
பூமியின் மேற்பரப்பில் இரவு நேரங்களில் வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை நம்மால் நினைக்கத் தோன்றும். ஆனால், வானில் தோன்றும் நட்சத்திரங்களை எண்ணுவது மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் நம் புவியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன, விண்ணில் அவை எப்படி நகர்கின்றன என்பதையும் வரையறுத்து சொல்லும் அளவுக்கு நவீன அறிவியல் தொழில்நுட்பம் இன்று வளர்ந்துவிட்டது.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், விண்வெளியில் சுற்றி வருவதுதான் ‘கயா’ எனும் நவீன தொழில்நுட்ப தொலைநோக்கி. இதன்மூலம் இதுவரை 180 கோடி விண்மீன்கள் எண்ணி அடையாளம் காணப்பட்டுள்ளன என சமீபத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்த ஆய்வு தகவலில், விண்வெளியில் நட்சத்திரங்கள் எல்லாம் கண்மூடித்தனமாக கொட்டிக் கிடக்கவில்லை. நம்முடைய பூமி உள்பட 9 கோள் குடும்பங்கள், சூரியனை ஓர் ஒழுங்கில் சுற்றி வருகின்றன. அதேபோல், நட்சத்திரங்களும் கூட்டம் கூட்டமாகவே இருக்கின்றன.

ஒரு கூட்டத்தின் மையத்தில் உள்ள பேரடர் கருந்துளையை அந்தக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன. நம்முடைய சூரியனும் அப்படி ஒரு நட்சத்திரம்தான். சூரியன் இடம்பெற்றிருக்கிற நம்முடைய நட்சத்திரக் கூட்டத்தின் பெயர்தான் ‘பால்வழி மண்டலம்’ என்பது. இவற்றில் 180 கோடி விண்மீன்களை கயா தொலைநோக்கி அடையாளப்படுத்தி இருக்கிறது.
“கடந்த 2013-ம் ஆண்டு விண்வெளியில் செலுத்தப்பட்ட இந்த கயா தொலைநோக்கி விண்கலம், இன்னும் 4 ஆண்டுகளுக்கு வேலை செய்யும். இந்த தொலைநோக்கி விண்கலத்தின் நோக்கமே, நம்முடைய பேரண்டத்தை - குறிப்பாக, நமது பால்வழி மண்டலத்தை ஆராய்வதுதான்.
கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வர்ணிக்கப்படும் இந்த தொலைநோக்கி, தினமும் விண்வெளி பற்றி புதிதுபுதிதாக, நாம் அறிந்திராத ஏராளமான தகவல்களைக் கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருக்கிறது. இது தரும் தரவுகளை வைத்து, தினமும் சுமார் 3 ஆராய்ச்சிக் கட்டுரைகளாவது வெளிவருகின்றன.
புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் இதன் வேகம் அபரிமிதமானது. விண்வெளி தொலைநோக்கிகளில் மிகவும் புகழ்பெற்றதான ஹபுள் தொலைநோக்கி கூட இந்த அளவுக்கு கண்டுபிடிப்புகளை துரித வேகத்தில் நிகழ்த்தவில்லை!” என்கின்றனர் ஆய்வு மைய விஞ்ஞானிகள்.
“கயா தொலைநோக்கி உற்பத்தி செய்யும் தரவுகள், விண்வெளி இயற்பியலில் ஒரு சுனாமியைப் போல! நம் அருகிலுள்ள நட்சத்திரங்கள், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் என விண்வெளி இயற்பியலில் எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு, பேரண்டத்தின் விளிம்புவரையில் செல்கிறது இந்த தொலைநோக்கி!” என்கிறார், பிரிட்டனின் லெய்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர்.
இந்த கயா தொலைநோக்கி, வானில் ஒரு பறக்கும் தொப்பியைப் போல் தோன்றுகிறது.
கயா பதிவு செய்துள்ள நட்சத்திரங்கள், அடுத்த நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு எப்படி நகரும் என்கிற கணக்கீட்டை, தொலைநோக்கி திரட்டித் தந்திருக்கிற தரவுகளின் உதவியோடு கணிக்க முடியும் என்றால் அது அனைவருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

Leave a comment
Upload