தொடர்கள்
ஆன்மீகம்
ஆன்மீக ஆசான்... - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20200804215207304.jpg

ஸ்ரீ காஞ்சி பெரியவரின் குரல் - 05

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூலக வெளிவந்துள்ளது. திரு இரா கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம். தெய்வத்தின் குரல் ஏழு புத்தகங்களாக வெளி வந்துள்ளது. கண்ணனுக்கு பகவத் கீதை போல், ஸ்ரீ பெரியவாளுக்கு தெய்வத்தின் குரல். அதன் துளிகள் இங்கே...

விஞ்ஞானமும் அறிவியலும் ஒன்று தான் என்கிறார் ஸ்ரீ மகா பெரியவர்.

ஸ்ரீ சங்கரர், பகவத்பாதர் அவர்கள் சொல்லிய அத்வைத தத்துவமும், மிகப் பெரிய விஞ்ஞானிகள் சொன்ன தத்துவங்களும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது. அத்வைதம் என்ன சொல்கிறது? நாம் எல்லோரும் ஒன்று தான். தேளும், பாம்பும் நாமும் ஒன்று தான். அனைத்தும் ஒரே ஜீவனை கொண்டுள்ளது. நாமும் அதுவும் மற்றதும் வேறல்ல என்கிறது. மனித வாழ்க்கை உள்ளவரை ஆசை, பாசம், இன்பம், துக்கம் என அனைத்தும் இருக்கும். அதிலிருந்து விடுபடுவதே மோக்ஷம் எனப்படுகிறது. இவைகள் அனைத்தும் வேறு வேறல்ல. அனைத்தும் ஒன்றே என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், நமக்கு இந்த பயம் இல்லை. வேறுபாடு இல்லை என்றால் அனைத்தும் ஒன்று தான். எல்லாம் ஒரே பரமாத்மா தான் என்று தோன்றும் போது நமக்கு இந்த வித்தியாசங்கள் தெரிவதில்லை. இதை தான் முன்னம் சொன்னது போல், நாமே தேள், நாமே பாம்பு என்ற எண்ணம் வந்துவிட்டால், நமக்கு பயம் வராது இல்லையா? நாம் எல்லோரும் இறந்தபின் தான் மோக்ஷத்திற்கு போவோம் என்ற நிலை அல்ல. எல்லா உணர்வுகளும் ஒன்று தான் என்ற எண்ணம் வந்துவிட்டால் இங்கேயே நாம் இப்போதே மோக்ஷத்தை காணலாம் என்கிறார்.

அனைத்தும் ஒன்று என்பது எப்படி சாத்தியமாக இருக்கமுடியும் என்று எண்ணலாம். ஒவ்வொன்றும் வேறு வேறு நிறத்தை கொண்டது, குணத்தை கொண்டது, உருவத்தை கொண்டது. அப்படி இருக்கையில் எப்படி எல்லாம் ஒன்றாகும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உண்டு. சொப்பனம் போல் தான் நம் வாழ்க்கையும். விழித்தவுடன் சொப்பனத்தில் கண்டவை போய், எப்படி நாம் மட்டும் எஞ்சி நிற்கிறோம். அது போல் தான் நம் வாழ்க்கையும். இதை உணர்ந்ததால் ஞானிகள், ரிஷிகள் எப்படி ஆனந்தமாக இருக்கிறார்கள். அவர்களை போல் நாமும் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழமுடியும். உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் இருக்கும் துன்பம், சோதனைகள், கவலைகள் இல்லாமல் இந்த ஞானிகள் இருப்பதிலிருந்தே தெரிகிறது... வேதத்தால் சொல்லும் அமைதியும், ஆனந்தமும் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்று. நாம் அதை உணர்வதில்லை, அவர்கள் உணருகிறார்கள். அதுவே சத்தியம். மாயை நீங்கி ஞானத்தை உணர்ந்தால் எஞ்சி நிற்பது பரமாத்மா மட்டுமே என்று உணர முடியும்.

அறிவியல் ரீதியாகவும் இதனை நிரூபிக்க முடியும். நாம் இவ்வுலகில் காணும் அனைத்தும் ஒன்றே ஒன்றால் தான் ஆகியிருக்கிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன்னாள் உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப்பொருட்களை [elements] அடங்குவதாக நவீன விஞ்ஞானம் சொல்கிறது. அவைகள் ஒவ்வொன்றும் வேறு விதமான சக்தியை கொண்டவை. இருந்தாலும் இப்போது அணு என்ற ஒன்று வந்தவுடன் அணைத்து சக்தியும் ஒன்று தான் என்று அறிவியல் விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கின்றனர். அனைத்து சக்தியும் ஒன்று தான். பொருள் மற்றும் சக்தி அதாவது matter and energy இரண்டும் ஒன்று தான். உலகம் என்பது மாயை. அது சாத்தியமில்லை. பரமாத்மா ஒன்றே சத்தியம்.

சக்தியும் பொருளும் என்ற உண்மையை கண்ட அறிவியல் விஞ்ஞானிகள் தான், அந்த அறிவை வைத்து அணுகுண்டை தயாரித்துள்ளனர். இது மிகவும் வேதனையான துக்கமான விஷயம். எல்லாம் ஒன்று தான் என்ற அத்வைத தத்துவம் படிப்போடு இல்லாமல் அதனை உள்ளூர உணர்ந்தால், நாம் தவறான விஷயங்கள் பற்றி யோசிக்க மாட்டோம். ஜீவா, குளம் எல்லாம் ஒன்று தான் என்று எண்ணம் நாம் எல்லோர் மனதிலும் தோன்ற வேண்டும். அப்போது தான் அணுகுண்டை தயாரித்து நம்மை நாமே அழிக்கவல்ல அறிவியல் வஸ்துக்களை தயாரிக்காமல், உலக க்ஷேமத்துக்கு ஏதுவான விஷயங்களை உருவாக்குவோம்.

ஓவியம்: TSN