பொது
அசத்தல் வாட்டர் ஏ.டிஎம்கள்! - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை 2000-ம் வருடமே அமுலுக்கு வந்தது. அன்றைய ஆட்சித் தலைவர் சுப்ரியா சாகு, மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தினார்...

20190805203248399.jpg

ஊட்டி சிட்டிசன் ஃபாரம் என்ற அமைப்பு அவருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி, மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அரங்கேறியது. மாவட்ட எல்லையான பர்லியார், குஞ்சைப்பனை, ககனல்லா மற்றும் நாடுகாணி பகுதிகளில் சுற்றுலாக்களையும் பிளாஸ்டிக் எடுத்துவர தடையை ஆட்சியர் விதித்து பஸ், கார்கள், லாரிகள் என்று சோதனை செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் இந்த பிளாஸ்டிக் தடை பற்றி பேசப்பட்டது.

20190805203530978.jpg

சுப்ரியா சாகு 2002 ல் மாற்றல் ஆகி சென்றவுடன் பிளாஸ்டிக் அரக்கன் மீண்டும் நீலகிரியில் எட்டிப் பார்க்க துவங்கினான். பின்னர், தாராளமாக நடமாடி வந்ததின் விளைவு எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் சர்வ சாதாரணமாக உலா வந்த வண்ணம் இருக்க.... புதிய ஆட்சியர் அவ்வளவாக கண்டு கொள்ளாதது பிளாஸ்டிக்கின் தலை அதிகமாக தூக்க ஏதுவாகி விட்டது.

20190805205123881.jpg

குப்பைகளிலும், கால்வாய்களிலும் பிளாஸ்டிக் அதிகமாக மிதக்க ஆரம்பித்து விட்டது. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக நடைபோட்டது. ஊட்டி நகரின் மையப் பகுதியில் உள்ள கோடப் மந்து கால்வாய் முழுவதும் பாலிஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் மிதந்து ஊட்டி ஏரியை ஆக்கிரமித்தது. ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், தண்ணீர் வெளியேறும் பகுதிகளை அடைத்து கிடக்க, மழை கொட்டும் போது தண்ணீர் சாலைகளை ஆக்ரமித்து வெள்ளக்காடாக நகர் முழுவதும் மிதந்து வந்தது. இதே போல குன்னூர் நகரிலும் பிளாஸ்டிக் ஆக்கிரமிப்பு கொடூரமாக தொடர்ந்தது.

20190805204531897.jpg

2017 ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி தற்போதைய ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா 113-வது நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொறுப்பை ஏற்றவுடன், முதலில் பிளாஸ்டிக் அரக்கனை ஒழிக்கும் வேலையில் இறங்கினார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்யாண மண்டபங்களிலும் பிளாஸ்டிக் டம்ளர் மற்றும் வாட்டர் பாட்டில்களுக்கு தடை விதித்தார். ஸ்டீல் டம்ளர் கல்யாண வைபவங்கள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் கூட கட்டாயமாக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்தது. உடனே நீலகிரி மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், உணவு பொருட்களை பயன்படுத்த கூடாது என அறிவித்தது. இதனை நடைமுறை படுத்தும் வகையில் மறு சுழற்சி செய்ய கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாக பயன் படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20190805205014942.jpg

பொதுமக்களும் சுற்றுலாக்களும் குடி நீர் பெற ஏதுவாக மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்கள் என 68 ஸ்பாட்களில் சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரங்கள்... “வாட்டர் ஏடிஎம்” அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்றாம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த வாட்டர் ஏடிஎம்-மை துவக்கி வைத்த ஆட்சியர், வாட்டர் பாட்டில்களுக்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.

2019080520464534.jpg

மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா கூறும் போது, “மாநிலத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கடைகளிலும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுக்கு முழு தடை அமுலுக்கு வந்துள்ளது. எந்தக் கடையிலும் இவற்றை விற்பனை செய்யக் கூடாது.

