தொடர்கள்
கதை
“போஜன மஹாத்மியம்” - வெ.சுப்பிரமணியன்

20210817095800622.jpeg

“மைதிலி… எனக்கு நேத்திக்கு ராத்திரியிலேயிருந்து தலைசுத்தல் குறையவேயில்லை. என் ஃபிரண்டு ‘டாக்டர் மாத்ருபூதத்தை’, அவனோட ஹாஸ்பிட்டலுக்குப் போய் பார்த்துட்டு, கன்ஸல்ட் பண்ணிண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

“வாடா ராகவா… கேட்கணும்னு நினைச்சேன். நீ, தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டுகிட்டியா? அலட்சியமா இருக்காதேடா” என்றான், ‘நரம்பியல்‘ நிபுணரான, ‘டாக்டர் மாத்ருபூதம்’.

“இன்னிக்கு ஓ.பி. பார்க்கலையா? ஃப்ரீயா இருக்கே? நீ பிசியா இருப்பேன்னு, எதிர்பார்த்து வந்தேன்” என்றேன்.

“உனக்கென்னப்பா… பென்ஷனர். எந்த ராஜா எந்த பட்டணத்துக்குப் போனாலும், மாசா மாசம், லாஸ்டு ஒர்க்கிங்டேன்னா, கருவூலத்திலேயிருந்து, பாங்க் அக்கவுன்டுக்கு டான்னு ‘சில்லறை’ வந்து விழுந்துடும். என்னை மாதிரி, ‘நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு’, வெளியே சிரிச்சுகிட்டு உள்ளே அழ வேண்டியதில்லையே” என்று புலம்பினான் ‘பூதம்’.

“நீ மட்டும் எப்பிடிடா சிக்குன்னு இருக்கே? உடம்பு இளைக்க எனக்கும் எதாவது மருந்து தாயேன்?” என்றேன்.

“ராகவா… ‘பாடி வெயிட் போடறதுக்கு வாய்தான் காரணம்’. அதனால, சும்மா வாயில எதையாவது போட்டு அரைச்சுண்டே இருக்கிறதை நிறுத்து. உன் உடம்பு அதுவா இளைக்கும்” என்று சொன்னவன், மேஜை மேலிருந்த ஒரு ‘டப்பாவை’ கபால்னு எடுத்து, என் பார்வையிலிருந்து மறைத்தான்.

“டாக்டர்… ரூம் நம்பர் பதினைஞ்சிலே இருக்கிற பேஷன்டுக்கு, வலிப்பு வந்துடுச்சு” என்று நர்ஸ் படபடக்கவும், ‘பூதம்’ எழுந்து ஓடினான்.
‘பூதத்தின்’ நாற்காலிக்கருகே குனிந்து பார்த்தேன். ஒரு ‘சாக்லேட்’ டின்னை மறைத்து வைத்திருந்தான். அந்த டப்பாவைத்திறந்து, ஐந்து சாக்லேட்டுகளை எடுத்துக்கொண்டு என் நாற்காலியில் வந்தமர்ந்தேன். ஒன்றைப் பிரித்து, வாயில் போட்டுக்கொண்டேன். ‘வினாயக சதுர்த்திக்கு செய்த மோதகம்’ போல இனித்தது.

பத்து நிமிடங்கள் கழித்து, அங்கே வந்த ‘பூதம்’, என் கையிலிருந்த சாக்லேட்டை பார்த்ததும், “இதை எங்கிருந்துடா எடுத்தே?” என்றான்.

“நீ ஒளிச்சு வைச்ச சாக்லேட்ல நாலைத் தின்னுட்டேன். சும்மா சொல்லக்கூடாதுடா… சாக்லேட்டை தின்னத்தின்ன தலை ‘கிர்ர்ர்ர்ன்னு’ சுத்துது. உடம்பு மரத்துப்போய், பறக்கிற மாதிரி இருக்குடா” என்றேன்.

அதிர்ந்து போன மாத்ருபூதம், “அடேய்… அது ‘அனஸ்தீஷியா’ மாத்திரைடா. ஒண்ணு தின்னாலே, அவனவன் பன்னிரெண்டு மணிநேரம் நினைவில்லாமக் கிடப்பான். நீ நாலை முழுங்கியிருக்கியே மூதேவி. மூணு நாளைக்கு ‘உயிரிருந்தும் பிணமாத்தான்’ படுத்துக்கிடப்பே. சனியன் பிடிச்சவனே, உன் நாக்கை அடக்கமாட்டியா? தின்னிப்பண்டாரமே!” என்று என்னை வசைபாடினான்.

