
இராஜபாளையம் நாட்டு நாய் பற்றி தனது மான் கீ பாத் ரேடியோ உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இந்தியர்கள் நாட்டு நாய்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என பேசினார். உடனேயே இராஜபாளையம் நாய் பற்றி நிறைய நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தேடிப் பார்த்து படித்தது வைரல் ஆனாது.
ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ண தேவராயர் சமஸ்தான ஆட்சி தமிழகத்தின் தற்போதைய விருதுநகர் மாவட்டம் வரை பரவி இருந்தது. விஜய நகர பேரரசில் இருந்து வரும் குதிரை வீரர்கள் தங்கிச் செல்வதற்காகவே இராஜபாளையம் என்ற நகரம் உருவாக்கப்பட்டதாக வரலாறு உண்டு.
விஜயநகர பேரரசில் இருந்து இராஜபாளையத்திற்கு வரும் குதிரை வீரர்கள் இங்கு முகாமிட்டு நாய்களை வைத்து காடுகளில் வேட்டையாடி செல்வார்கள். இராஜபாளையத்தில் இப்படி வேட்டைக்கு வந்த நாய்கள் தான் பின்னர் வீட்டு காவலுக்கும் பயன்படுத்தப்பட்டது.
1799 முதல் 1805 ஆண்டில் திருநெல்வேலி பாளையக்காரர்கள் ஆட்சியில் அரசாண்டவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சண்டையிட்டனர். அப்போது நடந்த போரில் இராஜபாளையம் நாட்டு நாய்கள் கிழக்கிந்திய கம்பெனி சார்பாக சண்டையிட வந்த வீரர்களை விரட்டியடித்து தண்ணி காட்டியது என்ற தகவல் உள்ளது.
பாளையக்காரர்கள் ஆட்சியை கிழக்கிந்திய கம்பெனியர் போரில் வென்று ஆட்சியை கைப்பற்றினர். இராஜபாளையம் நாய்கள் பாளையகாரர்கள் போரில் தீரத்துடன் தமது எஜமானர்களுக்காக இறுதி மூச்சு இருக்கும் வரை வெள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டதால் “பாலிகர் ஹுண்ட்ஸ்” என பிரிட்டிஷார் அவைகளை அழைத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக வீட்டிற்கு ஒன்றிரண்டு இராஜபாளைய நாய்களை இன்றும் மக்கள் வளர்த்து “வெள்ளை மூஞ்சி நாய்” என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வருகிறார்கள். இராஜபாளையம் நாய் வெள்ளை நிறத்தில் மூக்கு மற்றும் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் கம்பீர தோற்றத்தில் இருக்கிறது. இராஜபாளைய நாய் கண்களின் வெள்ளைப் பகுதி இரவில் ரேடியம் போல் ஒளிரும் சிறப்புத்தன்மை உடையது.
பிரபல சினிமா இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தன் வீட்டில் ஒரு இராஜபாளையம் நாயை வளர்க்கிறார் என்று இங்குள்ள மக்கள் பெருமையாக சொல்கிறார்கள்.
இராஜபாளையம் நாய் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்ததாகவும், பின்னாளில் நாய்களின் இனப்பெருக்கம் ஒரே குடும்பத்தில் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட மரபு கோளாறால் தற்போது வெள்ளை நிறத்தில் மட்டும் இனப்பெருக்கம் மூலம் இராஜபாளையம் நாய் குட்டிகள் பிறக்கிறது. பிறந்த குட்டி பத்து நாட்கள் கழித்து தான் கண் திறக்கும்.
இராஜபாளையம் நாய் பிறந்த உடன் சில்வர் நிற கண்கள் கொண்ட குட்டிக்கு செவிடு தன்மை ஏற்பட்டிருக்கும் என்று தனியாக நாய் இனப்பெருக்கம் செய்து விற்கும் நபர்கள் பிரித்து எடுத்து விடுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராஜபாளைய நாய்களுடன் இனப்பெருக்கம் செய்ததால் பிறவி செவிடு குறைபாடு தோன்றியதாக தற்போது நாய் வளர்ப்பில் ஈடுபடுவர்கள் கண்டுபிடித்து, வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஆண் மற்றும் பெண்நாய்களை சேரவைத்து இனப்பெருக்கம் செய்து வருவதால், தற்போது இராஜபாளைய நாய்களில் காது கேட்கும் பிறவிக்குறைபாடு நீங்கி வருவதாக நாய் இனப்பெருக்க பண்ணை வைத்திருப்பவர்கள் சொல்கிறார்கள்.
மூன்று மாதத்திற்குள் இருக்கும் இராஜபாளைய நாய் குட்டியை வாங்கி வந்து அதனை நம்மூடன் வைத்து டிரெயினிங் கொடுக்க வேண்டும். இராஜபாளையம் நாய் தனியாக தனது எஜமானர் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்படும் அல்லது குடும்பத்தினருடன் பழகிவிட்டால் அனைவருக்கும் ஏற்ற மாதிரி நடந்து கொள்ளும். பலவித கலப்பினங்கள் தற்போது இராஜபாளையம் நாய் என்று விற்பனை செய்யப்பட்டாலும் வெள்ளை நிறத்தில் இளஞ்சிவப்பு மூக்குடன் இருக்கும் நாய் ஒரிஜினல் நாய் என்று நாய் பண்ணையாளர்கள் தரம் பிரித்துச் சொல்கிறார்கள்.

