பொது
பலே ஆன்லைன் திருடன்!

ரூ38 கோடியை மீட்ட பெங்களூர் போலீசார்!

20190812192437501.jpg

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கும் உலக மூதலீட்டு வங்கி கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூருவின் புறநகரில் உலகின் மிகப்பெரிய தனது கிளையை 22.5 ஏக்கர் பரப்பளவில் 1.2 மில்லியன் சதுர அடியில் அலுவலகம் அமைத்தது. பெங்களூரு கோல்ட்மேன் சாக்ஸ் மூதலீட்டு வங்கியில் 9000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியின் அடுத்த மிகப் பெரிய கிளை பெங்களூருவில் தற்போது துவங்கி செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து அனைத்து செயல்பாடுகளும் பெங்களூருவில் இருக்கும் தனது கிளையுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் அமெரிக்காவின் நம்பிக்கையான கிளையாக பெங்களூரு கோல்ட்மேன் சாக்ஸ் திகழ்கிறது.

20190812194130735.jpg

பெங்களூர் மாரத்தஹல்லி காவல் நிலையத்தில் கடந்த 8 தேதி கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் சார்பாக அதன் துணை தலைவர் அஸ்வணி ஜுன்ஜுன்வாலா மீது புகார் அளிக்கப்பட்டது. கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திலிருந்து துணை தலைவர் ரூ38 கோடி கையாடல் செய்து விட்டார் என்பதே குற்றச்சாட்டு . ஆரம்பத்தில் பெங்களூர் காவல்துறை அதிகாரிகளுக்கு அமெரிக்க நிறுவனத்தில் இருந்து புகார் வந்ததும் கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை. தங்களது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி விசாரணையை தொடங்கினார்கள் .

கோல்ட்மேன் சாக்ஸ் துணைதலைவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர் வேதந்த் ருங்தா என்பவருடன் இணைந்து தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து அமெரிக்க கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கியின் கணக்கிலிருந்து பத்து நிமிடத்தில் 5.4 மில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ 38 கோடி) சீனாவில் இருக்கும் இண்டஸ்ட்ரியல் மற்றும் கமர்சியல் வங்கிக்கு ஆன்லைனில் பணம் அனுப்பிய விவகாரம் தெரிய வந்தது. கோல்ட்மேன் சாக்ஸ் பணிபுரியும் பணியாள் கவுரவ் மிஸ்ரா என்பவர் வங்கியிலிருந்து இரண்டு பணபரிமாற்றங்கள் நடை பெற்றுள்ளதை கண்டறிந்து அதற்கான ஆதாரங்களை தேட முயற்சித்த போது இரு பணபரிமாற்ற நிகழ்வில் கோல்ட்மேன் சாக்ஸ் துணை தலைவர் அஸ்வணி தனது கம்பியூட்டர் மூலம் பணபரிமாற்றம் நிகழ்த்தியுள்ளதை கண்டுபிடித்தார்கள்.

அஸ்வணி ஆன்லைன் போக்கர் விளையாட்டில் ரூ47 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.இதனை ஈடுகட்ட மற்ற தனியார் வங்கிகளில் இருந்து ரூ25 லட்சம் கடனாக பெற்றுள்ளதை வங்கியின் கம்ப்யூட்டரில் நடந்த பணப்பரிமாற்றங்கள் காட்டிக்கொடுத்தது.

20190812192604761.jpg

கோல்ட்மேன் சாக்ஸ் துணை தலைவர் அஸ்வணி தனது கீழ் பணிபுரியும் ஜீனியர் பணியாளர்களின் பாஸ்வேர்டுகள் மூலம் தனது நிறுவனத்திலிருந்து பணத்தினை ஆன்லைன் விளையாட்டிற்காக செலவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கோல்ட்மேன் சாக்ஸ் துணை தலைவர் அஸ்வணி தனது ஜீனியர் பணியாளர்களின் கம்பியூட்டரில் உள்நுழைந்து பணி சரியாக நடைபெறுகிறதா என்று சோதனை செய்வது போல் பாவ்லா காட்டி வங்கிக் கணக்கிலிருந்து தான் விரும்பும் ஆன்லைன் போக்கர் வங்கி கணக்கிற்கு பணத்தினை அனுப்பி வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியிலிருந்து பணபரிமாற்றபட்ட வங்கிக்கு எச்சரிக்கை அலர்ட் மெசேஜ் கொடுக்கப்பட்டு சீனாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பபட்ட 5.4 மில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ 38 கோடி) பணத்தினை உடனே பெங்களூரு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் கணக்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடியில் சென்ற பணம் சிந்தாமல் சிதறாமல் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்திற்கு புகார் அளித்த 3 நாளில் திரும்பி வந்தது பெங்களூர் காவல் துறையின் துரித செயல்பாடு என்றே சொல்ல வேண்டும். கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் இணை தலைவர் அஸ்வணி ஜுன்ஜுன்வாலா மற்றும் அவருடன் 2 பேர் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!

பலே ஆன்லைன் திருடன் சீக்கிரமே அகப்பட்டான் !

-ஆர்.ராஜேஷ்கன்னா.