
படித்தால் கட்டிங்குக்கு சலுகை...
நாடு முழுவதும் பஸ், ரயிலில் பயணம் செய்பவர்கள், வாகனங்களை ஓட்டுபவர்கள், பாதசாரிகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள், வீடு மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் கையில் வைத்திருக்கும் செல்போனில் பேசிக்கொண்டோ, படம் பார்த்து கொண்டோ, மெசேஜ் அனுப்பி கொண்டோ செல்வதை கண்கூடாக பார்க்கலாம். இதனால் அனைவரிடமும் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்கும் ஆர்வம் அறவே நின்று போய்விட்டது.
இதையடுத்து முடி வெட்டும் சலூன் கடைகளில் டிவி, ரேடியோ மற்றும் நாளிதழ்கள் வைத்திருந்தாலும், அதை எவரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை. அதற்கு பதிலாக, தங்களது கையில் வைத்திருக்கும் செல்போனை பலர் பார்த்துக் கொண்டிருப்பர் என்பது வேதனையான உண்மை.
இத்தகைய அவலநிலையை மாற்றி, அனைவரும் குறிப்பாக மாணவர்களிடையே புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும் என தீர்மானித்தார் ஒரு தமிழக வாலிபர். அவர்தான் - தூத்துக்குடி மாவட்டம், மில்லர்புரத்தை சேர்ந்த பொன்.மாரியப்பன் (38). இவர் அந்தப் பகுதியில் கடந்த 8 வருடங்களாக சலூன் கடை நடத்தி வருகிறார்.

இவர் தனது கடைக்கு முடி வெட்டிக் கொள்ள வருபவர்கள், காத்திருக்கும் நேரத்தில் எதையாவது படித்து, தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சில நூல்களை வாங்கி போட்டார். அது, தற்போது நூற்றுக்கணக்கான அறிவுசார் புத்தகங்கள் கொண்ட நூலகமாக திகழ்கிறது. இவர் 8-வது வரை மட்டுமே படித்திருந்தாலும், தற்போது பல்வேறு புத்தகங்களை படித்து, அதன் கருத்துகளை பாமரர்களுக்கு எடுத்து கூறுமளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து பொன்.மாரியப்பன் கூறுகையில், ‘செல்போன்களின் வருகையால் மாணவர்கள் மற்றும் மக்களிடையே புத்தக வாசிப்பு முற்றிலும் மறைந்துவிட்டது. அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தவே, எனது சலூன் கடையில் புத்தகங்களை வாங்கி வைக்க துவங்கினேன்.
கடைக்குள் டிவி இருந்தாலும் பலர் அதை கவனிக்காமல், தங்களது செல்போனில் மூழ்கிவிடுவதை கண்டேன். மகாகவி பாரதியின் வரிகளான ‘புத்தகங்களே என் சொத்து. இவையே எனது குழந்தைகளுக்கு விட்டு செல்லும் பொக்கிஷம்’ என்ற வரிகள் நினைவுக்கு வந்தது. முதலில் ஐந்தாறு என ஆரம்பித்த லைப்ரரியில், தற்போது 250 புத்தகங்கள் உள்ளன’ என பொன்.மாரியப்பன் பெருமையுடன் கூறுகிறார்.
இவரது சலூன் கடை லைப்ரரியில் வரலாறு, இலக்கியம், அறிவியல், சிறுகதைக மற்றும் சிறுவர் கலைக்களஞ்சிய புத்தகங்கள் உள்ளன. இவரது கடைக்கு முடி திருத்த வருபவர்கள், நூலகத்தில் இருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டும். பின்னர் அந்த நூலின் பெயர், படித்த பக்கங்களின் எண்ணிக்கை, வாசித்ததில் பிடித்த வரி வாக்கியத்தை, அங்குள்ள நோட்டு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எழுதும் மாணவர்கள் உள்பட பலரது பெயர்களை மாதமொன்றுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்குகிறார் பொன்.மாரியப்பன்.
‘மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவே இத்திட்டத்தை செயல்படுத்தினேன். அவர்கள் சிறிது நேரமாவது புத்தகம் படித்து, ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்கிறார்கள் என்பதே எனது முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான்’ என பொன்.மாரியப்பன் கூறுகிறார்.
மேலும் ‘படித்த விஷயங்களை நோட்டு புத்தகத்தில் தெளிவாக எழுதும் மாணவர்கள் உள்பட பலருக்கு முடி வெட்டும் கட்டணத்தில் குறிப்பிட்ட தள்ளுபடி சலுகையும் அளிக்கிறேன். இதனால் பலர் கடைக்கு வந்து, லைப்ரரியில் உள்ள புத்தகங்களை ஆர்வமாக படித்து வருகின்றனர். படிக்க தெரியாதவர்கள், கையில் புத்தகங்களை சும்மா வைத்திருந்தாலும் கட்டண சலுகை அளிக்கிறேன். இன்று அவர்கள் கையில் வைத்திருக்கும் புத்தகம், நாளை அவரின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டி, அவர்களது குடும்பத்துக்கு அறிவொளி வழங்கும்’ என மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் பொன்.மாரியப்பன்.
மேலும், இவரது கடையில் ‘ஒரு மைக்கும் வைத்திருக்கிறார். அதில், தாங்கள் படித்த விஷயத்தை அல்லது ஏதேனும் ஒரு பொது தலைப்பில் மாணவர்கள் பேசலாம். இதன்மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து, மேடை கூச்சத்தை அகற்றி, பேச்சாற்றலை அதிகரிக்கிறது’ என்கிறார்.
பொன்.மாரியப்பனின் முயற்சிக்கு அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். மேலும், இவரது தன்னலமற்ற சமூகசேவையை பாராட்டி, தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற திமுக எம்பி கனிமொழி ஏராளமான புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், பொது நூலகத்துறை அதிகாரியும் புத்தகங்களை பரிசளித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு உலக புத்தக தினத்தன்று, பொன்.மாரியப்பனின் சேவையை பாராட்டி, பெரியார் சுயமரியாதை பிரசார இயக்கம் ‘சிறந்த நூலகர்’ விருது வழங்கி கவுரவித்தது. குறைந்த வருவாயிலும், மாணவர்களின் வாசிப்பு திறன் மற்றும் பேச்சாற்றலை வளர்க்க பாடுபடும் பொன்.மாரியப்பனின் சேவை பாராட்டுக்கு உரியது.

Leave a comment
Upload