“தன்னுடைய எஜமானர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு எதிரிகளால் ஆபத்து என்று இராஜபாளையம் நாய்க்கு தெரிந்து விட்டால், தன்னுடைய இரண்டு முன்னாங்கால்களை கொண்டு எதிரி தோள் மீது வைத்து அழுத்தி கீழே தள்ளி கடித்து துவம்சம் செய்து விடும். மற்ற நாய்கள் எஜமானருக்கு எதிரிகளால் ஏதாவது பிரச்சனையென்றால் பின்னால் சென்று குலைக்கும். ஆனால், ராஜபாளையம் நாய் தன் எஜமானருக்கு முன்னால் பாய்ந்து சென்று எஜமானரை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். இந்த தனித்திறமை இதற்கு மட்டுமே உண்டு.

இராஜபாளையம் நாய் பழகி விட்டால் குழந்தை மாதிரி எஜமானரை சுற்றி கொண்டு, அவரது கட்டளைக்கு காத்திருக்கும். தனக்கு தினமும் உணவு வைக்கும் தட்டில் எஜமானர் சாப்பாடு வைத்தால் மட்டுமே சாப்பிடும், எவ்வளவு உணவு அதன் அருகில் வைத்தாலும் இராஜபாளையம் நாய் சாப்பிடாது. இதனால் வீட்டை கொள்ளையடிக்க திருடர்கள் போடும் பிஸ்கட் அல்லது இனிப்புகளை இந்த வகை நாய் சாப்பிடாது. இராஜபாளைய நாயின் குரைப்பு சத்தம் எதிரியை குலை நடுங்க வைத்துவிடும். இராஜபாளையம் நாய் தன் எஜமானருக்காக உயிரை விடும் விசுவசமான நாய்களில் முதன்மையானது. இந்த நாய்க்கு தனியாக எந்த சிறப்பு உணவும் தேவையில்லை, நாம் சாப்பிடும் உணவுகளை அதற்கு சிறிது வைத்தாலே மகிழ்ச்சியுடன் சாப்பிடும். சைவம் மட்டும் கொடுத்து வளர்த்தால் நாயின் ஆக்ரோஷம் கொஞ்சம் குறைவாக இருக்கும். அசைவம் கொடுத்து வளர்த்தால், நாய் ஆக்ரோஷத்துடன் இருக்கும். இராஜபாளையம் நாய் மிகுந்த தைரியசாலி, மோப்பம் பிடிக்கும் திறனும் அதிகம் இருக்கும். பராமரிப்பு செலவும் மிகக்குறைவு. நான் நாட்டு நாய்களை தான் வளர்த்து வருகிறேன்” என்கிறார் இராஜபாளையம் சேத்தூர் மனநலமருத்துவர் டாக்டர் அர்ஜுனன்.
என்ன தான் ஆண் இராஜபாளையம் நாய் ஆக்ரோஷமாக தனது எஜமானை காப்பாற்றினாலும், பெண் நாய் தான் எஜமானர் வீட்டை பாதுகாப்பது முதல் காவல் காப்பதை சிறப்பாக செய்வதாக இராஜபாளையம் நாய் வளர்ப்பவர்கள் பெருமையாக சொல்கிறார்கள்.
ஜீலை, அக்டோபர், நவம்பர் இனவிருத்தி காலத்தில் இராஜபாளைய பெண் நாய்கள் இரண்டு முதல் பத்து குட்டிகள் வரை போடும். இதில் 4 கால்களில் இருபது விரல்கள் உள்ள நாய் சிறப்பாக செயல்படும் என்பதால் இதனை வாங்கவே போட்டி நிலவும். தற்போது இராஜபாளையத்தில் நிறைய நாட்டு நாய் உற்பத்தி பண்ணைகளில் இராஜபாளையம் நாய்கள் இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தி இராஜபாளைய நாய்களுக்கு அதிகமாக இருந்தாலும், தடுப்பூசிகள் உரிய காலத்தில் போடப்படுகிறது. இராஜபாளைய நாய்களுக்கு வீட்டில் சுற்றித் திரிய விசாலமான இடம் இருந்தால் தானாகவே தனது ஒட்டத்தின் மூலம் உடற்பயிற்சியை செய்து கொள்ளும்.
சென்னை போன்ற அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களுக்கு குறைந்த இடம் இருப்பதால், இராஜபாளைய நாயை கொண்டு வந்து வளர்ப்பதில் சிரமம் ஏற்படும்.
இராஜபாளைய பெண் நாய்க்கு உரிய பருவ வயதில் தனது துணையுடன் சேர விட்டால் கர்ப்பம் தரித்து குட்டிகள் போடும், இதனால் குட்டிகள் விற்பனை மூலம் மிகுந்த லாபம் கிடைக்கும் என்கின்றனர் நாய் வளர்ப்பவர்கள்.
இராஜபாளையம் நாய் ஒரு தடவை தனது மனதில் மனிதரின் முகத்தினை பார்த்து உள்வாங்கிக் கொண்டால், எத்தனை வருடங்கள் கழித்து அவர் வந்தாலும் அவரை தனது நினைவில் வைத்து இருக்கும் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

Leave a comment
Upload