தொடர்கள்
தொடர்கள்
புவியை அசைத்த தத்துவங்கள் - 35 மரியா சிவானந்தம்

2020080407173506.jpg

குருதேவ் - ரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் ஆன்மிக, தத்துவ, இலக்கிய அடையாளமாக அறியப்படுபவர் ‘குருதேவ்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இரவீந்தரநாத் தாகூர். விவேகானந்தரை ஒத்த வாழ்வும், தேடலும் கொண்ட தாகூர், வங்காளம் தந்த மற்றுமோர் கொடை. இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவர் என்ற பெருமை மட்டுமன்றி அண்டை நாடான கிழக்கு வங்காளத்தின் தேசிய கீதத்தையும் தாகூர் எழுதி உள்ளார். “என் தங்க வங்கமே” (அமர் சோனார் பங்ளா ) எனப்படும் பாடல் அவர் எழுதியதுதான். இறைவனுக்கு அவர் செலுத்திய மலர் அஞ்சலியாம் ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பு நூல், அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. அவ்வகையில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் மட்டுமல்ல, முதல் ஆசியரும் தாகூர்தான்.

வங்காள ஜமீன் குடும்பத்தில் 1861 ஆம் ஆண்டுபிறந்தவர் தாகூர். அவர் தந்தை தேவந்திரநாத் தாகூர், தாய் சாரதாதேவி. பதிமூன்று பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தில் கடைக் குட்டிச் செல்லம் ரவீந்திரநாத் தாகூர். இளமையில் தாயை இழந்த தாகூர், பெரிய மாளிகையில் வேலைக்காரர்களின் பராமரிப்பில் வளர்ந்தவர். இளமையில் கூச்ச சுபாவம் கொண்ட தாகூர், புத்தகங்களில் தன்னைப் புதைத்துக் கொண்டார்.. 8 வயதில் கவிதை எழுதியவர், 16 வயதில் தனது முதற் கவிதை நூலை வெளியிட்டார். அவர் சகோதரர்கள் படிப்பாளிகள், எழுத்தாளர்கள். இவரின் அண்ணன் விஜேந்திரநாத் தாகூர் தத்துவ ஞானி. மற்றுமோர் அண்ணன் சத்தியேந்திரநாத் தாகூர் இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரி. எனவே தாகூருக்கு சிறந்த கல்வி தரப்பட்டது. இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பப்ளிக் ஸ்கூலில் தாகூர் பயின்றார். பின்னர் லண்டன் சட்டக் கல்லூரியில் படித்தார். ஆயினும் அவர் இடையில் படிப்பை நிறுத்தி விட்டு வெளியேறினார்.

இந்திய மக்களின் அடிமை நிலை தாகூரை அசைத்தது. அந்நிய அடிமைத்தனத்தில் இருந்து இந்திய மக்கள் விடுதலை அடையும் முன் அவர்தம் அறியாமை, மூடநம்பிக்கை, கல்லாமை போன்ற சமூக நோய்களில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்று அவர் விரும்பினார். தெற்கில் பாரதி, வடக்கே தாகூர் இரு கவியரசுகள் இம்மக்களின் இழிநிலை கண்டு, கத்தி, கலங்கி, கவிதைகளில் தம்மைக் கரைத்துக் கொண்டனர். இங்கே இவர் சுதந்திர தேவி திருப்பள்ளி எழுச்சி பாடுகையில், வங்காளத்தில் அவர் “எங்கு மனம் பயமற்று இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு கட்டற்று இருக்கிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்தில், இறைவா, என் தேசத்தை எழச் செய்வாய்” என்று வேண்டுகோள் விடுத்தார். ஆன்மிகம், இறைத்தேடல் போல இவர் கவிதைகள் தோன்றினாலும், இக்கவிதைகள் இவரது விடுதலை வேட்கையை அடிநாதமாக கொண்டிருந்தன.

ரவீந்திரரின் கவிதைகள், கருத்துக்கள், சிந்தனைகள் எல்லையற்ற வானம் போல விரிந்து பரந்து இருந்தன. அவர் சிந்தனையில் உதித்த முத்துக்கள் இன்னும் நிறம் மாறாத வண்ணத்துடன் விளங்குகின்றன. “இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இன்னும் கடவுள் இந்த உலகத்தை கை விட்டு விடவில்லை என்ற செய்தியுடன் தோன்றுகிறது.” “விண்ணுடன் இடையற்று பேசிக் கொண்டிருக்கின்றன - மரங்கள்” “இன்னும் இருள் விலகா நேரத்தில் பறவை உணரும் ஒளி - நம்பிக்கை” “உன் சூரியன் அஸ்தமிக்கிறதே என்று நீ அழுது கொண்டிருந்தால், நட்சத்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பினை நீ இழந்து விடுவாய்” என்று கவித்துவம் கொஞ்சும் எழுத்துக்கள் இவரது கரம் வழி பிறந்தன.

“ஜெபமாலையை உருட்டிக் கொண்டு மூலையில் உட்காராதே. நீ விரும்பும் கடவுள் இங்கில்லை. அதோ வியர்வை வடிய உழுது பாடுபடும் விவசாயியிடம் அவர் இருக்கிறார்” “ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ, அதன் தோற்றத்தை கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால், மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது” என்று சொல்லும் ஒளிர்விடும் ஞானச்சுடராக தாகூர் விளங்கினார். நரை கூடி, முதுமை எய்தியபோதும் அவர் தன் இலக்கியப் பணியை நிறுத்தவில்லை. அவர் நிறுவிய ‘சாந்திநிகேதன்’ பல திறம்பட்ட மாணவர்களும் சேர்ந்து பயின்ற கலாச்சார மையமாக விளங்கியது. கீதாஞ்சலி தவிர, பல சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள் கவிதைகள் எழுதினார் தாகூர். “காபூலிவாலா, தோட்டக்காரன், தபால் நிலையம்” போன்ற புகழ் பெற்ற படைப்புகளை தாகூர் கொணர்ந்தார். கீதாஞ்சலி பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் தாகூரே மொழி பெயர்க்க அது அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.

தாகூரின் பாடல்களை விவேகானந்தர் பாடினார். உலகம் முழுவதும் பயணம் செய்தவர் தாகூர். உலகெங்கும் அவர் புகழ் பரவியது. உலகத் தலைவர்கள் அவரது ஆலோசனைகளை கேட்டறிந்தனர். காந்தி அவருடன் நட்புடன் இருந்தார். விடுதலை வேள்வியில் அவர் வார்த்த நெய் சுதந்திர சுவாலையைப் பற்றி எரியச் செய்தது. ஆனால் விடுதலை காற்றைச் சுவாசிக்கும் முன்னமே 1941 ஆம் ஆண்டு அவர் மறைந்தார்.

கீதாஞ்சலியின் புகழ் பெற்ற சில வரிகள்

There are numerous strings in your lute, 
let me add my own among them.

Then when you smite your chords, 
my heart will break its silence, 
and my life will be one with your song.             

Amidst your numberless stars 
let me place my own little lamp.

In the dance of your festival lights 
my heart will throb and my life 
will be one with your smile
- தொடரும்