
“ருக்கு, ருக்கு..” என கத்தியபடியே நடைபயிற்சிக்குச் சென்ற அய்யாசாமி ஓட்டமும் நடையுமாய் அகத்திற்கு திரும்ப வந்தார்.
“ஏண்ணா.. இப்படி கத்தறேள்? வழக்கம்போல நாய் துரத்தியதாக்கும்” என கேட்டாள் ருக்கு.
“ஆமாம் ருக்கு” என்றார் அய்யாசாமி பரிதாபமாக.
“அதனால்தான் சொன்னேன், வேட்டி சட்டையோட வெளியே போங்கோனு. இந்த பெர்முடாஸ், பனியன் எல்லாம் நம்ம ஊர் நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காது. பார்த்ததும் குலைக்கும், ஓடினால் துரத்தும்..சொன்னால் கேட்கணும். வயசாயிடுத்து, இளந்தாரியாட்டம் ஆடையை குறைக்கணும்னு என ஆசைப்பட்டேளே, இப்போ ஊரே உங்களைப் பார்த்து இருக்குமே, இதுக்குத்தான் வயசுக்கேத்த ஆசை இருக்கனணுங்கிறது”என சாடினாள்.
“என்னை படுத்தறது இருக்கட்டும் ருக்கு, ரொம்ப நாளா உடம்புக்கு முடியாமல் இருந்த கணபதி மாமா, இன்று காலையிலே காலமாயிட்டாராம்... வர்ற வழியிலே செய்தி கிடைச்சுது. அவன் பையன் ரகுதான் பாவம், அவரை சிரத்தையாக பார்த்துண்டு இருந்தான், அவனும் ஒத்தையாகிட்டான் எல்லாம் லிபி” என்றார் அய்யாசாமி.
“நான் போய் துக்கம் கேட்டுட்டு வந்துடுறேன்” என சொன்னவரை... “இப்படியே போயிடாதீங்கோ, உள்ளே போய் வேட்டியைக் கட்டிண்டு போங்கோ” என்றாள்..
சரிகை வேட்டியை கட்டிண்டு வந்தவரைப் பார்த்ததும், தலையில் அடித்துக்கொண்டவள், “போதும் நேக்குன்னு வந்து வாச்சேளே!. இப்படி ஜரிகை வேட்டியை கட்டிண்டா துக்கத்துக்கு போவா? ஒரு விதரணையும் இல்லை போங்கோ” என திருப்பி அனுப்பினாள்.
“துக்கத்துக்கு கூட உடை பார்க்கணுமா ருக்கு?”
“ஓ! நீங்க அங்கே போய் துக்கம் கேட்டுவிட்டால், அப்படியே ரகு ஆறுதலடைந்து எல்லாத்தையும் மறந்து விடுவானா? துக்கம் விசாரிக்கிறது என்றால் அவர்கள் வருத்தத்தில் நாம் பங்கு கொள்கிறோம், நாங்கள் எல்லாரும் உனக்கு இருக்கிறோம், தைரியமாக இரு என துக்க வீட்டாரை ஆசுவாசப் படுத்துவதுதான். அதுக்கு பளீர்னு கண்னை உறுத்தற மாதிரி டிரெஸ் பண்ணிண்டு போவாளா யாராவது?” என்ற ருக்குவிடம்...
“ஏன் ருக்கு, மாலை வாங்கிண்டு போகட்டுமா?” எனக் கேட்டார் அய்யாசாமி. “மாலை வாங்கிறதெல்லாம் சுத்த வேஸ்ட். அதற்குப் பதிலாக அந்த பிள்ளைகிட்டே பணமா கொடுங்கோ, இறுதி செலவிற்காவது ஆகும்” என்றாள்.
“சரியா சொன்னாய், இதோ இரண்டாயிரம் ரூபாய் எடுத்து வச்சுண்டேன், ரகுவிடம் கொடுக்க. கடைசி காரியத்திற்கு உதவுமே” என்றார் அய்யாசாமி.
“பரவாயில்லையே வர வர என் ஆத்துக்காரர் சமத்தாயிடுவார் போல இருக்கே?” என ஆச்சரியப்பட்டாள் ருக்கு.
“நான் சமர்த்துதாண்டி.. என்ன? உன்னை விட குறைவு” என வழிந்தார்..
“சமர்த்துதான் போங்கோ. போய் அவாளுக்கு கூடமாட இருந்து உதவி செய்துட்டு வாங்கோ” என அனுப்பி வைத்தாள்.
ஆறுதல் சொல்லி, பணத்தை ரகுவிடம் செலவிற்கு கொடுத்த அய்யாசாமி, “தைரியமாக இரு ரகு. இதற்கு மேல் உன்னை சிரமப்படுத்தக் கூடாது என்று நினைத்துதான் அப்பா போயிட்டார்” என்றார்.
“இல்லை மாமா. அவர் வாழணும்னு ஆசைப்பட்டார், உடல் நிலை சரியாகி் இன்னும் குறைந்தது இரண்டு வருடமாவது உயிரோடு இருக்கணும், இயற்கை அழகையெல்லாம் பார்த்து ரசிக்கணும், நட்புகள், உறவுகள் அனைவரையும் பார்க்கணும் என இதுநாள் வரை தோன்றவில்லை, இப்போது பார்க்கனும் போலத் தோன்றுகிறது என்பார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது” என வருத்தப்பட்டான் ரகு.
