தொடர்கள்
Daily Articles
உலகம் சுற்றும் விகடகவி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! - ராம்

20201131073325545.jpg

ஆசியா

ஹாங் காங்.

சென்ற வார விகடகவியில் கடலுக்கடியில் சுரங்கம் பற்றிய செய்தியைப் பார்த்தோம். அதோடு சுரங்கம் திறக்கும் முதல் நாளில் விகடகவிக்காக ஒரு விசிட் அடிப்போம் என்ற வாக்கை நிறைவேற்றும் வகையில்.. இங்கே…..

20201131073416138.jpg

கடலுக்குள் நனையாமல ஒரு ரவுண்டு போகலாம் வாருங்கள்…..

அமெரிக்கா

ஒஹையோ

20201131073645300.jpg

மீண்டும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை.

ஓஹையோ மாநிலத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் ஆயுதமில்லாத ஒரு கறுப்பரை சுட்டுக் கொன்றார் ஒரு வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி.

20201131073720504.jpg

ஆண்ட்ரே மௌரீஸ் என்ற 47 வயது ஆப்ரிக்க அமெரிக்க ஆசாமி, ஒரு வீட்டின் கார் காராஜில் ஒலி எழுப்பி அணைத்தபடி இருப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசை தொலைபேசி, புகார் கொடுக்க, அங்கு வந்த ஆடம் காய் என்ற போலீஸ் காரரும் அவருடன் வந்த இன்னொரு அதிகாரியும் என்ன செய்தார்கள் என்று சரியாகத் தெரியவில்லை, ஆண்ட்ரே மெளரீஸை சுட்டுக் கொன்றனர்.

இதில் போலீசார் இருவரும் அவர்கள் உடலோடு எப்போதும் செயல்படும் உடல் காமிராவை இந்த சம்பவம் நடப்பதற்கு முன் தோதாக அணைத்து விட்டதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

தற்போது ஆடம் கோய் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த மாதத்தில் கொலம்பஸ் நகரில் போலீசாரால் நடக்கும் இரண்டாவது கறுப்பினத்தவர் கொலை இது.

வேலையைப் பறித்துக் கொண்டால் மட்டும் போன உயிர் வந்து விடுமா ???

கரண்டு கம்பியில் மாட்டிக் கொண்ட கிறிஸ்துமஸ் தாத்தா. !

கலிபோர்னியா மாஹாணத்தில் ரியோ லிண்டா நகரம்.

அந்த ஊரில் ஒருவர் அடிக்கடி மின்விசையூட்டப்பட்ட பாராசூட்டில் ஊருக்கு மேல் பறப்பாராம்.

20201131073804375.jpg

பாவம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பும் இப்படி பறந்து ஊரில் எல்லா குழந்தைகளுக்கும் சாக்லேட் விநியோகிக்கலாம் என்று சாண்டா கிளாஸ் (கிறுஸ்துமஸ் தாத்தா) உருவத்தில் மேலே பறக்க, எப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல், அந்த ஊரில் இருக்கும் கரண்டு கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டார் கிறிஸ்துமஸ் தாத்தா.

உடனடியாக அந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் தாத்தா மீட்கப்பட்டார்.

நல்ல வேளையாக சின்ன காயம் கூட படாமல் அவரை காப்பாற்றியது காவல் துறை என்பது ஆறுதல்.

கனடா

டொரோண்டோ

உங்களில் எத்தனை பேர் டயரி எழுதுகிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு டயரி எழுதும் பழக்கம் இருக்கிறது. பால் கணக்கோ மோர் கணக்கோ அல்லது கவிதையோ கதைக் கருவோ என்னத்தையாவது எழுதுவது உத்தமமான செயல்.

கனடாவில் டொரொண்டோவில் உள்ள ஓரு வீட்டில் பழைய தட்டு முட்டு சாமான்கள் இருக்கும் அறையை ஒழிக்கும் போது இரண்டு டயரி கிடைத்தது நிக் குன்ஸ் என்ற ஆசாமிக்கு.

