களை அணுகிக் கேட்டுப் பாருங்கள் நண்பன் என நினைத்து கொடுத்து ஏமார்ந்தவர்களும், அல்லது வாங்கி ஏமாற்றியவர்களும் இருப்பதுதான் யதார்த்தம்.

இயற்கைப்படுத்தியப் பாட்டாலும்,அடிக்கடி மனைவி நோய்வாய் பட்டதாலேயும் சாகுபடி குறைந்து கடன்சுமை அதிகமானது.

நன்றாகப் பழகிய நண்பனே பொய் கையெழுத்து வாங்கி நிலத்தையெல்லாம் ஏமாற்றிப் பிடுங்கிக் கொண்டுக்கிட்டதினாலே, கைப்பிடிச் சோத்திற்குக்கூட வழியில்லாமல் போனவர்தான் கண்ணுசாமி.

விவசாயத்தை கவனித்துச்செய்தக் காலம், கண்ணுசாமிக்கு தொட்டதெல்லாம் துலங்கியது.

மனைவி வந்த ராசினு ஊரே பேசிகிடும், இருவரும் அப்படி ஓடி ஆடி உழைத்து வருடாவருடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தினை வாங்கி சாகுபடி செய்து வந்தார்கள்.

முருகானந்தத்தின் காதுகுத்து விழாவிற்கு வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பனான சத்யசீலன்,

"சல்லிசா நிலம் ஓரே இடத்திலே மோட்டார் வசதியோட வருது, வாங்கிப்போடு என கண்ணுசாமிக்கு ஆசையைக் காட்டினான்.

அந்தளவிற்கு வசதி ஏதப்பா நம்மகிட்டே?! என்று வேண்டாமென்று தயங்கினார் கண்ணுசாமி.

சொத்து சேர்க்கணும்னா கொஞ்சம் கடனை உடனை வாங்கி சேர்த்துகிடனும்,பின்பு சம்பாதித்து அடைச்சுடணும் என்றவன்,

கடன் வாங்க யோசித்தாய் என்றால் அங்க இங்க இருக்கிற உன் நிலத்தை யெல்லாம் விற்றுவிட்டு ஒரே இடத்திலே பெரிசா இதனை வாங்கிப்போடு நல்ல விலை வரும்போது கை மாற்றிவிடலாம் என்றான்.

அவன் உழைப்பின் மேல் உள்ள நம்பிக்கையிலும், நண்பனின் வார்த்தையையும் நம்பி தன் நிலங்களை விற்க முனைந்து விட்டான்.

தன் நிலங்களை அச்சமயத்தில் யாரும் வாங்க முன் வரவில்லையென்ற நிலையில்,தானே வாங்கிக் கொள்கிறேன் என சொல்லி தன் பெயரில் அவன் நிலங்களை எழுதி வாங்கிக் கொண்டான் சத்யசீலன். அதற்கான தொகையினை புதிய நிலத்தினை வாங்கும்போது தருகிறேன் என்று கூறிய சத்யசீலன்,

இரண்டு நிலத்தையும் தன் பெயரிலேயே பதிந்துக்கொண்டு மேலும் கூடுதல் தொகை கொடுத்தால்தான் நிலத்தினைப் பதிவு செய்யமுடியும் என சொல்லி கண்ணுசாமியை ஏமாற்றி விட்டான்.

பெரிய சொத்திற்கு ஆசைப்பட்டு இருப்பதையும் விற்று கைமாற்றிவிட்டதன் விளைவு திரும்பவும் கூலி வேலைக்குச் செல்லும்படியானது கண்ணுசாமுக்கு.

வறுமையின் பிடியில் சிக்கியபடி காலங்கள் நகர,நோயில் விழுந்த மனைவி கவலையிலே கண்ணை மூடினாள்.

ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டியிருந்த முருகானந்த்ததோடு, அன்றாடம் கூலி வேலைக்குப்போய் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து மகனை படிக்க வைத்தார்.

படிப்பறிவு இல்லாததால் பிராடுத்தனம் பண்ணி தன் நிலத்தையெல்லாம் பிடுங்கினானோ அவற்றையெல்லாம் திரும்ப சட்டபடி மீட்டுக்கொண்டு வரவே மகனைப் பிடிவாதமாக வக்கீலுக்குப் படிக்க வைத்தார் கண்ணுசாமி.

முருகனும் தன் தந்தையின் வலிகளை உணர்ந்து,பொறுப்பாகப் படித்து ஊருக்கு வக்கீலாக வந்தது சந்தோஷத்தை தந்தது கண்ணுசாமிக்கு.

முருகா, நம்ம நிலத்தையெல்லாம் அவன்கிட்டேயிருந்து திரும்ப வாங்கனும், அதுதான் என் வாழ்நாள் லட்சியங்கிறதும் உனக்குத்தெரியும் அதற்கு என்ன செய்யனுமோ செய் என சொன்னதும்,

அப்பா,இதற்கெல்லாம் சட்டபடி போனால் உன் காலம் முடிந்து என் காலத்திலே பாதிநாள் கடந்திடும்,அதனால் வேற வழி யோசித்து வச்சிருக்கேன்பா நீ கவலையேப்படாதே என்று முருகன் சொன்னதில் குழம்பிய கண்ணுசாமி, இருந்தாலும் உன் மேலே எனக்கு நம்பிக்கை இருக்குயா, எதை செய்தாலும் யோசித்து செய்யப்பா.. என்றார்.

நாட்கள் கடந்தன ஒரு நாள், "அப்பா "யாரு வந்திருக்கா பாரு, என்ற முருகன் "விழு காலில் விழு," என்றான் மல்லிகாவை அப்பா இது மல்லிகா.

நாங்கள் காதலிக்கின்றோம், கல்யாணம் செய்துக்கலாம்னு இருக்கோம் உங்கள் சம்மதத்தோட என்றவனிடம்,

"நல்லாயிரும்மா எழுந்திரு"என்ற கண்ணுசாமி

பாப்பாவிற்கு எந்த ஊரு,யாரு வீடு என விசாரித்தார் கண்ணுசாமி எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்கத்தான்பா என்றவன் பிறகு சொல்கிறேன் என்று கூறி மல்லிகாவை அனுப்பி வைத்தான்.

சத்தியசீலனின் மகள்தான் இவள் என்று முருகன் சொன்னதும், என்ன காரியம் செஞ்சு வச்சியிருக்கே நீ ?

பகையாளி வீட்லே போய் பொண்ணு கட்டுவேங்கிற என்றதற்கு,

தெரியும்பா, தெரிந்துதான் அவளை நான் காதலித்தேன்பா என்றான் முருகன்.

அப்ப,என் கனவு பற்றிய கவலையெல்லாம் உனக்கில்லை, சுயநலம்தான் பெரிது என நினைத்து விட்டாய் என புலம்பினார் கண்ணுசாமி.

அப்பா,இதுவும் ஒரு வழிதான்பா நம்ம இழந்த சொத்தை திரும்ப அடைவதற்கு என்றான் முருகன்.

அப்போ காதல் இல்லை ??? அப்பாவிற்கு சொத்தை திருப்பி வாங்கித் தர, இப்படி குறுக்கு வழி யோசித்து விட்டாய் ?? ஹூம்....

என்னை ஏமாற்றிய அந்த சத்தியசீலனுக்கும், உனக்கும் வித்தியாசம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்ற கண்ணுசாமி துண்டை உதறி தோளில் போட்டபடி வடக்கு நோக்கிப் புறப்பட்டார்.