பதறிப்போனவன், தன் ஜூனியர் டாக்டர்கள் இருவரை அழைத்தான்....

“இவர் என்னோட குளோஸ் ஃபிரண்டு. உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லே. இவரைத் தனி அறையிலே அட்மிட் பண்ணுங்க. டிரீட்மென்ட் எதுவுமே வேண்டாம். நாம பேசுவதை இவரால தெளிவாக் கேட்க முடியும். ஆனால் பதில் சொல்ல, இவரோட உதடுகள் அசைஞ்சாலும், சத்தம் வராது” என்று ‘பூதம்’ சொல்லும்போதே, நான் மயங்கிப்போனேன்.

“காத்தால பதினைஞ்சு பூரிதானே சாப்பிட்டேள். மறுபடியும் பதினோரு மணிக்கெல்லாம் பசிக்கும், பத்து பூரியை எடுத்து வைக்கச் சொன்னேளே. அதை சாப்பிடாம மயங்கிட்டேளே” என்ற என் சகதர்மிணி மைதிலியின் புலம்பல் கேட்டது.

என் மருமகளோ… “அம்மா, கவனிச்சேளா? அப்பாவுக்கு எல்லா வசதியோடவும் ஏ.ஸி. ரூம் குடுத்திருக்கா” என்று மைதிலியிடம் சொல்லவும்...

“என்ன செலவானாலும், என் பிள்ளை குடுப்பான்” என்றாள் மைதிலி.

“அம்மா… உளறாதே. அப்பாவுக்கே ‘கவர்மென்ட் மெடிக்கல் கிளைம்’ இருக்கும்” என்று ‘ஜகா’ வாங்கினான், நான் பெற்ற ஒரே மகன்.

“பாட்டி… தம்பிகிட்டேயிருந்து டி.வி. ரிமோட்டை வாங்கிக்குடு” என்று என் பேத்தி சொன்னதும், என் மொத்தக் குடும்பமும் ஹாஸ்பிட்டலில் ஆஜராகி விட்டார்கள் என்று புரிந்தது.

அடுத்தநாள் காலையிலிருந்து என்னைப் பார்க்க ‘விசிட்டர்ஸ்’ வர ஆரம்பித்து விட்டார்கள்.

“உன் மாப்பிள்ளையை பாரு அண்ணா…” என்று மைதிலி சொல்லவும், என் “சவிடால் மச்சினர்” வந்திருப்பதை புரிந்துகொண்டேன்.

“மாமா… டிஃபன் சாப்பிட்டேளா?” என்ற என் மகனிடம், “எனக்கெதுக்குடா ‘சிசுருஷை’ பண்ணறே. உங்கப்பா உதட்டை அசைக்கிறார், என்னன்னு கேளுடா” என்றார் மச்சினர்.

என் மகனோ, “சொல்லுப்பா…” என்று என் காதருகே கத்தவும், “இவருக்கு யாருடா சொல்லிவிட்டது?” என்று கேட்க நினைத்தேன், ஆனால் என் உதடுகள் மட்டும் அசைந்தது.

“என்ன சொன்னார் உன் அப்பா?” என்று கேட்டார் ‘மச்சினர்’.

“மாமாவை, ஹாஸ்பிட்டல் கேன்டீனுக்கு கூட்டிண்டுபோய் ஜூஸ் வாங்கிக் குடுன்னார்” என்று என் மகன் புளுகவும், ‘அடப்பாவி…’ என்று என் அந்தராத்மா அலறியது.

“மைதிலி… இந்த கண்டிஷன்லேயும், மாப்பிள்ளைக்கு என் மேல இருக்கிற அக்கறையைப்பாரு” என்று புளகாங்கிதம் அடைந்தது அந்த ‘மச்சினர் அசடு’.

“காலையிலேதான், எனக்கு விஷயம் தெரிஞ்சுது. ராகவன் இப்போ எப்படியிருக்கான்?” என்று, என் பெரியப்பா பையன் ‘வைத்தியின்’ குரல் கேட்டது.

