
யுனெஸ்கோ எச்சரிக்கை...
குஜராத் மாநிலத்தின் தபதி நதியில் துவங்கி, தமிழகத்தின் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை நீண்டிருக்கிறது. இந்த மலை குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய 6 மாநிலங்கள் வரை பரந்து விரிந்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த சிகரம், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது.
இதில் அகஸ்திய மலை, பெரியாறு, ஆனைமலை, நீலகிரி, தலைக்காவிரி, குதிரமுக், சையாத்ரி ஆகிய மலைத்தொகுப்புகள் உள்ளன. மேற்கண்ட 6 மாநிலங்களில் சுமார் 30 கோடி மக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு நேரடி மற்றும் மறைமுக தேவைகளை மேற்கு தொடர்ச்சி மலைதான் நிறைவேற்றி வருகிறது.

‘யுனெஸ்கோ’வின் அதிகாரபூர்வ ஆலோசனை குழுவான ‘இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம்’ (IUCN) சமீபத்தில் மறுஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகள் ‘தீவிர அக்கறை செலுத்தப்பட வேண்டிய இடம்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் அசாம் மாநிலத்தின் மனஸ் வனவிலங்கு சரணாலயமும் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த அறிக்கையில், ‘மேற்கு தொடர்ச்சி மலையானது காலநிலை மாற்றம், பலத்த மழை மற்றும் கோடை காலம், நீர் மற்றும் காற்று மாசுபாடு, சுற்றுலா, காடுகள் அழிப்பு, வனவிலங்குகள் வேட்டை, வன சாலை-ரயில் திட்டங்கள், அணைகள், சுரங்க மற்றும் குவாரி மற்றும் காட்டு தீ போன்றவற்றால் பேரழிவின் விளிம்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இதை சமாளிக்க, இயற்கை பாதுகாப்புக்கு நடுத்தர மற்றும் நீண்டகால திட்டங்கள் தேவை.
மேற்கு தொடர்ச்சி மலையானது, சாதாரண வாழ்விடமல்ல… 30 கோடி மக்களுக்கு குடிநீரை வழங்கும் இந்திய துணை கண்டத்தின் நீர் கோபுரமாக உள்ளது. எனவே, முழு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இம்மலையை மீட்க உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில், மேற்கு தொடர்ச்சி மலையை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரமும், அவற்றின் பல்லுயிர் பெருக்கமும் மிக மோசமான நிலையை அடையும்’ என யுனெஸ்கோ அறிக்கை எச்சரித்துள்ளது.

Leave a comment
Upload