
சிவப்பிரகாச சுவாமிகள் பற்றி முன்பே இந்த தொடரில் பேசியிருக்கிறோம் அல்லவா?
அவர் நானூறு வருடங்களுக்குமுன் வாழ்ந்த பெரும் புலவர். பிரபு லிங்க லீலை, சோண சைவ மாலை போன்ற பல அரிய தமிழ் நூல்களை யாத்தவர்.
இவர் துறவு பூணும் முன், ஒருமுறை திருப்பட்டீஸ்வரம் கோயிலுக்குச் சென்றிருந்தார். அங்கு சிவப்பிரகாசரை எதிர்கொண்ட அவருடைய உறவினர்கள், அவரை திருமணம் புரிந்து கொள்ளுமாறு வற்புறுத்தலானார்கள்.
சிவப்பிரகாசரும் சிரித்தபடி, அக்கணமே ஒரு பாடலைப் பாடி அவர்கள் வாயை அடைத்தார்.
அந்தப் பாடலை பார்ப்போம் ;
சேய் கொண்டாரும் கமலச் செம்மலுடனே அரவப்
பாய் கொண்டாரும் பணியும் பட்டீசுரத்தானே
நோய் கொண்டாலும் கொளலாம் நூறு வயது ஆம் அளவும்
பேய் கொண்டாலும் கொளலாம் பெண் கொள்ளல் ஆகாதே
இதற்குப் பொருள்
முருகனாகிய சேயை பெற்றவனும் ;
கமலச்செம்மலாம் பிரம்மனும், மற்றும் பாம்பை படுக்கையாகக் கொண்ட திருமாலும் போற்றி வணங்கும் பட்டீஸ்வரரே!
வாழ்க்கையில் கொடுநோயைக் கொண்டாலும் பாதகம் இல்லை.
பேய் பிடித்து ஆட்டுவித்தாலும் கவலையும் இல்லை.
ஆனால் நூறு வயதாகின்ற வரையில், மனைவி என்று ஒரு பெண்ணை கொள்ளல் ஆகாதே ! என்பதாம்.
கல்யாணமான அன்பர்களுக்கு இந்தப் பாடல் சரி என்று பட்டால் கமுக்கமாக இருக்கவும்.
பாடலை உரக்கச் சொல்லி, கிடைக்கும் சோற்றுக்கும் ‘உலை’ வைத்துக் கொள்ள வேண்டாம்!
அடுத்த வாரம் வேறொரு பாடலுடன் சந்திப்போம்.

Leave a comment
Upload