
ஞாபகங்கள்
இறந்த கால
நிகழ்வுகளின்
வினையெச்சங்கள்!...
காலத் திரை மறைத்த
காட்சி வடிவங்களாய்,
நினைவுப் பதிவேட்டில்
பதிந்த ஞாபகங்கள்
நீளும் ஆயுள் உள்ள வரை!...
முதல் ஞாபகம்,
வட்டிலில் வடித்து
வட்டத் தட்டில்
வைத்து ஊட்டிய
அன்னத்தில்
கலந்த
அன்னையின்
பாசம்!...
அன்பை ஒளித்து
அறிவைப்
புகட்டிய
தந்தையின்
தன்னிகரற்ற
தயாளம்
அடுத்த ஞாபகம்!....
பிறழ்வும் நெகிழ்வும்
வறுமையும் வளமையும்
பகிர்ந்து பெற்றதிலும்
கற்றதிலும் பங்குடைய
நம் உடன் பிறந்தோர்
உள் புகுந்த ஞாபகங்கள்
ஓராயிரம்!...
இடுக்கண்
களைந்த
நண்பர்கள்
பிரிந்தாலும்
பிரியாத
ஞாபகங்கள்!...
முதல் காதல்
முறிந்தாலும்
முடியா ஞாபகம்!...
மண வாழ்வின்
ஞாபகங்களோ
இனிய மழைச்
சாரல்கள் அதன்
நினைவுச்
சரங்களோ
தொடரும்
புதினங்கள்!...
இன்பமும்
துன்பமும்
இரண்டறக்
கலந்தாற்
போல்
ஞாபகங்களில்
இனிப்பும்
கசப்பும்
உண்டு!...
சுகம் மறந்த
சோகங்களும்
சோகமறியா
சுகங்களும்
அகம் கனிந்த
நிகழ்வுகளும்
முகம் வாடப்
பிரிந்த நட்பும்
ஞாபகங்களின்
நீள் வரிசையில்!...
ஒரு கவிதைக்குள்
அடங்குமா
ஓயாத நம்
நினைவுப்
பக்கங்கள்?
ஓராயிரம்
கவிதை
எழுதினாலும்
தீராது
ஞாபகங்கள்!...

Leave a comment
Upload