தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 31 : “வாகனங்களும் பசியும் ” – மோகன் ஜி

பெரும் புலவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய வெண்பா ஒன்றை இங்கு முன்பே பார்த்தோம்.

இன்று நாம் சிந்திக்க இருப்பது அவர் கட்டளை கலித்துறையில் பாடிய ஒரு செய்யுள்.

ஒருமுறை புலவர் வெளியூர் பயணம் மேற்கொண்டார். வழிக்கு உணவாக அவருடைய தாயார் தயிர் சாதத்தைப் பொட்டலம் கட்டிக் கொடுத்திருந்தார்.

பாதிவழியில் களைப்பு மேலிட, ஒரு மரத்தின் அடியில் சற்றே சாய்ந்தார். அப்போது அங்கே வந்த ஒரு நாய், அவர் அருகிலிருந்த உணவுப் பொட்டலத்தை கவ்விக் கொண்டு வேகமாக ஓடிவிட்டது.

அதை கண்ட புலவர், பசி மேலிட, நாய் ஓடிய திசையையே பார்த்தபடி இருந்தார். உடனே கீழ்க்கண்ட பாடலையும் பாடினாராம்.

சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக் கௌவி

நாராயணனுயிர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

இந்தப் பாடலில் ‘வாகனம்’ என்ற ஒரு சொல்லை வைத்து புலவரின் தமிழ் விளையாடுகிறது.

சீராடை அற்ற வயிரவன் வாகனம்:

வைரவன் என்று அழைக்கப்படும் பைரவ சுவாமி ஆடை ஏதுமின்றி அம்மணமாகவே இருப்பார். அவருடைய வாகனம் நாயாகும்.

நான்முகன் வாகனம்:

பிரம்மாவின் வாகனமான அன்னப் பறவை. இங்கு அன்னம் என்ற சொல் சுவற்றை குறிக்கின்றது.

நாராயணனுயிர் வாகன மாயிற்று ;

ஸ்ரீமன் நாராயணனின் வாகனமாகிய கருடப் பருந்தை போல்

(அதாவது பைரவரின் வாகனமான நாய் நான் புசிக்க வைத்திருந்த அன்னத்தை ஒரு பருந்தை போல் கவர்ந்து கொண்டு ஓடியே விட்டது.)

20260615162212293.jpg

நம்மைமுகம் பாரான் ;

நம் முகத்தைக் கண்டும் கிஞ்சித்தும் இரக்கம் காட்டாத

மை வாகனன் ;

‘மை’என்றால் ஆடு. ஆட்டை வாகனமாக உடையவன் அக்னி தேவன்

வந்தே வயிற்றினிற் பற்றினனே ;

இந்நேரம் பார்த்து எனது வயிற்றினுள் புகுந்து கொண்டான். பெரும் பசியும் அக்கினி போல் வயிற்றில் கொழுந்து விட்டு எரிகிறதே!

உண்ண வைத்திருந்த உணவை நாயும் கவ்விக் கொண்டு போனதால், பசியும் வயிற்றில் கொழுந்து விட்டு எரிகிறதாம்! இந்த நிகழ்வைச் சொல்லத் தான் என்ன நயமான பாடல்?!

அடுத்த வாரம் மேலும் ஒரு பாடலுடன் சந்திப்போம்.