தொடர்கள்
விகடகவியார்
விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.. பார்ட் - 2.

முதல்வர் டெல்லி விசிட்...

நீட் தேர்வு ரத்து இல்லை...

20210519101305179.jpg

முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக டெல்லி செல்கிறார் என்பது முக்கிய செய்தியாக கவனிக்கப்பட்டது. பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி... இதுதவிர எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சோனியா, ராகுல் காந்தி ஆகியோரை சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. ஸ்டாலினின் டெல்லி பயணம் முதலில் மூன்று நாள் என்று வரையறுக்கப்பட்டு, அது பிறகு இரண்டு நாளாக மாற்றி அமைக்கப்பட்டது.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு முதலில் உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு... சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் சந்திப்பு உறுதி செய்யப்பட்டது. அமித்ஷாவை சந்திக்க ஸ்டாலின் விரும்புவதாகவும்... ஆனால், ஸ்டாலினை சந்திப்பதை அமித்ஷா தவிர்த்து விட்டதாகவும் ஒரு பேச்சு வரத்தொடங்கியது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், இப்போதைக்கு பிரதமரை மற்றும் சந்திப்போம் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று முடிவு செய்திருந்தார் என்கிறது திமுக வட்டாரம். எனவே அமித் ஷா போன்ற மற்ற அமைச்சர்களை சந்திப்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. அதனால் தான் அவரது மூன்று நாள் பயணம், இரண்டு நாளாக சுருக்கப்பட்டது என்கிறார்கள்.

பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவரது கோரிக்கை மனுவில், ஏற்கனவே எடப்பாடி முதல்வராக இருந்தபோது வைத்த கோரிக்கைகளான நிலக்கரி வினியோகம், ஜிஎஸ்டி நிலுவைத்தொகை, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் திட்டம் நிறைவேற்றம் போன்றவையுடன் கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை என்ற புதிய கோரிக்கைகளையும் சேர்த்து தனது கோரிக்கை மனுவில் சேர்த்திருந்தார்.

25 நிமிடம் முதல்வர் - பிரதமர் சந்திப்பு நடந்தது. பிரதமர் முக்கிய திட்டங்கள் பற்றிய கோரிக்கைகளுக்கு, இது சம்பந்தமாக அந்த இலாகா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பேசி நல்ல முடிவை எடுப்போம் என்று உறுதி தந்தார். கூடவே எதுவாக இருந்தாலும் நீங்கள் என்னிடம் நேரடியாக தொடர்பு உண்டு, எப்போது வேண்டுமானாலும் பேசுங்கள் என்று சொன்னார் என்று டெல்லியில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் சொன்னார். நீட் தேர்வு பற்றிய கேள்விகளைத் தவிருங்கள் என்ற நிபந்தனையுடன் தான் நிருபர் சந்திப்பு நடந்தது. நிருபர்களிடம் பிரதமர் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது என்றார் திமுக தலைவர். ஏற்கனவே முன்னால் திமுக தலைவர் கருணாநிதி சொன்னது போல், உறவுக்கு கைகொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றார் முதல்வர்.

நீட் தேர்வு பற்றிய கோரிக்கைக்கு பிரதமர் எந்த உத்தரவாதமும் தரவில்லை. அதனால் தான் நீட் தேர்வு நடக்கும் என்று ஸ்டாலினுக்கு, பிரதமர் சூசகமாக தெரிவித்து விட்டார். இதனால்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம், நீட் தேர்வு சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் அரசுப் பள்ளியில் தொடரும் என்று கருத்து தெரிவித்தார்.

20210519101344517.jpg

பிரதமரை சந்தித்த பிறகு, தமிழ்நாடு இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோர் சந்தித்தனர். மறுநாள் சோனியா காந்தி, ராகுல்காந்தி இருவரையும் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று சந்தித்தார். இவையெல்லாம் சம்பிரதாயமான சந்திப்புகள், அவ்வளவுதான்.