சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த போது, வார இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த சன்கோஸ்ட் காசினோ தியேட்டரில் 'நேர் கொண்ட பார்வை' தமிழ்ப்படம் ஓடுகிறது என்று தெரிந்து ஓடிச் சென்றேன்.
(அரங்கம் நிறைந்திருந்தாலும் அஜீத் திரையில் வரும் போது டிஸ்டிரிப்யூட்டர்கள் படம் பார்ப்பது போல் படு அமைதியாக இருந்தது கொஞ்சம் நெருடியது.)
படம் பார்க்குமுன் எதேச்சையாக ஒரு இந்தியர் எதிர் கொண்டார். 'இந்தியாவா' என்றார். உற்சாகமாக 'ஆமாம். படம் பார்க்கப் போகிறேன்' என்றவுடன் 'டர்பனில் வந்து ஒரு மாலைப் பொழுதை சினிமா பார்த்து வீணாக்கலாமா? பீச்சுக்கு போங்களேன்' என்றார். அவரிடம் 'அஜித் படம் இன்று விட்டால் வாய்ப்பில்லை' என்றதும் 'ஓஹ்.. சரி.. சரி.. எனக்கு காசினோவில் இலவச டிக்கெட் கிடைக்கும் எடுத்துத் தருகிறேன்' என்றார்.
'அது மட்டுமல்ல நாளை டர்பன் இந்தியா தினம் நடக்கிறது. ஏராளமான இந்தியர்கள் மற்றும் கலை நிகழ்சிகளைப் பார்க்கலாம்' என்றார்.
தன்னை ரெட்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம், 'அட ஆந்திராவா எப்படி இங்கு வந்தீர்கள்?' என்றவுடன் சொன்ன சரித்திரம் சுவாரஸ்யமானது.
முதல் இந்தியர்கள் 1860-ல் வந்து இறங்கியிருக்கிறார்கள். விவசாய வேலைகளுக்கு அடிமைகள் போலத்தான் நம் மூதாதையர்கள் வந்திறங்கியிருக்கிறார்கள். அப்படியே தலைமுறைகள் தொடர்ந்து நாய்டு, ரெட்டி என்ற அடைமொழிகள் மட்டும் நிலைத்திருக்க இந்தியக் கலாச்சாரம் வீட்டில் தெரிந்தாலும் தத்தம் தாய்மொழிகளை மறந்து விட்டுத் தான் அடுத்தடுத்த தலைமுறை வளர்ந்திருக்கிறது.
"எங்க தாத்தாவிற்கு அப்பா தான் ஆந்திராவிலிருந்து முதலில் வந்தார். ஏன் வந்தார் என்றால் அப்போது அவரது சகோதரருடன் ஏற்பட்ட நிலத் தகாராறில் அவரைக் கொன்று விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தென்னாப்பிரிக்காவுக்கு வந்த கப்பலில் ஏறி வந்து விட்டார். ஆக என்னுடைய கொள்ளுத்தாத்தா ஒரு கொலைகாரர்" என்று சத்தமாக சிரித்தார் ரெட்டி.
மையமாக புன்னைகத்து விட்டு, ஓசி டிக்கெட்டுக்கு நன்றி சொல்லி விட்டு தொலைபேசி எண்னைக் கொடுக்கலாம் என்று நினைத்தவன் கொடுக்காமல் நழுவினேன்.
அடுத்த நாள் நம்ம ரெட்டி சொன்ன, டர்பன் இந்தியா தினம் ஞாயிற்றுக்கிழமை.
இந்த விழா கொண்டாடப்படுவது இது இரண்டாவது வருடமாம்.
சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும், சதாஃபல் நிறுவனமும் இந்திய சங்கத்துடன் இணைந்து இந்த விழாவை கொண்டாடுகிறார்கள்.
சரி, டர்பன்ல யாரு வரப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு ஒரு பத்து மணிக்கு போனால், கொஞ்சம் கூட்டம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் நேரம் போகப் போக மதியம் அரங்கினுள் சுமார் பத்தாயிரம் பேர் வரை கூடி விட்டனர்.
இந்திய தேசிய கீதமும் தென்னாப்பிரிக்க தேசிய கீதமும் இசைக்கத் துவங்கியவுடன் களை கட்டியது விழா.
இந்த விழாவை வெளிநாடுகளில் கொண்டாடப் படும் விழாக்களின் ஃபார்முலா படியே கலை நிகழ்ச்சிகள் ஒரு பகுதியாகவும், விருது வழங்கும் வைபவம் ஒரு பகுதியாவும் பிரிக்கப்பட்டிருந்தது.
