
ஐதராபாத்தில் சர்தார் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமியில், இந்த ஆண்டு சிறந்த ஐபிஎஸ் அதிகாரியாக, தமிழக கேடரை சேர்ந்த கிரண் ஸ்ருதி அறிவிக்கப்பட்டார். இங்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களின் அணிவகுப்பை கட்டளையிடும் அதிகாரியாக கிரண் ஸ்ருதி நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் தேசிய போலீஸ் அகாடமியில் நேற்று அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஸ்ருதியுடன் சேர்ந்து 28 பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 131 ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தேர்வான ஐபிஎஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது கிரண் ஸ்ருதியிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி, ‘எதற்காக கிரண் ஸ்ருதி பெயர் வைத்திருக்கிறீர்கள்? ஐபிஎஸ் படிப்புக்காக ஏன் பொறியியல் படிப்பை விட்டு வெளியேறினீர்கள்?’ என கேள்விகள் கேட்டார்.
அதற்கு கிரண் ஸ்ருதி, ‘மக்களுக்கு சீருடை அணிந்து சேவை செய்ய விரும்பினேன். அதற்காக ஐபிஎஸ் படிப்பை தேர்வு செய்தேன். மேலும், முன்னாள் பெண் காவல் அதிகாரியும் தற்போதைய புதுவை துணை ஆளுநருமான கிரண் பேடியை போல், நானும் சிறந்த ஆளுமையாக வரவேண்டும் என்பதற்காக, என் பெற்றோர் எனக்கு கிரண் ஸ்ருதி என பெயர் சூட்டினர்’ என தமிழிலேயே பதிலளித்தார். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Leave a comment
Upload