பொது
“ம் என்றால்அபராதம்! ஏன் என்றால் கன்னத்தில் நான்கு அறைகளோடு சிறைவாசம்...!"- தில்லைக்கரசி சம்பத்

20190807044703207.jpeg

சார்.. இனிமே ஆஃபிஸை விட்டு கரெக்டா 6 மணிக்கு ஷார்ப்பா கிளம்பிடுவேன்...

மேனேஜர்: ஏன்யா..?

சம்பளம் பத்த மாட்டேங்கிது சார்.. சாயங்காலத்துக்கு மேல ஆட்டோ ஓட்டி பொழைக்கிறேன்...

மேனேஜர்: ஓ.. சரி..!! லைசன்ஸ் பெர்மிட்டு இன்சூரன்ஸ் எல்லாம் வச்சிக்கிட்டு ஓட்டுயா.. ஆட்டோ ஓட்ற நேரத்தில பசிச்சா அப்படியே அண்ணாநகர் ரவுண்டானா பக்கம் வாயா...!

எதுக்கு சார்..?

மேனேஜர்: அங்க தான் நான் பரோட்டா, ஃபரைட் ரைஸ், இட்லி, தோசை எல்லாம் விக்கிறேன்.. நானும் பொழைக்க வேண்டாமா..!!!!?

இப்படிதான் நாட்டின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருது...

பின்ன டெல்லியில ஸ்கூட்டி ஓட்டுனவர் கிட்ட ஹெல்மெட் இல்ல... அது இல்ல.. இது இல்லன்னு சொல்லி, போலீஸ் ரூ. 23000 அபராதம் போட... அந்த ஆளு, என் ஸ்கூட்டரே வேணாம்... நீங்களே வச்சிக்கிங்கனு போலீஸ்கிட்ட ஒப்படைச்சிட்டு கிளம்பிட்டாரு.

ஒரிசாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 47,000. ஹரியானாவில் 2, 3 ஓட்டுநர்களுக்கும் இதே போல் ரூ37,000, 25,000 என அபராதம்..

மூனு வேளை சோத்துக்கு அல்லாடுபவனுக்கு 47000 அபராதமாம்... மாசம் 15,000 சம்பாதிக்கிற ஆட்டோக்காரர்கிட்ட 47,000 அபராதம் போட்டா, அவர் எங்க போவாரு அத்தனை பணத்துக்கு? அபராதம் செலுத்த முடியாட்டி, அவரை சிறையில் போட்டால் அவர் வருமானத்தை நம்பி இருக்கும் அவர் குடும்பம் எப்படி சாப்பிடும்? தண்டனை ஒருத்தரை திருத்த தான் கொடுக்கனும்.. சாகடிப்பதற்கு இல்லை.. இப்படி அநியாயமாக தண்டனை கொடுக்கும் அளவிற்கு அரசாங்கமும் அதன் துறைகளும் மிக ஒழுங்காக, ஒழுக்கமாக, நியாயமாக இயங்கி வருகிறதா?.. ஒரு சாதாரண ஓட்டுனர் லைசன்ஸை கையூட்டு தராமல் ஆர்டிஓ வில் வாங்கி விட முடியுமா?

முக்கியமாக தகுதி இல்லாதவர்களுக்குக்கூட எந்த டிரைவிங் டெஸ்ட்டிலும் பாஸ் செய்யாவிடிலும் கையூட்டு வாங்கி கொண்டு, ஓட்டுநர் உரிமம் கொடுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு யார் அபராதம் போடுவது?

காலாவதி ஆன வாகனங்களுக்கும், குறைபாடுகள் உள்ள வாகனங்களுக்கும், பள்ளி வாகனங்களே ஆனாலும் சரி.. மனசாட்சியே இல்லாமல் லஞ்சம் பெற்று கொண்டு உரிமம் புதிப்பித்து கொடுத்து, பல விபத்துகளுக்கு வழி வகுக்கின்ற அரசாங்க துறைகளுக்கு யார் அபராதம் போடுவது?

எந்த அரசு சான்றிதழ்களுக்கும் இதே கதி தான்..

எல்லாமே கோணலாக இருக்கும் நாட்டில் சட்டம், சட்டம் என கூறி சாமானியனுக்கு இவ்வளவு அபராதம் போட்டால் என்ன செய்வான்? என்று மக்கள் கேட்கிறார்கள்... அதே போல், அனைத்து மோட்டார் வாகன சட்டங்களை மீறுகிற அரசாங்கத்துக்கு அபராதம் கிடையாதா?

