

காவிரிமைந்தன்
கட்டழகுப் பெட்டகத்தை
கனகமணிரத்தினத்தை
அன்பே என் ஆனந்தப் பூங்குயிலே!
என்னை தினம் நனைக்கும் அன்புமழையே!
விழியோரப் பாடங்கள் வேண்டும் என்றபடி உன்னிடம் நெருங்குகிறேன்!
வெட்கத்திரை விலக்கி நீயும் தினம் கொஞ்சும் மொழிபேசு!
கட்டுக்காவல்கள் விட்டுவிலகிட கண்ணே நீ வந்து காதல் கதை நடத்து!
அன்பினில் விளையும் இன்பமெல்லாம் அனுதினம் நம் நெஞ்சில் நிறையட்டும்! துன்பமிருந்தால் அவையினி தூர விலகட்டும்! ஆரணங்கின் சிணுங்கல்கள் அங்கே ஆரம்பமாகட்டும்!
ஆரண்யகாண்டமிது என்றே அணைத்தபடி தொடங்கட்டும்!! ஆனந்த பைரவியில் சங்கீதம் தவழட்டும்!! பூரணமான உன்னழகில் என் கண்கள் மயங்கட்டும்! புள்ளி வைத்த கோலங்கள் ஆங்காங்கே நிலவட்டும்! உன் புன்னகையில் சிந்தும் மலர்முத்தங்கள் வழியட்டும்!!
பதமான சேதிதன்னை பக்குவமாய் பரிமாற
இதமான வார்த்தைகளைக் கோர்த்தெடுத்தேன் தெரியுமா?
நயமான நளினங்களின் நடையலங்காரம்தனை
சுகமாக சொல்லச்சொல்ல என்றைக்கும் இனிக்குமா?
கட்டழகுப் பெட்டகத்தை கனகமணிரத்தினத்தை
கண்களிலே பருகிநின்றால் போதுமா?
கையருகில் நெருங்கினாலும் கனிந்துருகி மயங்கினாலும்
பெண்ணவளின் பேரழகைச் சொல்லித்தான் முடியுமா?
தொட்டகதை தொடருமென்று உள்மனதில் அலைகள் வரும்!
தொடும்போதே மலருகின்ற இதழ்சிரித்துக் கோலமிடும்!
மெளனமே தலைமைதாங்கி கண்கள்நான்கு போராடும்!
சம்மதமே வேண்டுமென இருமனமும் தள்ளாடும்!!
போதைதந்த ராதையவள் புன்னகையில் மயக்கம் வரும்!
தேவியவள் இமையசைத்தால் இமயமலை தலைகுனியும்!
சொல் அதில் பிறக்கும் சுகமது அனைத்தும் அவளின் வாய்மொழி!
வில் என விரைந்து என்னைக் கவரும் கண்களும் பேசும்மொழி!
அதுசரி என்று அவ்வப்போது உச்சரிக்கும் காதலியே.. அனுதினம் என்னை அனுசரி என்றுதானே கேட்கிறேன்!
என்ன வேண்டும் இப்போது என்றாய்! வரம் வேண்டும் அன்பே!
வாழ்க்கை முழுதும் என்னுடன் நீ வரவேண்டும் என்கிற வரம் வேண்டுமென்றேன்!
ஒற்றை வரம்கேட்டே முழுவதுமாய் சொந்தம் கொள்ளத்தான் செய்திட்டீர்.. மற்றுமொரு வரம் உண்டா என்றாய் மரகதமே.. உன் மடிமீது கண்மூடி சாய்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரியவேண்டுவதன்றி வேறென்ன வேண்டுமென்றேன்!

Leave a comment
Upload