இந்திய தூதரகத்தில் பணிபுரியும் கவிதா சோலங்கியின் யோகா நிகழ்ச்சியுடன், துவங்கியது விழா. பிரவேஷ் கேலவான் என்றவர் தேசிய கீதத்தை சாக்ஸபோனில் இசைக்க புல்லரித்தது.
இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் அளித்தவர்கள், அர்ச்சனா ஶ்ரீதர், பிருத்வி கபூர்மத், மைதிலி ஷோம், ரீசா மோட்லீ, அவிஜய் ஹரிசந்த் (தென்னாப்பிரிக்க சூப்பர் சிங்கர் வெற்றி பெற்றவராம்) கீரன் ஈஷ்வர்லால், யுவானி நாய்டு ஆகியோர்கள்.
இது தவிர விஷ்வ சக்தி அகாடமி, நடேஷ்வர் டான்ஸ் அகாடமி, குஜராத்தி சங்கம், ஹிந்து சன்ஸ்கிருதி கேந்திரம், கேரளா சங்கம், தமிழ் சங்கம், ஆந்திர சபா, பஞ்சாபி சங்கம், ஷானான் டான்ஸ் அகாடமி என்று நிகழ்ச்சி நிரல் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் கலை விழாக்கள் திகட்டிப் போகும் அளவு ஒரு நாள் முழுவதும் விரவியிருந்தது.
ஆச்சரியப்பட வைத்த சில கலைஞர்கள்...
தராஷேன் டெல்லான் 19 வயது, 2வது வருட பொறியியல் படிக்கும் இளைஞர் வாசித்த நாதஸ்வரம். தென்னாப்பிரிக்கா போல ஒரு இடத்தில் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு வாசிப்பது ரொம்பவே நெகிழ வைத்தது.
அடுத்ததாக யுவானி நாய்டு. இவரும் இரண்டாம் வருடம் கல்லூரியில் படிப்பவர். இவர்களெல்லாம் எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
அடுத்ததாக இந்திப் பாடல் பாடி கலக்கினார்கள் அவிஜயும் ரீசா மூட்லியும்.
இந்திய சங்கத்தின் தலைவர் அமித் ஷிவாஜி மோரேயுடன் பேச்சுக் கொடுத்தேன்...
"இன்றைய விழாவில் சமூக சேவைகள் செய்த ஜெரால்டு வேதன், நிரோடு பிராம்டா, ஷாமன் தாங்கூர் ராஜ்பன்சி மற்றும் அனில் சூக்கல் ஆகியோர்களுக்கு விருது வழங்கப்போகிறோம்" என்றார்.
"இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்ல வேண்டுமானால் நிறைய நேரம் தேவைப்படும் என்றவர், வலைதளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்.
சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. இங்கு மொத்தம் 23 உணவு ஸ்டால்கள் இருக்கிறது. கவலையே பட வேண்டாம் என்றார்.
திடீரென டர்பன் இந்திய தினம் ஒளிமயமானது. ஆஹா நம்மூர் சாப்பாடு..!
குஜராத்தி உணவு, மும்பை உணவு, தோசை பிரியாணி என விழா அரங்கத்தில் அசத்தி விட்டனர். விலையும் மிகக் குறைவு தான். இது தவிர தாய்லாந்து உணவு, மெக்சிகன் உணவு வேறு. போதும் போதாதற்கு நம்மூர் ஸ்வீட் காரம்...
விழா முடிந்து வெகு நேரத்திற்கு அந்த பாதிப்பு இருந்தது. அதாவது கலை நிகழ்ச்சிகளின் பாதிப்பு!!
அபார்தீட் காலத்தில் இந்தியர்களும் கருப்பர்களும் நுழையத் தடை விதிக்கப்பட்ட இடங்கள் ஏராளம். தென்னாப்பிரிக்காவில் தான் முதலில் இரயில் பெட்டியில் இருந்து காந்தி இறக்கிவிடப்பட்டு, சுதந்திர வேள்வி எழுந்தது நமக்கெல்லாம் தெரிந்த சரித்திரம் தான்.
ஏறக்குறைய பாதி நாள் இந்த விழாவில் கரைந்து விட, ஞாயிற்றுக்கிழமையை உபயோகமாக செலவழித்த திருப்தியில் ப்ளூ வாட்டர்ஸ் என்ற நான் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்தேன்.
தென்னாப்பிரிகாவில் நிறவெறி நீங்கி, டர்பனில் இந்தியர்களை தங்க அனுமதித்த முதல் கடற்கரை விடுதியாம் அது! ஜெய் ஹிந்த்!!
டர்பன் இந்தியா தினத்தின் சுருக்கமான வீடியோ இங்கே...
Leave a comment
Upload