20201131073919452.jpg

அதில் தேதி பார்க்க சுமார் 37 ஆண்டுகளுக்கும் முன் அலிசன் ஜென்கின்ஸ் என்ற பெண்ணால் எழுதப்பட்ட டயரி என்று தெரிந்தது. என்ன இருந்தாலும் இன்னொருத்தர் டயரியல்லவா ? அதனால் அதை முழுவதும் படிக்காமல் ஓரளவு அதிலுள்ள சாராம்சத்தை புரிந்து கொண்டு அவர் அதை சமூக ஊடகங்களில் பதிய, அந்த செய்தி வலை தளங்களில் தாவித் தாவி வான்கூவரில் இருக்கும் அலிசன் ஜென்கின்ஸை சென்றடைந்தது.

அலிசன் 9 வயதாக இருக்கும் போது எழுதிய டயரி என்பதை கண்டு கொண்டார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அந்த டயரி கண்டுபிடிக்கப்பட்ட வீட்டைப் பார்த்ததும் தான் குழந்தையாக இருந்த போது வளர்ந்த வீடு என்பதை கண்டு ஆனந்தத்தில் குதித்தார்.

20201131073957564.jpg

தற்போது அந்த டயரியை எப்படி ஜென்கின்ஸிடம் சேர்க்கும் வேலையில் இருக்கிறார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் அலிசன் சொன்னது தான். “நிக் குன்ஸ் அடுத்தவர் டயரியை படிக்கக் கூடாது என்ற நாகரீகம் அறிந்தவர். முதல் பக்கத்தை மட்டுமே வைத்து என்னைக் கண்டு பிடித்துவிட்டார். ஒரு வேளை அது நானாக இருந்தால் கூட எனக்கு இந்த பக்குவம் இருந்திருக்காது என்கிறார் அலிசன்

இந்த நிக்கின் பக்குவத்தைத் தான் டைரி விஷயத்தில் என் மனைவியிடமும் எதிர்பார்க்கிறேன்.

ஐரோப்பா

இங்கிலாந்து

20201131074101998.jpg

இங்கிலாந்தின் பிரக்ஸிட் பொருளாதாரம் பாதிக்குமா வாழ்வாதாரம் பாதிக்குமா என்று சர்ச்சை நடக்கையில் சத்தமில்லாமல் அது பாதிப்பது என்னவோ பாவம் செல்லப் பிராணிகளைத்தான்.

இனி இங்கிலாந்திலிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதில் செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்ல முடியாதாம்.

குறைந்தது பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி வாங்கி அதற்காக சில சான்றிதழ்கள் பெற்றுக் கொண்டு தான் நாய்களையும் பூனைகளையும் மற்ற நாடுகளுக்கு கூட்டிச் செல்ல முடியுமாம்.

இருந்தாலும் பிரிட்டைன் என்பது பிரத்யேக நாட்டு பட்டியலில் இருப்பதால் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பிராணிகள் எடுத்துச் செல்லும் பிராயாசை சற்று சுலபம் என்றாலும் பிரக்சிட்டுக்குப் பிறகு முன்பைப் போல் எளிதல்ல என்பது மட்டும் உண்மை.

20201131074217710.jpg

இங்கிலாந்து நாய்கள் குரைக்கும் போது உங்களுக்கு நாய் பாஷை புரிந்தால், அட மனிதர்களா நீங்கள் கூடிக்கொள்வதும், பிரிந்து போவதும் எப்படியோ போக, எங்களை ஏண்டா படுத்தறீங்க என்று சொல்வது புரியும்.

குரோயேஷியா

20201131074239331.jpg

நேற்று காலை இங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தில் குறைந்த பட்சம் ஏழு பேர் உயிரழந்திருக்கக் கூடும் என்று தெரியவருகிறது.

மதிய நேரத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. தலைநகர் ஜாக்ரப்பிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஊரில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ஹங்கேரி வரை உணரப்பட்டதாம்.