55 பேர் தான் சட்டப்படி பயணிக்க வேண்டிய அரசு பேருந்துகளில் புளி மூட்டை போன்று இருமடங்கு பயணிகளை ஏற்றி செல்கிறீர்களே? இது விதிமீறல் இல்லையா... பத்தாததுக்கு பேருந்தின் ஜன்னலை பிடித்து கொண்டு ஆதிமனிதன் போல் தொங்கிக் கொண்டு போகும் பயணிகளுக்கு என்ன பாதுகாப்பு..?

பேருந்துக்கு விபத்து நேர்ந்தால் பயணிகளை காப்பாற்றும் சீட் பெல்ட் எங்கே..?"அடப்போய்யா.. அங்க ஏற படிக்கட்டும், உட்கார சீட்டுமே இல்லையாம்.. இதுல சீட் பெல்ட்டாம்.. பஸ்ஸு உள்ளே ஓட்டை இல்லாம இருந்தா போதாதா?" என்கின்றனர் பாவப்பட்ட பயணிகள்..

நம் நாடு பல விசித்திரமான பேருந்துகளை சந்தித்திருக்கிறது என்பது போல பஸ்ஸுக்குள் மழை என ஓட்டுநரே கையில் குடை பிடித்துக் கொண்டு ஒரு கையால் ஸ்டியரிங்கை பிடித்து பஸ் ஓட்டும் கொடுமைகளெல்லாம் பார்க்கிறோம்.. பாதுகாப்பு இல்லாத பேருந்துகளுக்கு யார் சார் அபராதம் போடுவார்கள்?

சாலைகள் எல்லா இடங்களிலும் மேடு பள்ளம் குழிகள் இல்லாமல் சீராக இருக்கின்றதா? மோசமான சாலைகளுக்கு யாருக்கு அபராதம் போடுவார்கள்?

15 நாட்களில் 7 மாடி கட்டிடம் கட்டும் இந்த நவீன காலத்தில், ஒரு மேம்பாலம் கட்டுவதற்கு பல வருடங்கள் எடுத்து இன்னும் முடிக்காமல் எல்லா வாகனங்களுக்கும் ஒரே வழிப்பாதை ஆக்கி ஊரையே சுற்றி சுற்றி வரச் செய்து, பெட்ரோல், டீசல் விரயம் ஆக்கி, காற்று மாசு அதிகரிக்க செய்கிறீர்களே? கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் திட்டங்களை முடிக்காது மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் அரசுக்கு யார் அபராதம் போடுவார்கள்?

சாலையில் ஸ்பீட் ப்ரேக்கர் போடுறீங்களே...? அதில் பல ஸ்பீட் பிரேக்கர்களில் வெள்ளை கலர் பெயிண்ட் அடிக்காமல் விடுவதால், இருட்டில் பைக் ஓட்டிகள் மோதி விழுந்து செத்து போகிறார்களே..! பெயிண்ட் அடிக்காமல் விட்டதுக்கு யாருக்கு அபராதம் போடுவது..?

ஹெல்மெட் போடாததால் போலீஸுக்கு பயந்து நிற்காமல் போகும் பைக்குகளை என்னவோ கொலைக்காரர்களை பிடிப்பது போல, தங்கம், போதை பொருள் கடத்தி போகிற மாதிரி துரத்தி சென்று லத்தியால் அடித்தோ, காலால் வண்டியை உதைத்தோ கீழே தள்ளி சாகடிக்கிறீர்களே..! இப்படிப்பட்ட குரூர நடத்தைகளுக்கு யார் சார் தண்டனையும், அபராதமும் போடுவார்கள்?

ஓட்டுறவன் செத்தாலும் பரவாயில்லை.. நாம் சட்டத்தை நிலைநாட்டுவோம் என பணிபுரியும் காவலர்களின் கடமை உணர்ச்சி, நம்மை புல்லரிக்க செய்கிறது. கர்ப்பிணி பெண் பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தால் கூட விடுவதில்லை..

அதே சமயம் அரசியல்வாதிகள்,போலீஸ்காரர்களின் பினாமி வண்டிகளான ஷேர் ஆட்டோக்கள் பண்ணுகின்ற அநியாயங்களை அபராதம் போட்டு சட்டத்துக்கு உட்பட்டு நடக்கச் சொல்வீர்களா..?

சாராயம் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் ரூ10000 அபராதம் என்றால் சாராயம் விற்பவனுக்கு எவ்வளவு அபராதம்..? விபத்துக்கள் நேர்வதற்கு குடிதான் காரணம் என்றால் விபத்து ஏற்படுத்தும் சாராயத்தை ஏன் விற்கிறீர்கள்...? குடிக்க டாஸ்மாக் வருபவன் பின் எப்படி வீடு திரும்புவான்!


