தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 34 – மோகன் ஜி

“இரத்தலும் ஈதலும் ”

20260707075702376.jpeg

இரத்தல் பற்றியும் ஈதலைப் பற்றியும் புறநானூறு கூறும் ஒரு அரிய பாடலை இன்று பார்ப்போம்.

வள்ளல் பெருமகன் வல்வில் ஓரியின் அரண்மனைக்கு புலவர் கழைதின் யானையார் பரிசில் பெற்றுத்திரும்ப எண்ணிச் சென்றிருந்தார்.

ஏதோ முக்கியமான மந்திராலோசனையில் இருந்த அரசர் ஓரி புலவரை சந்திப்பதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டது. ஒருவாறாக புலவரும் பரிசில் பெற்றுக் கொண்டு திரும்பினார்.

ஏனோ அந்த தாமதம் புலவர் நெஞ்சில் முள்ளாகத் தைத்து விட்டது. இன்னொருவரிடம் யாசகம் கேட்டுச் செல்வதின் இழிவையும் அதே நேரம் இரப்போர்க்கு ஈய மறுப்பதும் பற்றி சிந்தித்தார். வல்வில் ஓரியின் கொடை குணமும் அவர் நெஞ்சில் நன்றியோடு சுரந்தது.

அவர் எண்ண ஓட்டம் கீழ்க்கண்ட அற்புதமான பாடலாக விரிந்தது.

இனி பாடல் :

யென இரத்தல் இழிந்தன்று; அதனெதிர்

ஈயேன்என்றல் அதனினும் இழிந்தன்று ;

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று- அதனெதிர்

கொள்ளேன் என்றல்அதனினும் உயர்ந்தன்று.

தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங்கடல்

உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே!

ஆவும் மாவும் சென்று உண கலங்கி

சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும்

உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும் !

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை,

உள்ளிச் சென்றோர் பழியலர்- அதனால்

புலவேன் வாழியர், ஓரி ! விசும்பில்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே !

இந்தப் பாடலின் பொருளாவது :

ஒருவரிடம் சென்று தனக்கு தர்மம் செய்யுமாறு இரத்தல் இழிவான செயலாகும்.

அப்படி இரக்கும் ஒருவருக்கு, இல்லை என்று சொல்லி ஏதும் தராமல் திருப்பி அனுப்புவது, இரத்தலினும் மிகுந்த இழிவான செயலாகும். ஒருவருக்கு, பொருளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தி தருவது பண்பான செயலாகும்.

அதே நேரம், அப்படித் தரப்படும் பொருளை வேண்டாம் என மறுதலித்து தவிர்த்து விடுதல் ஈவதை காட்டிலும் மிகவும் உயர்ந்த செயலாகும்.

பெருங்கடலில் பயணம் மேற்கொள்வோர் தமக்குத் தாகம் உண்டாகும் போது கடல் நீர் தெளிந்ததாயினும் அதைக் குடிக்க மாட்டார்கள்.

ஆனால், ஆவினங்களும் காட்டில் வாழும் மிருகங்களும் நீரை அருந்துகையில், தம் கால்களால் அளைந்ததால் கலங்கியிருக்கும் குளத்தின் நீராக இருந்தாலும் கூட, தங்கள் தாகத்தை தணித்துக் கொள்ள அந்த நீரையே தெளிய விட்டு அருந்துவார்கள்.

உன்னிடம் பொருள் வேண்டி வந்தோர்க்கு ஏதும் கிடைக்காவிட்டாலும், தாம் வந்த நேரம் சரியில்லை என்றுதான் நோவோமே அன்றி, வள்ளலே! உன்னைப் பழித்துரைக்கும் ஈனர்கள் அல்ல புலவோர்.

20260705192059734.jpeg

கருமேகங்கள் சூழ்ந்து மழையாகப் பொழியும் வானம் போன்ற வள்ளல் அல்லவோ நீ?! வல்வில் ஓரியே! உம்மை நோவதற்கு ஏதுமில்லை! வெறுத்து பழிக்கவும் மாட்டேன்! நீ வாழ்க வள்ளலே! எம் மன்னவனே!!