ரிக்டர் அளவில் 6.4 அளவில் வந்த இந்த நில நடுக்கம் பலருக்கு படு காயம் ஏற்படுத்தியுள்ளது.

ஆசியா

சீனா

20201131074346454.jpg

சீனாவின் ஹார்பின் நகரம்.

ஜனவரி 5ந்தேதி முதல் இங்கு குளிர்கால விழா துவங்கவிருக்கிறது.

இந்த ஊரின் விசேஷம் பனிச் சிற்பங்கள் தான்.

குளிர் அதிகமில்லை, ஜஸ்ட் மைனஸ் 35 டிகிரி தான் இருக்கும். (நம்மூரில் காலண்டர் கிழிக்கும் போது மார்கழியை பார்த்து விட்டாலே மஃப்ளர் கட்டிக் கொள்ளும் ஆசாமிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றனர்)

ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல மூலைகளிலிருந்து இந்த பனிச் சிற்பங்களைப் பார்க்க வருவார்கள்.

வரும் ஆண்டும், சீனா வெளிநாட்டு பயணிகள் இல்லாவிடிலும், இந்த குளிர்கால விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறது.

20201131074409235.jpeg

அருகாமை நதியிலிருந்து ஐஸ்கட்டிகளை வெட்டியெடுத்து இந்த கலை நயம் மிக்க சிற்பங்களையும், ஏன் கோட்டைகளையும், பனிக்கட்டிகளால், பனிப் பாறைகளால், பனிப் பாளங்களால் செய்கிறார்கள். செயற்கை ஐஸ் வேலைக்கு ஆகாதாம். உருகி விடுமாம்.

படங்களைப் பார்த்தாலே ஜில்லென்று ஹாகன் டாஸ் ஐஸ்கிரீம் கடைக்குள் இருப்பதை போன்று இருக்கும்.

20201131074505690.jpeg

20201131074527247.jpeg

எப்படியாவது இந்த வருடம் ஹார்பின் சென்று பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

என் கடன் பனிக்காக காத்திருப்பதே போலும். !!

சீனாவில் லியூஷாவ் நகரம். குவாங்சி மாஹாணம்.

20201131074552152.jpeg

லுவோ என்பவர் அந்த ஊர் சந்தை ஏரியாவில் மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்தார். அவரது முகம் ஏற்கனவே எங்கேயோ பார்த்த முகம் மாதிரி இருக்கிறதே என்று இரு போலீஸ்காரர்கள் அருகில் சென்று விசாரிக்கும் போது என்னிடம் இருந்து என்ன வேணும் என்று லுவோ எகிற, முப்பது வருடத்திற்கு முன் நீ செய்த வேலைக்கு நீ தான் வேணும் என்று அலாக்காக தூக்கியது போலீஸ்.

27 வயதாக இருக்கும் போது லுவோ ஒரு கிராமத்திற்கு செல்ல, அங்கிருந்த ஒரு பெண் லுவோவை பட்டணத்திற்கு கூட்டிப் போ என்று கேட்டிருக்கிறார்.

லுவோவும் அந்த பெண்ணுக்கு பட்டணத்திற்கு சென்று வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இரயிலில் ஏற்றிக் கொண்டு இடம் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவளை வேறொரு வீட்டில் விற்று விட்டு சென்று விட்டார்.

ஆனால் இதை மோப்பம் பிடித்த போலீஸ் அவரை கைது செய்து விட்டது. 15 வருடங்கள் ஜெயில் தண்டனை பெற்றாலும், இரண்டு வருடத்தில் லுவோ எப்படியோ தப்பித்து விட… மீண்டும் அவரை (அவரை என்ன மரியாதை..வாழ்கிறது) அவனை 31 வருடங்கள் கழித்து கைது செய்திருக்கிறது சீன போலீஸ்.

இந்த வாட்டியாவது ஒழுங்கா உள்ள வைங்கப்பா. திரும்பவும் தப்பிச்சுரப் போறான்.

வங்காள தேசம்.

