
ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் அவர்களின் சொற்பொழிவுகளை, உபன்யாசங்களை, அறிவுரைகளை, அனுகிரக பாஷியங்களை தொகுத்து தெய்வத்தின் குரல் என்ற நூல் வெளிவந்துள்ளது. திரு இரா. கணபதி அவர்கள் மிகவும் அருமையாக தொகுத்து உள்ளார். அதனை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்களையும் மற்றும் சில அனுபவ விஷயங்களையும் நாம் வாரம் தோறும் பார்த்து வருகிறோம்.
கடவுள் என்பது ஒரு தத்துவம். அதனை பக்தியில் மனசை வைக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி விட்டால் சாமானிய ரீதியில் அதை பிடித்துக்கொண்டு ஸ்திரமாக இருக்க முடியவில்லை. பக்தியை காரியத்தில் காட்டுவது என்றால் மட்டுமே சாதாரண மக்களால் முடிகிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு மதத்திலும் சந்தியாவந்தனம், பிரேயர், நமாஸ் எல்லாம் இருக்கின்றன. லோக வாழ்க்கையில் இருந்து கொண்டே பக்தி செய்கிற போது, உலகில் நடப்பது எப்படி தர்மமாகும் என்று மதங்கள் சொல்கின்றன. அது என்னவென்றால் எல்லோரிடமும் அன்பாக இரு, தியானம் செய், மக்களுக்கு சேவை செய் என்று இப்படி எல்லாம் எல்லா மதங்களும் சொல்கின்றன. இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விட்டால், இந்த உடம்பு போலவே உயிரானது அந்த கடவுளுடன் என்றுமே போய் சேருகிறது. என்றும் கடவுளிடம் போய்ச் சேர சேவை செய்து கொண்டே அவரது க்ருபையை பெற்று சந்தோஷமாக இருப்பது தான் சத்தியம். முடிவான அந்த விஷயத்தை பற்றி நாம் இப்போது சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம். ஏதோ ஒரு வழியில் கடவுளை நாம் அடைந்து விடுகிறோம். அதேபோல் இந்த வாழ்க்கையில் நமக்கு ஏற்படக்கூடிய தோஷங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள் எதுவும் நிரந்தரமானது இல்லை. நிரந்தரமாக இருப்பது நீங்காத நிறைந்த ஆனந்தம் மட்டுமே என்று தெரிந்து கொண்டாலே போதும்.
அப்படி பரமாத்மாவை நம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் இந்த உலகத்தில் இருக்கும் அனைவரும் ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல் செய்யவேண்டும். இந்த கடமைகள் தான் நமக்கான தர்மம். இந்த உடல் இருக்கும்போதும் போன பின்பும் நம்மை காப்பது தர்மம் மட்டுமே. உடம்பு போனபிறகு, கை, கால் போன்றவை இல்லை. ஆகையால் உடம்பு இருக்கும்போதே நற்கதி அடைவதற்கு தேவையான தர்ம காரியங்களை செய்ய வேண்டும். நான் போன பின், பிறர் நலனுக்காக இன்சூரன்ஸ் செய்து கொள்வதை விட, இது ரொம்ப ரொம்ப முக்கியம். ஆயுள் போன பிறகும் நமது நலனுக்காக, நிரந்தர இன்ஷூரன்ஸ் ஆக இருப்பது தர்மம் மட்டுமே. நமது ஆயுள் இருக்கும் போதும் தர்மம் நமக்கு அமைதியையும் சௌக்கியமும் தருகிறது. அதே போல் போன பிறகும் நம்மை நற்கதி அடைய செய்கிறது.
எந்த தர்மத்தை நாம் அனுஷ்டிப்பது என்று குழப்பமே வேண்டாம். பல காலமாக நமது முன்னோர்கள் செய்து வந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அனுபவத்தில் அவர்கள் நித்தியசௌக்கியதை அடைந்திருக்கிறார்கள். இந்த தலைமுறையில் நாம் அதிருப்தியோடு இருப்பது போல் இல்லாமல் அவர்கள் நிம்மதியாக இருந்தார்கள். அந்த தர்மத்தை நாம் கடைபிடித்தாலே போதும். நாம் புதிதாக ஒன்றை முயற்சித்தால், வீண் சிரமம் தான். அது நல்லதா கெட்டதா என்று நமக்கே தெரியாது. ஆதலால் பெரியவர்கள் செய்த நற்செயல்களை தர்மங்களை நாம் செய்வது நல்லது.
மனிதனாக பிறந்து விட்டால் கஷ்டம் ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்வதற்கு தான் தமிழ் புத்தாண்டில் முதலில் பூக்கும் வேப்பம் பூவை சாப்பிடுகிறோம். வருடத்தின் தொடக்கத்திலேயே நாம் கசப்பை ஏற்கிறோம். அதேபோன்று வருடத்தின் இறுதியில் பொங்கல் பண்டிகையின் போது கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும். கசப்பை இயற்கை அன்னையின் தர்மநியதியின் மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அனுபவத்தையும் தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.
ஸ்ரீ ராமனுக்கு ஒரு வாரத்தில் ஏற்பட்ட கஷ்டம் ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்கு தாயார் கட்டுசாதம் கொடுப்பது போல், அவர்கள் வனவாசம் செல்லும்போது கௌசல்யை 14 வருஷம் கெடாமல் இருக்கும் பக்ஷணம் குறித்து ஆலோசித்தார். பிறகு நிரந்தரமாக தர்மத்தை கட்டிக் கொடுத்தார். “ராகவா... தைரியத்துடனும் நியமத்துடன் நீ பாதுகாக்கும் தர்மமே, உன்னை பாதுகாக்கும்” என்று சொல்லி தர்மத்தை இராமனுக்கு துணை அனுப்பினார். தர்மமே இறுதியில் இராமனுக்கு ஜெயத்தை பெற்றுத்தந்தது.
அதர்மத்தில் விழுந்தால், உடன் பிறந்தவன் கூட எதிரியாகி விடுவான் என்பதையும் ராமாயணமே உணர்த்துகிறது. வானர கூட்டங்கள் கூட ஸ்ரீ ராமனை ஆதரித்தன. ஆனால் ராவணனை அவன் சொந்தச் சகோதரன் கூட ஆதரிக்கவில்லை... விலகிச் சென்றான்.
தர்மம் தலை காக்கும். பத்து தலை ராவணன் விழுந்து நாசமாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி விஜயராகவன் ஆக தலை நிமிர்ந்து நின்றதற்கு காரணம், தர்மம் தலை காத்தது தான். ஒவ்வொருவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாக இருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாகவும் நியாயமாகவும் பின்பற்றி பரம சௌக்கியத்தை பெறுவீர்களாக.

Leave a comment
Upload