என்னருகே நின்று கொண்டு, என் மகனிடம், “எதுக்கும் ஆத்து சாஸ்திரிகளிடம் ஒரு வார்த்தை சொல்லிவைப்பா. இப்பல்லாம் ‘யாத்திரை-பாக்கேஜ்’ன்னு ஒரு சிஸ்டத்தை டெவலப் பண்ணி வைச்சிருக்கா. நம்ம வசதிக்கேற்ப ‘பாக்கேஜை’ நாமே சூஸ் பண்ணிக்கலாம்” என்று வைத்தி சொல்லவும், எனக்கு பகீரென்றது.

“ஏன்னா… கண்ணைத்திறந்து பாருங்கோ. உங்களோட அத்தையும், அத்திம்பேரும் வந்திருக்கா” என்று மைதிலி சொன்னதும், எழுந்து உட்கார நினைத்தேன், முடியவில்லை.

“அந்த காலத்திலே… இவன், ஐஞ்சு வயசுவரை தாய்ப்பால் குடிச்சான். இப்போ என்னடான்னா, ஒரு ஸ்பூன் பால் தொண்டையிலே இறங்கலே” என்று எனது பால்ய லீலையை, உபன்யாசித்தாள் என் அத்தை.

“மைதிலி… உன் ஆம்படையானுக்கு, பத்து வயசிருந்தப்போ ஒருநாள், கோதுமைதோசை சாப்பிடுடான்னு, சொன்னேன். அந்த தோசை அவ்வளவா பிடிக்காது அத்தேன்னு சொல்லிட்டு உட்கார்ந்து, முப்பது தோசையை தின்னான். இன்னிக்கு வாயடைச்சு கிடக்கானே…” என்றாள் என் அத்தை.

என் சாப்பிடும் ‘எஃபீஷியன்ஸியை’ கேட்டதும், என் மருமகளோ…

“நிஜமாவா சொல்றேள்! அப்பா ‘முப்பது’ தோசையா சாப்பிட்டார்!” என்றதும்...

“இதென்ன பிரமாதம்… உன் மாமனார், ‘அடை’ சாப்பிட்ட கதையைக் கேட்டியான அசந்து போயிடுவே” என்று மைதிலி ஆரம்பித்தாள்...

அப்போ, நான் கல்யாணமாகி வந்த புதுசு... “ஆஃபீஸுக்கு லேட்டாயிடுத்து. டிஃபன் ரெடியா? இல்லே… பட்டிணியா போகட்டுமா?” அப்படீன்னு இவர் என்னை விரட்டினார்.

சென்னையிலே என் பொறந்தாத்திலே, கேஸ் அடுப்பிலே சமைச்சுட்டு, திருச்சியிலே இவாத்துக்கு வந்து, குமுட்டி அடுப்பிலேயும், கரியடுப்பிலேயும் சமைக்க நான் பட்டபாடு… அப்பப்பா!. அன்னிக்கு எனக்கு வந்த எரிச்சல்லே “மணி எட்டுதானே ஆறது. இருபது ‘அடை’ வேணுன்னாலும் வாத்துப்போடறேன்” அப்படீன்னு வார்த்தையை விட்டுட்டேன்.

“அப்புறம் என்ன ஆச்சு?” என்று என் மருமகள் கேட்கவும், “என்ன… இருபது அடையைத் தின்னுட்டு, ‘இரையெடுத்த மலைப்பாம்பு’ மாதிரி படுத்துட்டார். அன்னிக்கு ஆஃபீஸிக்கு லீவு போட்டார்” என்று சொல்லவும், ‘மைதிலீஈஈஈ…’ என்ற என் உள்ளத்தின் அலறல், அவளுக்கு கேட்கவில்லை.

“மயங்கிக் கிடந்த மூன்றாம் நாள் காலையில், “டாக்டர் என்ன சொன்னார்?” என்ற குரலைக் கேட்டதும், என்னோடு கல்லூரியில் படித்த சினேகிதன் ‘சீனு’ என்பதை உணர்ந்து கொண்டேன்.