20201131074733169.jpg

வங்காள தேசம் ஒரு இஸ்லாமிய தேசம். எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அங்கு மியான்மார் பகுதியில் இருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தான் தற்போதைக்கு வங்காள தேசத்தின் பெரும் பிரச்சினை.

அவர்களுக்கு எப்படி அடைக்கலம் தருவது என்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது வங்காள தேசம்.

காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரத்திலிருந்து சுமார் 120 கி.மீ தூரத்தில் இருக்கும் தீவு பாஷான் சார்.

20201131074802511.jpg

20201131074823221.jpg

காக்ஸ் பஜாரில் சுமார் பத்து லட்சம் ரோஹிங்கியா அகதிகள் ஆகிவிட அதன் கூட்டத்தை குறைப்பதற்காக இந்த பாஷன் சார் தீவுக்கு இரண்டாயிரம் குடும்பங்களை இடம் மாற்றியிருக்கிறது வங்க அரசு. படிப்படியாக அனைவரும் அங்கே நகர்த்தப்படுவார்களாம்.

ஏராள பொருட்செலவில் இந்த ஆளில்லாத தீவில், வீடுகளும் மருத்துவமனைகளும், பாதுகாப்பிற்கு காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லும் அரசை நம்ப இந்த அகதிகள் தயாராக இல்லை.

20201131074902905.jpg

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை கூட இந்த தீவில் அனுமதிக்க மறுக்கிறது அரசு.

அதுமட்டுமல்ல அகதிகள் அங்கு போக விருப்பம் இருந்தால் மட்டுமே செல்லலாம் என்பதும் பொய். அங்கு குடியேற கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்பதும் இந்த அகதிகளின் குற்றச்சாட்டு.

என்ன கொடுமை என்றால் அந்த தீவு தாழ்வான பகுதியாக இருப்பதால் அடிக்கடி வெள்ளமோ புயலோ வந்தால் கூண்டோடு அழிய வேண்டியது தான் என்கிறார்கள் அந்த பகுதி வானிலையை நன்கு அறிந்தவர்கள்.

ஆனால் அதே சமயம் ஒரு சில அகதிகளுக்கு புதிய இடம் உற்சாகத்தையும் தெம்பையும் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஒரு புதிய வாழ்க்கைக்கு நாங்கள் தயாராகிறோம் என்றும் மகிழ்ச்சியைடைந்திருக்கிறார்கள்.

வங்காள தேசத்தையும் குறை சொல்ல முடியாது. உள்ளூர் பிரச்சினைகளும் வறுமைகளுமே அங்கு விஸ்வரூபமாய் வதைக்கும் போது ரோஹிங்கியாக்களுக்கு என்ன செய்ய முடியும் ???

20201131075054206.jpg

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்ற ஒளவையார் இன்றிருந்தால் கூண் குருடு செவிடு பட்டியலில் அகதிகளாய் இல்லாமல் பிறப்பதும் அரிது என்று சேர்த்திருப்பார்.

தென்னமெரிக்கா

மெக்சிகோ

மெக்சிகோவில் இந்த வாரம் ஏற்பட்ட திடீர் மின் பழுதால் சுமார் ஒரு கோடி பேருக்கு மின்சாரம் இல்லாமல் போனது.

இரண்டு மணி நேரம் இந்த மின் தடை ஏற்பட்டது .

இது பல மாநிலங்களையும் தலைநகர் மெக்சிகோவையுமே பாதித்ததாம்.

7500 மெகா வாட் மின் தொகுப்பில் ஏற்பட்ட உற்பத்திக்கும் உபயோகத்திற்குமான சமன்பாடு பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என்று மின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

20201131075137637.jpg

(மின்வெட்டு ஆன போது மெக்சிகோ!! என்ன படத்தில் ஒன்னுமே தெரியலையா ?? அதான் கரண்ட் போச்சே !! )

ஆற்காட்டார் நமக்கு காட்டாத மின் வெட்டா ?? இரண்டு மணி நேரத்திற்கு என்னா அலப்பறை என்ற தமிழர்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறதா ????

