
14. லாகின்யம்பா ஸ்வரூபிணீ
லாகினீ லலானாரூபா லஸத்தாடிம-பாடலா|
லஸந்திகா லஸத்பாலா லலாட- நயனார்ச்சிதா||
அம்பிகைக்குப் பாரபட்சமில்லை என்று பார்த்தோம்.
உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஜாதி மதம் என்று எந்த பேதமும் இல்லாமல் பாரபட்சமில்லாமல் அன்பு காட்டுபவள் அன்னை. எனவேதான் அவளை சமஸ்த பக்த ஸுகதா லாகின்யம்பா ஸ்வரூபிணி என்கிறது சஹஸ்ரநாமம். தன்னுடைய அம்சமாகவேதான் அவள் ஸ்திரிகளைப் படைத்திருக்கிறாள்.
காணும்போதே கண்களைக் குளிர்விக்கும் மலர்ந்த மாதுளம் பூ நிறத்தவள். பாதிரிப் பூ போன்ற வண்ணம் உடையவள். அபிராமி அந்தாதியும்
“ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம்பூ நிறத்தாளே”
என்றுதான் போற்றிப் பூரிக்கிறது. தனித்துவமான நிறம்.
சமயபுரம் மாரியம்மனும் மாதுளம் பூ நிறம். எந்நேரமும் சர்வ அலங்காரத்துடன் பிரகாசிப்பாள். நெற்றிச் சுட்டி மின்ன காட்சி தருபவள். அதன் ஒளியுடன் போட்டி போடும் அவள் புன்னகை. சர்வாலங்கார பூஷிதா என்றுதானே கூறுகிறது சஹஸ்ரநாமம்.
மகாராணி தன் சிம்மாசனத்தில் வந்து அமரும்போது சர்வ அலங்காரங்களுடன், கம்பீரமாக தோற்றம் அளிப்பது வழக்கம்தானே. மும்மூர்த்திகளாலும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும் பூஜிக்கப் பட்ட அவள் அதிகர்வியாய் இருப்பதில் என்ன அதிசயம்?
பரம்பொருளான ஈசனாலேயே பூஜிக்கப் படுபவள். சக்திக்குள் சிவன் அடக்கம். “தாயே உன் கணவனான ஈசன் உன் முகத்தையே பார்த்து ரசிக்கிறார். நீதான் என் குறைகளை அவரிடம் சொல்ல வேண்டும்” என்கிறார் ஸ்ரீ சங்கரர் சௌந்தர்யா லஹ்ரியில். இதில் ஸ்ரீ மூகர் ஒருபடி மேலே போய் அம்பிகையை தோத்திரம் செய்வதில் சொல்லாற்றல் மிகுந்த பிரஹ்மா கூட திறமையற்றுப் போய் விட்டார் என்கிறார்.
அவரே அப்படி எனும்போது நான் எம்மாத்திரம்?
ஆனால் உன் திருவடிகளைத் துதிப்பதில் உள்ள ஆர்வம் என்னையும் பேச வைக்கிறது என்கிறார்.
“ஸ்தோதும் த்வாம் பரிஃபுல்லநீல நலினச் யாமாக்ஷி
காமாக்ஷி மாம் வாசாலீ குருதே ததாபி நிதராம் த்வத்
பாத சேவாதர:”
என்கிறார்.
அம்பிகையிடம் பேசும்போது ஒரு தாயிடம் பேசுவது போல் உரிமையுடன் பேச வேண்டும். அவள்தானே நம் தாய். அம்மாவிடம் குழந்தை கேட்காமல் வேறு யாரிடம் போய்க் கேட்கும்?
நாம் எப்படி நினைக்கிறோமோ அவ்விதத்தில் நமக்குக் காட்சி அளிப்பவள். பராசக்தியின் அம்சங்கள்தான் அனைத்து தெய்வ உருவங்களும், மாரியம்மன், என்றாலும், மகா காளி என்றாலும், சாமுண்டி என்றாலும், துர்க்கை என்றாலும் அனைத்தும் அவள்தான்.
நீ எவ்விதமானவளோ, அவ்விதமானவள். நீ இப்படிப் பட்டவள், இவ்விதமானவள் என்று அறிவதற்கும், சொல்வதற்கும், யார் சக்தி உடையவன் என்று கேட்கிறார் நீலகண்ட தீட்சிதர் தன் ஆனந்த சாகர ஸ்தவத்தில்.
அம்பிகையின் ஸ்வரூபம் கற்பனைக்கு எட்டாதது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இந்தப் பிரபஞ்சமே அவள்தான். அதிலிருந்து சக்தியின் அம்சமாகத் தோன்றியதுதான் மற்ற தேவதா மூர்த்திகள்.
நம் இயல்பே நமக்குத் தெரிவதில்லை. இதில் அம்பிகையைப் பற்றி சகலமும் தெரிந்தது போல் சொல்ல தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார் தீட்சிதர்.எல்லாம் அறிந்தவன் போல் உன்னைப் பற்றிப் பாடி உன்னிடத்திலேயே அந்தச் ஸ்தோத்திரங்களை அர்ப்பணம் செய்ய வெட்கப் படுகிறேன் என்கிறார். ஆனால் தாய் தன குழந்தை தன்னைப் போற்றுவதை ரசிக்கத்தானே செய்கிறாள்.!
என் தாய் போல் உண்டா என்றாள் அது அவளுக்கு ஆனந்தம்.
ஆனால் அன்னையிடம் வெட்கம் எதற்கு? அவளிடம் நம்மை ஆத்மா சரணாகதி செய்துவிட வேண்டும். பக்தி பூர்வமாய் ஆத்மா சமர்ப்பணம் செய்வது ஒன்றே அம்பிகையை அடைய ஒரே வழி. மோட்ச நிலை அடைய அது மட்டுமே உதவும்.
பிரார்த்தனைகளில் உயர்ந்தது அவளைச் சரண் அடைவதே.
எனக்கு என்ன தர வேண்டும் என்பது உனக்குத் தெரியும். நீ தருவதே அனைத்திலும் சிறந்ததாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சரண் அடைந்து விட வேண்டும். வேறு வழி இல்லாமல் அனைத்திலும் சிறந்த ஒன்றையே அவள் நமக்கு அளிப்பாள்.
மனிதன் வாழும் நாள் வரை சகல சௌபாக்கியங்களையும் அடைந்து முடிவில் மோட்சம் அடைய விரும்புகிறான். அம்பிகையிடம் சரண் அடைந்து விட்டால் அவள் நாம் வேண்டுவதை எல்லாம் தந்து விட்டு, முடிவில் எல்லையற்ற இன்பமாய் தன் திருவடிகளில் சேரும் பாக்கியத்தையும் தந்து விடுகிறாள்.
அவளைப் போற்றி ஸ்தோத்திரம் செய்வது மட்டுமே நம் கடமை.
**********************

Leave a comment
Upload