
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத அரசாங்கம் மற்றும் அறங்காவலர்கள் வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியபடி மத்திய படைகளின் உதவி எதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்கவில்லை. அதற்கு பதில் நவம்பர் 23-ஆம் தேதி இரவு முதல் நவம்பர் 24 வரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்து வந்த தமிழக பாரதிய ஜனதா தலைவர் நைனார் நாகேந்திரன் உள்பட 300-க்கும் அதிகமானவர்கள் திருப்பரங்குன்றம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
இது நிச்சயம் நீதிமன்ற அவமதிப்பிற்கு உட்படும் என்று தெரிந்து அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தில் 16 பக்க அறிக்கையை தாக்கல் செய்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நவம்பர் 24-ஆம் தேதி மாலை ஆறு மணி முதல் 6:30 மணிக்குள் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 10 நபர்கள் கொண்ட குழுவினரால் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் .வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். கோயில் வழக்கப்படி தீபம் ஏற்றும் முறையைச் செயல் அலுவலர் முடிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே 21-ஆம் தேதி உத்தரவு மீதான மேல் நடவடிக்கைக்காக இரவு ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி கோயில் நிர்வாக முன்மொழிவு மற்றும் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மூன்றாவது ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றன.
தேவஸ்தானத்துக்கும், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கும் அனுப்பப்பட்ட முதல் கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட குழுவினரால் மட்டுமே தீபம் ஏற்றப்பட வேண்டும் என சுட்டிக்காட்டி, நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பிற்பகல் 3 : 47 மணியளவில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தான அங்கீகாரம் இன்னும் வராததால் ஒப்புதலை உடனடியாக வழங்குமாறு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு தீபம் ஏற்ற வரவில்லை. அந்தக் குழுவின் பட்டியலையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை. உச்சிப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்ற, அறங்காவலர் குழு தீர்மானித்து அதன் காரணமாக தீபத் தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. கோவில் நிர்வாகம் அங்கீகரிக்காத நிலையில் மாற்று நபர்களை நியமிக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை.
நீதிமன்ற உத்தரவை நல்லெண்ணத்துடன் செயல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன. வேண்டுமென்றே நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை இருப்பினும் தீபம் ஏற்றப்படாததற்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து அமைப்பினர் அறங்காவலர் குழு மீது பழி போட்டு மாவட்ட ஆட்சித் தலைவரை மன்னிப்பு கேட்க வைத்து தப்பிக்க பார்க்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல் அலுவலர், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் செயல்படுவதற்கு என்ன சட்ட அதிகாரம் உள்ளது என்பதை பொதுவெளியில் தெளிவுபடுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் தீபம் ஏற்ற நான் தயாராக இருந்தேன் என்கிறார்.
அறங்காவலர் குழு தன்னை மீறிய அதிகாரம் உள்ள ஒரு அமைப்பு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆஜராகும் போது மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. அறங்காவலர் குழு சர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு என்ற விஷயத்தை இப்போதுதான் மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்கிறார்.
ஆகம விதிப்படியும் ஸ்தானிக பட்டர்களின் கருத்து அடிப்படையிலும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் சொல்லி இருக்கிறது. ஆனால், இதை ஸ்தானிக்கப்பட்டர்கள் மறுக்கிறார்கள் .தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை என்கிறார்கள். அதேபோல் மாவட்ட ஆட்சித் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தீபத்தூண் என்று குறிப்பிடாமல் அது ஒரு எல்லைகல் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். உயர் நீதிமன்றத்திலும் அது தீபத்தூண் அல்ல என்று தான் மாவட்ட ஆட்சித் தலைவர் சொல்லி இருக்கிறார்.
இந்து அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். மேலும் ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாதது பற்றி முதல்வரிடம் அறிக்கை கேட்டிருக்கிறார்.

Leave a comment
Upload