தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

எதுவுமே இலவசம் இல்லை...

20210518212850467.jpeg

சமீபத்தில் ஜிஎஸ்டி பற்றிய காணொளி கூட்டத்தில், தடுப்பூசிகளை மத்திய அரசு, மாநில அரசுக்கு இலவசமாக வழங்குகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அப்போது அது இலவசம் அல்ல... அது மக்கள் வரிப்பணத்தில், அரசு வாங்கித் தருகிறது. அப்படி இருக்கும்போது, எப்படி அது இலவசமாகும் என தமிழக நிதியமைச்சர் கருத்து சொன்னார்.

இது உண்மைதான். அரசு தரும் எந்ச்த சலுகையும் இலவசம் இல்லை. எல்லாமே மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான், இந்த சலுகைகளை மக்களுக்கு அரசு வழங்குகிறது. இதை தமிழக நிதியமைச்சர், தமிழ்நாட்டில் வழங்கும் இலவச சலுகைகளுக்கும் இது பொருந்தும் என்ற விளக்கத்தை அவர் சொல்லியிருந்தால், அது இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசம், 14 வகை பொருட்கள் இலவசம் என்று சொல்வதும் கூட தவறுதான். இவையும் மக்கள் வரிப்பணத்தில் தான் வாங்கப்பட்டு, வழங்கப்படுகிறது.தேர்தல் அறிக்கையில் திமுக பல இலவச சலுகைகளை அறிவித்து தான், இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவசங்களை, தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு, கட்சி நிதியிலிருந்து வழங்கப்போவதில்லை, அரசாங்க கஜானாவில் இருந்து பணத்தை எடுத்துதான் இந்த சலுகைகளை வழங்குகிறது. எதிர்காலத்திலும் வழங்க இருக்கிறது. எனவே இலவசம் என்ற வார்த்தையை, தமிழக அரசும் பயன்படுத்தக்கூடாது. இதனால் தான் ஜெயலலிதா இலவசம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. விலையில்லா மடிக்கணணி, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மிக்சி, கிரைண்டர் என்றுதான் அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பயன்படுத்தினார். இதை இப்போதைய அரசு, நினைவுபடுத்திக் கொண்டால் நல்லது.

தடுப்பூசி இலவசம் என்கிறது மத்திய அரசு. ஆனால் தனியார் மருத்துவமனையில், தடுப்பூசி இலவசம் இல்லை. இலவசம் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது, முரண் என்ற விவாதம் இப்போது தொடங்கிவிட்டது. இதை மத்தியில், மாநிலத்தில் ஆளும் அரசியல் கட்சிகள் உணர்ந்தால் நல்லது.