வேண்டாம் அரசியல்...
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகள் செயல்பாடு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றது தான் கிராமசபை. கிராமங்களில் கல்வி, சமூக வளர்ச்சி, போக்குவரத்து, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் குறித்து அறிக்கையையும் ஊராட்சித் தலைவர், அரசு அலுவலர் முன்னிலையில் பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மக்களின் கையில் இருக்கும் அதிகாரம் கிராம சபை ஆகும்.
கிராமசபை கூட்டத்தில் தங்கள் கிராமத்தில் ‘மதுக்கடைகள் நடத்தக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றினால், அங்கு அரசு, மதுக்கடைகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது அரசியல் சார்பற்றது. ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் கூட்ட அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில், கிராம சபையின் பங்கு மிக முக்கியமானது. கிராம மக்களின் குறைகளை களைந்து, கிராம முன்னேற்றம் காண இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, வழி வகுக்கப்படும். கிராம சபை கூட்டம் நிறைவேற்றும் தீர்மானம் ஊராட்சிகளை கட்டுப்படுத்தும்.
ஆனால் சில அரசியல் கட்சிகள், கிராம சபை என்ற பெயரில் அரசியல் கூட்டங்களை கூட்டத் தொடங்கியுள்ளனர். இது கிராமசபை வழிமுறைகளுக்கு எதிரானது. முதலில் நடிகர் கமலஹாசன் கிராம சபை கூட்டத்தை நடத்தினார். தற்போது, திமுக, ‘அதிமுக-வை புறக்கணிப்போம்’ என்ற வகையில் தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்துகிறது. இது கிட்டத்தட்ட அதிமுகவை விமர்சித்து, திமுகவை ஆதரித்து நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழக அரசு, கிராமசபை பெயரை மாற்று கட்சிகள் இப்படி தவறாக பயன்படுத்துவதை கடுமையாக ஆட்சேபிக்கிறது. அவர்கள் அப்படி சுட்டிக்காட்டுவதிலும் நியாயம் இருக்கிறது.
கிராம சபை கூட்டம் என்பது அந்த குறிப்பிட்ட கிராமத்தின் வளர்ச்சி மற்றும் குறைகள் களைய திட்டங்கள் பற்றி பேசத்தான் இதுவரை பயன்படுத்தப்பட்டது. இப்போது திமுக இதை அரசியல் மேடையாக பயன்படுத்தப் பார்க்கிறது. ஏற்கனவே காணொளி, தங்கள் சொந்த தொலைக்காட்சி, நாளிதழ் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமும் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தடபுடலாகவே செய்துவருகிறது. அப்படியிருக்கும்போது அரசியல் சார்பற்ற கிராம சபையை, அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவது என்பது நிச்சயம் தவறான முன்னுதாரணம்தான். எதற்கெடுத்தாலும் ஆளுங்கட்சியினர் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லும் எதிர்க்கட்சித் தலைவரே இப்போது இந்த தவறை செய்யலாமா..? எனவே கிராம சபையில், அரசியல் வேண்டாம். உடனே இதை நிறுத்த வேண்டும்.
Leave a comment
Upload