தொடர்கள்
வலையங்கம்
யார் தந்தது இந்த துணிச்சல்

2026100706380452.jpeg

"தமிழகம் முழுவதும் மாநகராட்சி அலுவலகங்கள் உட்பட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 8.21 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் ஜி.பே மூலம் 1.50 கோடி சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. "சென்ற வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பு இது.

லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைகளில் ஜி பே மூலம் அதாவது போன் பண பரிவர்த்தனை மூலம் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பு தெளிவாக தெரிவிக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு விலைவாசி படி, வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, கல்வி படி, ஊதியம் என்று அரசின் நிதி வருவாயில் கிட்டத்தட்ட 60% ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கே சென்று விடுகிறது என்று நிதித்துறை செயலாளர் சமீபத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இப்படி சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு மனசாட்சியே இல்லாமல் தாங்கள் செய்ய வேண்டிய வேலைக்கு லஞ்சம் தர வேண்டும் என்று அப்பாவி மக்களிடம் அடாவடியாக வசூல் செய்வது என்பது வெட்கக்கேடான செயல். அதைவிட கேவலம் வாங்கும் லஞ்சத்தை மறைமுகமாக இல்லாமல் அதிகாரப்பூர்வமாக போன் மூலம் வங்கிக் கணக்கில் லஞ்சப் பணத்தை செலுத்த சொல்வதன் மூலம் தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சல் அல்லது இந்த லஞ்சப் பணத்தில் பங்கு கேட்கும் மேலிடம் ஏதோ ஒன்று என்பதால் தான் இந்த துணிச்சல் நடவடிக்கை என்பது தெரிகிறது.

இது போன்றவர்கள் மீது நடவடிக்கை என்பது கடுமையாக இருக்க வேண்டும். அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்பட தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட போன் பரிவர்த்தனை மூலம் லஞ்சம் வாங்கும் அதிகாரத்தை தந்த அந்த மேலிடமும் கடுமையான தண்டனைக்கு ஆட்கொள்ள வேண்டும். அவர்கள் மீதும் நடவடிக்கை கடுமையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும்.