“ஒரு தடவை, எங்க காலேஜ் ஹாஸ்டல்ல சாப்பாட்டுப் போட்டி வைச்சாங்க. அன்னிக்கு போட்டியிலே ரெண்டாவதா வந்த பையன் இருபத்திநாலு இட்லியோட போதும்னு போட்டியிலேயிருந்து விலகிட்டான். அப்போ இவன் நாற்பதாவது இட்லியை சாப்பிட்டுகிட்டிருந்தான். அப்படிப்பட்டவனா இன்னிக்கு சாப்பிட்டு மூணுநாளாகுது?” என்று என் மானத்தை கொடியேத்திவிட்டுப் போனான் சீனு.

“அண்ணாவுக்கு என்ன ஆச்சு மன்னி” என்ற குரலை கேட்டதும், என் சித்தப்பாவின் மகன் பாலுதான், என்று அனுமானித்தேன்.

“என்ன மன்னி சொல்லறேள்! “மூணு நாளா அண்ணாவுக்கு ஆகாரமே குடுக்கலையா?” என்றான்.

“அந்த காலத்திலே திருச்சியிலே, அண்ணா என்னை ‘போஜன யக்ஞம்’ நடத்தக் கூட்டிண்டு போனார்” என்று பாலு சொல்லவும், “அதென்ன இன்ஸிடன்ட் சித்தப்பா…” என்றாள் என் மருமகள்.

“அதுவாம்மா… ஒருநாள் காலையிலே, ‘பிருந்தாவன்’ ஹோட்டல்ல சாம்பார் வடை; ‘சங்கர் கஃபேயில்’ ரவாக்கேசரி; ‘ஆதிகுடி’ காஃபி கிளப்பில் வெண்பொங்கல்; ‘ஶ்ரீரங்கம் மாது ஐயர்’ ஹோட்டலில் ரவாக் கிச்சடி; ‘திருவானைக்கோவில் பார்த்தசாரதியிலே’ நெய்தோசை; தெப்பக்குளம் ‘ஆர்.டி.சியிலே’ ரவாப் பொங்கல்; ஆண்டாள் தெரு ‘ரமா-கஃபேயில்’ பட்டர் ரோஸ்ட், பாலக்கரை ‘சுந்தரம் ஐயர்’ ஹோட்டலில் தேங்கா-சேவைன்னு, தொடர்ந்து சாப்பிட்டுண்டே வந்தார் அண்ணா” என்றான் பாலு.

“நிஜமாவா சித்தப்பா… ஒரு வேளைக்கே, இத்தனைக் கடையேறி, இவ்வளவு சாப்பிட்டாரா அப்பா!” என்ற என் மருமகளிடம், “ஆத்துக்கு வந்ததும், பெரியம்மா பண்ணியிருந்த ‘குழவிக் கொழக்கட்டையிலே’ அரை டஜனை உள்ளே தள்ளிண்டார்” என்று சொல்லி, என் ‘போஜன மஹாத்மியத்தை’ அரங்கேற்றினான் பாலு.

அன்று மாலையில் எனக்கு உடலில் ‘சுரணை’ வந்தது. “இன்னும் ஒரு மணி நேரத்திலே, ராகவன் நார்மலாயிடுவான்” என்ற மாத்ருபூதத்தின் வார்த்தைகள் எனக்கு ஆறுதலளித்தது.

நான் சுயநினைவுடன் எழுந்து உட்கார்ந்தேன். அங்கிருந்த நர்ஸிடம், வெயிட்-மெஷினை கொண்டுவரச் சொல்லி என் எடையைப் பார்த்தேன். அதே ‘நூற்றிப்பத்து கிலோவே’ இருந்தேன்.

“ஏண்டா பூதம்… ‘சாப்பிடாம இருந்தா’ வெயிட் குறையும்னு சொன்னியே? மூணு நாளா… பட்னி கிடந்திருக்கேன் ஒரு கிராம்கூட வெயிட் குறையவே இல்லையேடா” என்றேன்.

“அரசமரத்தை சுத்திட்டு அடிவயித்தை தொட்டுப் பார்த்தாளாம் ஒருத்தி, அது மாதிரியில்லே நீ கேட்கிறே” என்ற பூதத்திடம்...

“ரொம்ப பசிக்கிதுடா... அந்த சாக்லேட் இருக்கா? காலிபண்ணிட்டியா?” என்றேன்.

‘என்னது… சாக்லேட்டா?’, ஐயோ… தின்னிப்பண்டாரமே… என்று அலறிக்கொண்டே நான் இருந்த அறையிலிருந்து, மற்றவர்களுடன் ஓடிப்போனான் மாத்ருபூதம்.