20190805205255450.jpg

அதற்கு மாறாக மாவட்டத்தில் 68 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி முதல் இந்த வாட்டர் ஏ.டி.எம். மூலம் ஒரு லிட்டர் ஐந்து ரூபாய் காயினை உரிய இடத்தில் செலுத்தி மறுசுழற்சி பாட்டில்கள் மூலம் சுத்தமான குடிநீரை பெற்று அருந்தலாம். ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் இந்த ஏ.டி.எம். மெஷினில் இருக்கும். நீரின் அளவு குறையும் போது, கணினி மூலம் அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இதனால் எந்த தடையும் இல்லாமல் குடிநீர் கிடைக்கும்.

அனைத்து சுற்றுலாக்கள், விசிட்டர்கள் மற்றும் நீலகிரி வாசிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். சோதனை சாவடிகளில், சோதனை செய்யும் போது எடுக்கப்படும் வருத்தமான நடவடிக்கைகளில் இருந்து நீங்கள்தான் தவிர்த்துக் கொண்டு, உன்னத உதகையை உருவாக்க உதவ வேண்டும்” என்று கூறினார்.

20190805210110271.jpg

லயன்ஸ் ஊட்டி கிரௌன் ப்ரெசிடெண்ட் சந்துரு கலடாவை சந்தித்துப் பேசினோம், “நான் ஊட்டி சிட்டிசன் ஃபாரம் தலைவராக 2000ஆம் வருடத்தில் நீலகிரியில் பிளாஸ்டிக் ஓழிப்பு சேவையை துவக்கினோம். அன்றைய கலெக்டர் சுப்ரியா சாகு பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரமாக இறங்கி முழு தடையை கொண்டு வந்தார். அவருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை நல்கி பிளாஸ்டிக் ஒழிப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தோம். தற்போது உள்ள கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா பிளாஸ்டிக் அரக்கனை முற்றிலுமாக ஒழிக்க முடிவு செய்து, எடுத்த நடவடிக்கைகளுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

20190805210418940.jpg

அதன் தொடர்ச்சியாக தற்போது மாவட்டம் முழுவதும் துவக்கியுள்ள வாட்டர் ஏ.டி.எம். நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் இந்த வாட்டர் ஏ.டி.எம். தெலுங்கானா மாநிலத்தில்தான் துவக்கப்பட்டது. பின்னர், டெல்லி என்று முக்கிய நகரங்களில் துவக்கப்பட்டாலும், நம் மாவட்டத்தில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் புதிய வாட்டர் ஏ.டி.எம்-மை துவக்கி வைத்தார். ஐந்து ரூபாய்க்கு ஒரு லிட்டர் என்பது சுற்றுலாக்களுக்கு சிறப்பான திட்டமாக கருதப்படுகிறது. இந்த வாட்டர் ஏ.டி.எம்-களை அவ்வப்பொழுது பராமரிக்க வேண்டியது அவசியம். மாவட்ட ஆட்சியர் கட்டாயம் இதை செய்வார் என்ற நம்பிகை உள்ளது. குறைந்த விலைக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்பது பாதுகாப்பான ஆரோக்கியமான குடி தண்ணீர். மேலும் அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களுக்கும் தடை விதித்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று” என்று கூறினார்.

20190805210654994.jpg

இந்த வாட்டர் ஏ.டி.எம்-கள் மாவட்டத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இதை சரியாக பயன்படுத்த சுற்றுலாக்களும் லோக்கல் மக்களும் கட்டாயம் ஒத்துழைப்பது அவர்களின் கடமை.

டெயில் பீஸ்: மேலும், நீலகிரியில் மற்ற ஒரு அதிரடி தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் பான் பராக் மற்றும் வெத்தலை மென்று எச்சில் துப்புபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஸ்பாட் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஊட்டியில் அமுலுக்கு வந்துள்ளது என்பது சற்றே அதிர்ச்சித் தகவலாக இருந்தாலும், பெரிதும் வரவேற்கக்கூடிய ஒன்று என்றே மகிழ்கிறார்கள் நீலகிரிவாசிகள்!