சிலி

என்ன முயற்சி செய்தாலும் தேவர் பிலிம்ஸ் போல மிருகங்கள் செய்தி கண்ணில் படாமல் இருக்காது போல.

சிலி விமான நிலயத்தில் போதை மருந்து வெடி குண்டு என்று மோப்பம் பிடித்து போரடித்துப் போன மோப்ப நாய்களுக்கு புது வேலை.

20201131075258863.jpg

கோவிட்-19 பயணிகளை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது தான்.

அந்த ஊரில் நாய்களை இதற்காக பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்கள்.

சிலி நாட்டில் ஒரு நாளைக்கு 2000 பேர்கள் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரி எதற்காக நாய்கள் ?? மனிதர்களை விட ஐம்பது மடங்கு மோப்ப சக்தி உள்ள நாய்களிடம் கரோனாவை மோப்பத்தினாலேயே 92 முதல் 99 சதவிகித துல்லியத்தில் கண்டுபிடிக்கிறதாம்.

நல்ல வேளை கரோனா ஆசாமிகளை கண்டால் கடித்து விடு என்று பழக்கப்படுத்தாமல் இருக்கிறார்களே.

அதுவரையில் நிம்மதி.

ஆப்பிரிக்கா

காட்சினா

20201131075412786.jpg

இருவாரங்களுக்கு முன் ஒரு பள்ளியில் 300 மாணவர்களை கடத்திச் சென்றது போகோ ஹராம் என்ற தீவிரவாத குழு என்று எழுதியிருந்தேன்.

காட்சினா என்ற நகரில் இப்போது விசாரணையில் அது போகோ ஹராம் தீவிரவாத குழுவின் வேலையில்லையாம்.

உள்ளூர் தாதாக்களின் கைவரிசை தான் போலும்.

தற்போது கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஏறைக்குறைய விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

அரசு இந்த விடுதலையை பணம் கொடுத்து சாதித்ததா என்றால், இல்லை. அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக சொல்லித் தான் உள்ளூர் தாதா குழுக்களிலிருந்து மாணவர்களை விடுவித்திருக்கிறது.

இந்த வருடம் முடியும் போது நல்லவேளையாக ஒரு நல்ல செய்தி.

ஆஸ்திரேலியா.

புது வருடம். 2021

20201131075454120.jpg

புதுவருட கொண்டாட்டங்களை ஏறக்குறைய அனைத்து நகரங்களும் கரோனா காரணமாக அடக்கி வாசிக்கவே அறிவுறுத்துகின்றன.

புது வருடம் முதலில் கோலாகலமாக துவங்குவது ஆஸ்திரேலியாவில் தான்.

நேரக் கோட்டின் காரணமாக சிட்னி, மெல்போர்ன் போன்ற பெரு நகரங்கள் வாண வேடிக்கைகள், உற்சாக மனிதர்கள் என்று புது வருட மூடை உலகம் முழுவதும் கிளப்பி விடும்.

ஆனால் இந்த வருடம் 2020 காட்டுத் தீ பதம் பார்க்க, கரோனாவும் சேர்ந்து கொண்டு கொஞ்சம் சோகமான வருடம் தான் ஆஸ்திரேலியாவுக்கு.

சிட்னியின் 9 மணி வாணவேடிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் நள்ளிரவு வாணவேடிக்கைகள் குறைந்த நேர அளவில் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நம்மூர் புது வருடத்திற்கு முன்பே நம்மை மூடுக்கு கொண்டு வர நேரலையில் சிட்னியில் பங்கு கொள்ளலாம்.

ஜஸ்ட் இங்கே கிளிக்கினால் போதும்.

புது வருட வாழ்த்துக்கள்.

அடுத்த வருடமாவது கோவிட் பிரச்சினை ஒரு வழியாக தீர்ந்து போய் நிம்மதியாக உலகை சுற்றலாம்.

ராம்