போற உசுரு குடியிலே போகட்டும் என்று அரசு இரக்கம் கொண்டு, “யப்பா குடிராசா..! குடிச்சுட்டு மெதுவா நடந்து போய் வீட்டுக்கு போய் தாச்சுக்கப்பா..!” என்று கூறுகிறதா அரசு..?

ஆனால், இதில் மிக மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் யார் தெரியுமா?


“காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது..” என கொண்டாட்டம் போடுபவர்கள் தாம்.பின்னே 100, 200 வாங்கி கொண்டு இருந்தவர்கள், இப்போது....


“டிராஃபிக் விதி மீறலா..? அரசாங்க அபராதம் 5000... நீ எடு 2000..! ரெண்டுல எது வேணும்..?”

“குடிச்சிட்டு வண்டி ஓட்டுறியா? கவர்மெண்ட்டு அபராதம் 10000..! நீ எடு 4000..! ரெண்டுல எது வேணும்..?”

“டிரைவிங் லைசென்ஸ் இல்லையா..!? அ.அபராதம் 5,000! நீ எடு 2000..! ரெண்டுல எது வேணும்..?”

“வாகனத்துக்கான பர்மிட் இல்லையா..!? அ.அபராதம் 10,000. நீ எடு 5000..! ரெண்டுல எது வேணும்..?”

“இன்ஷூரன்ஸ் இல்லையா..!? அ.அபராதம் 2,000. நீ எடு 700..! ரெண்டுல எது வேணும்..?”

என்று நமக்கு சாய்ஸ் கொடுத்து, பொதுமக்களை அதிக பணச்செலவிலிருந்து காப்பாற்றுகிறார்கள்.. அட பரவாயில்லையே..! அரசுக்கு இல்லாத இரக்கம் நம்ம போலீஸுக்கு இருக்கிறதே என்று காசை கொடுத்து விட்டு, வயித்தெரிச்சலோடு நகருகிறான் சாமானியன்... கொடுக்க வக்கில்லாதவன் 'என்னை ஜெயில்ல வேணாலும் தள்ளு என்கிட்ட காசில்ல'னு நிராயுதபாணியாக நிற்கிறான்.

கொசு உற்பத்தியா..? கட்டிட உரிமையாளர்களுக்கு போடு ஒரு லட்சம் அபராதம் என கூறுகிற அரசு இங்குள்ள அரசு. மருத்துவமனைகளில் நோயாளிகளின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து விளைவிக்கும் காரணிகளாக விளங்கும் மலை போன்ற மருத்துவ கழிவுகளும் வெள்ளமாக சாக்கடை நீரும் தேங்கிக் கிடக்கின்ற அசிங்கத்தை யார் சுத்தம் செய்வார்கள்? சில வருடங்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் இதே போன்ற சுகாதார கேட்டினால் பாதிக்கப்பட்டு ஹாஸ்டல் மருத்துவ மாணவர்கள் நான்கு பேர் உடல் நிலை சரியில்லாமல் போய் உயிரிழந்ததும், பல மாணவர்கள் உடல் நிலை சரியில்லாமல் போனதும், கல்லூரிக்கு தொடர் விடுமுறை அளித்ததும் எல்லாம் செய்திகளில் வந்தது...


இப்படி அரசாங்க மருத்துவமனைகள், அலுவலகங்கள் என எதையுமே சுத்தம் இல்லாமல் வைத்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு யார் அபராதம் போடுவது?


நிலவை தொட முடிகிற அரசால் சாமானியனின் வாழ்வை செம்மைப் படுத்த முடியாமல் திண்டாடுகிறது.. வரிக்கு மேல் வரி, சின்னக் குற்றங்களுக்கு கூட பெரும் அபராதம், சிறைவாசம் என அடிக்கு மேல் அடி வாங்கி, தள்ளாடிக் கொண்டு நிற்கிறான் அந்த சாமன்யன்.!.. வல்லரசாக ஆகப் போகிறோம் என கூறி விலா எலும்புகள் தெரிய நிற்கும் வறியவனிடம் தாங்க முடியாத பளுவினை தூக்கி அவன் தலையில் அராஜகமாக வைக்கிறது அரசு..


“ம் என்றால்அபராதம்! “ஏன்” என்றால் கன்னத்தில் நான்கு அறைகளோடு சிறைவாசம்...! என சற்றே மாற்றிய பாரதியின் வரிகளின் போல நிலைமை ஆகிவிட்டது... இந்தப் பாடல் அவர் ரஷ்யாவின் கொடுங்கோல் ஆட்சியை பற்றி எழுதியது.. கடைசியில நம்ம நாட்டிலேயே அத உண்மை ஆக்கிட்டீங்களே பாஸ்..!