“அவரின் ஆசி உனக்கு எப்போதும் உண்டு ரகு. அந்த அளவிற்கு நீ அவருக்கு கடைசி காலத்தில் பணிவிடைகளை செய்து இருக்கிறாய்” என அய்யாசாமி ஆறுதல் கூறினார்.
“ஆமாம், மாமா சின்ன விஷயத்தைக் கூட என்னிடம் சொல்லி விடுவார். ஒரு நாள், பாத்ரூம் சென்றால் மலம் வரவில்லை என்பார். மறு நாள், நிற்கவே மாட்டேங்கிறது என்பார். அவரைக் குளிப்பாட்டி, உடை மாற்றி, சாதம் ஊட்டி, மருந்து மாத்திரை கொடுத்து என இப்படியே ஒரு வருடமாக பழகிவிட்டேன் மாமா. இப்போகூட அவர் படுத்துண்டு இருக்கிறதைப் பார்த்தால் இதோ இப்போ எழுந்து வந்து என்னிடம் காபி கேட்பார் எனத் தோணுகிறது” எனக் கண்ணீர் மல்கினான் ரகு.
“உயிருடன் தந்தை இருக்கும்போது பலபேருக்கு அருமை தெரிவதில்லை, வேர் மாதிரி அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நீ அதை உணர்ந்தும் புரிந்தும் கடைசி வரை அவரைக் காப்பாற்றி இருக்கிறாய்” என்றார் அய்யாசாமி.
“ஏன் ரகு... அப்பா இறந்து எத்தனை மணி நேரமாகுது?”
“மூன்று மணி நேரமாகுது மாமா”
“இன்னும் வாழணும், இயற்கை அழகைப் பார்க்கணும்னுதானே அப்பாவின் ஆசை எனக் கேட்டவர், அதற்கு ஒரு தீர்வு இருக்கு. நீ செய்வியா?” எனக் கேட்டார் அய்யாசாமி.
“என்ன செய்யணும் மாமா?” கேட்டான் ரகு.
“அப்பாவின் கண்களைத் தானமாக கொடுத்து விடுவோம், அது இரண்டு பேருக்கு பெரும் உதவியாக இருக்கும்”
“சாஸ்திரம் என்ன சொல்றது மாமா?” என தயக்கமாய் கேட்ட ரகுவிடம், “சாஸ்திரம், சம்பிரதாயம் எல்லாம் நாம ஒழுங்கா அறத்தோடு வாழ்வதற்குத்தானே, அதுவும் நல்ல காரியம் இது. இதில் எதுக்கு சாஸ்திரம் பார்க்கணும்?”
“உடல் பின்னமாயிடாதா?”
“பயப்படாதே. கண்ணை அப்படியே பிடுங்கி எடுத்துவிட மாட்டார்கள். அதில் கார்னியா என்கிற கருவிழியை மட்டும் அவா எடுத்துப்பா, எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவா. தீயினால் எரிக்கப்பட்டு, எவ்வித பலனும் இல்லாமல் வீணாய் போகக்கூடிய அப்பாவின் கண்கள் யாருக்கேணும் தானமாக கொடுக்கப்பட்டால், அவரின் விழிகள் மூலம் இரண்டு பேர் பார்வையோடு வாழ்வார்கள். அவர்கள் வாழும் வரை உன் அப்பாவும் அவர் ஆசைப்படி இயற்கையை ரசித்துக் கொண்டே இருப்பார், என்ன சந்தோஷம்தானே உனக்கு?” என்றார் அய்யாசாமி.
“நல்ல விஷயம் மாமா. நான் என்ன செய்யணும்?”
“உள்ளே போய் முதலில் ஓடுகிற ஃபேனை நிறுத்து” என்றவர், பஞ்சை ஈரம் செய்து சடலத்தின் கண்களில் வைத்துவிட்டு, தன் நண்பரும், கண் மருத்துவருமான தாமஸுக்கு தகவல் தெரிவித்தார்.
“ரகு... உன் விருப்பப்படியே அப்பா நீண்டு வாழ்வார், இருவர் கண்கள் மூலமாக...” என்றார் அய்யாசாமி.
உட்கார்ந்த இடத்திலேயே ருக்குவிற்கு செய்தி எப்படிதான் வருகிறதோ... தெரியலை நியூஸ் ஏஜன்சியே தோற்றுவிடும்.
“ஏண்ணா? சோகம் பகிற போன இடத்திலும் சோஷியல் சர்வீஸா? பேஷ், பேஷ்! வர வர சமர்த்தாயிண்டே வரேள்... என் பாடு திண்டாட்டமாயிடப் போறது” என்றாள் ருக்கு.
“அது என்னமோ தெரியலை ருக்கு. ஆத்துக்கு வந்து உன்னைப் பார்த்ததும், எனக்கு எல்லாம் அடங்கிப் போயிடறது. அது ஏன்?” எனக் கேட்டார், ஒன்றும் தெரியாதவர் போல முகத்தை வைத்துக் கொண்டு..
“ஓ.. இப்ப வாய் முழுக்க வார்த்தைகளும் பேச ஆரம்பிச்சுட்டேளா?..நன்னா ஆச்சு!” என ருக்கு சதாய்க்க... இருவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.

Leave a comment
Upload