தொடர்கள்
கதை
யூடியூப்.... - கி. கல்யாணராமன்

20210428160928148.jpeg

“ஹலோ மைதிலி...”

மைதிலியின் கணவன் விஸ்வநாதன். அவன் மனைவி ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆகிறது.

“மைதிலி தான் பேசுறேன். நீங்க எப்படி இருக்கீங்க?”

“உடம்பு நல்லா தான் இருந்தது. ஆனால் இரண்டு நாளா கொஞ்சம் பிரச்சனை.”

“என்ன பிரச்சனை? கொரோனாவா?”

விஸ்வா ரகசியமாக ஏதோ மைதிலியிடம் சொன்னார்.

“நீங்க உடனே போய் நம்ம குடும்ப டாக்டர் ராகவனைப் பார்த்து என்ன ஏதுன்னு தெரிஞ்சுகிட்டு வாங்க. மருந்து கொடுத்தா ஒழுங்கா சாப்பிடுங்க, நான் இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன்.”

அடுத்த நாள் காலை விஸ்வநாதன் குடும்ப டாக்டர் ராகவனிடம் சென்றார்.

“என்ன விஸ்வா. எப்படி இருக்கிங்க?”

“எனக்கு தான் இரண்டு நாளா பிரச்சனை டாக்டர்...”

“என்னப் பிரச்சனை?”

“அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை.”

“சொல்லுங்கள். என்ன தயக்கம்?”

“எனக்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது டாக்டர்..”

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்க பாத்துடலாம்...”

“அது வந்து டாக்டர்... இரண்டு நாளா யூடியூப் பிரச்சனை...”

“இதை சொல்ல என்ன கூச்சம்? நீங்க யூடியூப் எதில் யூஸ் பண்றீங்க? உங்க மொபைல் போனிலா இல்லை ஐபேடிலா?”

“அதுல எப்படி டாக்டர் யூஸ் பண்ண முடியும்?”

“உங்க மொபைல் போன குடுங்க. நான் இப்பவே அதை சரி பார்க்கிறேன்..”

“என்ன டாக்டர்... நான் என் பிரச்சனையைப் பற்றி சொன்னால், நீங்க என்னோட மொபைல் போனை பாக்கணும்னு சொல்றீங்க. சரி இந்தாங்க போன்.”

ராகவன் மொபைல் போனில் யூடியூப் இல் ஒரு சினிமாவை துவக்கினார், அது நன்றாகவே வேலை செய்தது.

“யூடியூப் நல்லாதானே வருது இன்னும் என்ன பிரச்சனை?”

“என் மொபைல் போன் யூடியூப் பிரச்சினை இல்லை டாக்டர். இது என்னோட யூடியூப் பிரச்சினை...”

“என்ன? உங்களுடைய யூடியூப் பிரச்சனையா? அப்ப நீங்க தனியா ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கிறீர்களா?”

“அது இல்ல டாக்டர். இது என் உடம்புல இருக்கிற யூடியூப் பிரச்சனை...”

“அது என்ன?”

“யூரின் டியூப் டாக்டர்! இரண்டு நாளா சரியா யூரின் போக முடியாம கஷ்டப்படுகிறேன்.”

“இது தானா உங்க பிரச்சனை? சரியா சொல்ல வேண்டியது தானே. நான் மருந்து கொடுக்கிறேன் சரியாகிவிடும்...”

விஸ்வநாதனின் யூடியூப் சில நாள்களில் சரியாகி விட்டது!