தொடர்கள்
விகடகவியார்
கண்ணீர் -விகடகவியார்

கருணைப் பணி

20260623205212395.jpeg

அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியின் போது இறந்தால் அவர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி அரசு பணியாளர் இறந்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்படி விண்ணப்பிக்கும் வாரிசுகளுக்கு காத்திருப்பு வரிசை பட்டியல் படி பணி நியமன் ஆணை வழங்கப்படும். கருணைப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப பணி நியமனம் வழங்கப்படும். இதுதான் அரசின் நடைமுறை.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து கருணைப் பணிக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த காத்திருப்பதற்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் வெளியிட்ட ஒரு அரசாணை.

அதன்படி காலியாக உள்ள பணியிடங்களில் அல்லது புதிதாக உருவாக்கப்பட்ட பணிகளில் 5 சதவீதம் மட்டுமே கருணை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்பது. இது தவிர அலுவலக உதவியாளர் பணிகள் இப்போது அரசு அலுவலகங்களில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் இந்தப் பணிகளை செய்து வருகிறார்கள்.

கருணை பணி நியமனத்தில் அலுவலக உதவியாளர் நியமனம் என்பது இல்லவே இல்லை என்று ஆகிவிட்டது. ஆனால், அப்படி குறைந்தபட்சகல்வி தகுதி உள்ள கருணைக் பணிக்காக காத்திருப்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

இப்போது அவர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நிலைமை இப்படி இருக்க கட்சிக் கூட்டத்திற்காக கரூர் பொதுக் கூட்டத்துக்கு வந்து நெரிசலில் இறந்து போன 32 குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியது நிச்சயம் பாரபட்சமானது.

ஏற்கனவே அவர்களுக்கு நிவாரணமாக தமிழக வெற்றி கழகம் உள்பட அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட 28 லட்சம் வழங்கி இருக்கிறார்கள்.

இது தவிர தமிழக வெற்றி கழகம் மாதந்தோறும் நிவாரணத் தொகையாக 5000 வழங்குகிறது.

அவர்கள் குடும்பத்தின் கல்விச் செலவையும் தமிழக வெற்றி கழகம் பார்த்துக் கொள்வதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு இந்த கருணை அடிப்படையில் பணி என்பது சர்ச்சையாகி இருக்கிறது.

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தற்சமயம் வழக்கு நடைபெறுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இட ஒதுக்கீடுக்காக போராடி இறந்து குடும்பங்களுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

இந்தப் போராட்டம் நடந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டது.

எம்ஜிஆர் ஆட்சியில் நடந்தது. பாரதிய ஜனதா 1998 பிப்ரவரி மாதம் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை குறி வைத்து கோவை மாநகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 50 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.

அவர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்கிறது பாஜக.

சமீபத்தில் கூட சிறையில் சிறை காவலர்கள் தாக்கப்பட்டு மரணம் அடைந்த மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கியிருக்கிறது. 25 ஆயிரம் பேர் மீது கருணையே இல்லாத இந்த அரசு.