தொடர்கள்
கவர் ஸ்டோரி
உள்ளாட்சித் தேர்தல்... - மாறும் அரசியல் காட்சிகள். - விகடகவியார்

20210817230855208.jpeg

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த உடனே, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி தனித்துப் போட்டி என்று அறிவித்தார். தேமுதிகவும் தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறது. பாரதிய ஜனதா, கூட்டணி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்கிறது. இப்போதைக்கு அதிமுகவை கூட்டணிக் கட்சிகள் அம்போ என்று விட்டுவிட்டது போல் தான் தெரிகிறது.

2021081723092152.jpeg

பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்கிறது என்று இரு தினங்களுக்கு முன்பு, புது விளக்கத்தை அதன் கட்சித் தலைவர் ஜிகே மணி சொல்லியிருக்கிறார். அது என்ன கணக்கு என்று தெரியவில்லை.

செப்டம்பர் 14ஆம் தேதி நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கொஞ்சம் மனம் திறந்து தான் பேசியிருக்கிறார். அதிமுக ஒத்துழைப்பு சட்டமன்ற தேர்தலில் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. 10.5 சதவீத இட ஒதுக்கீடு கூட எடப்பாடி வேண்டா வெறுப்பாகத்தான் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், நமக்கு இடைஞ்சல் தான் என்று எடப்பாடி பேசியது எனக்கு தெரியும். அதிமுகவில் இப்போது சரியான தலைவர் இல்லை என்றெல்லாம் பேசியிருக்கிறார். அதே சமயம் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கிடும் போது, ராஜ்யசபா உறுப்பினர் வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு, பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அன்புமணியை அதிமுக தயவில் ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கினார் டாக்டர் ராமதாஸ் என்பதும் உண்மை. அதே சமயம் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ராமதாஸின் பார்வை கொஞ்சம் திமுக பக்கம் திரும்பியது என்பதும் உண்மை. இதெல்லாம் எடப்பாடிக்கு ஏற்கனவே தெரிந்தது தான்.

20210817230950950.jpeg

ஆனால் ராமதாஸின் நிர்வாகிகள் கூட்டத்தில்.... அதிமுக அதிருப்தி பேச்சு, தனித்துப் போட்டி எல்லாமே திமுக தலைவர் திட்டமிட்டு காய் நகர்த்தியதால் நடக்கிறது என்கிறது அதிமுக தரப்பு.

10.5 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை, இட ஒதுக்கீட்டுக்காக போராடிய 21 பேருக்கு மணிமண்டபம், வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு இப்படி வன்னியர்கள் மேல் ஸ்டாலினின் பாசமழை, ராமதாஸ் மனதை மாற்றிவிட்டது. அதனால்தான் ராமதாஸ், தற்போது ஸ்டாலின் புகழ் பாடுகிறார். ஸ்டாலினின் எல்லா அறிவிப்புக்கும் பாராட்டு நன்றி தெரிவிக்கிறார் என்றும் ஒரு பேச்சு வரத் தொடங்கியிருக்கிறது.

ராமதாசை பொருத்தவரை... ஸ்டாலின் நினைத்திருந்தால், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவர் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால்... தேர்தல் நேரத்தில் அவரை ஆதரித்து கருத்தெல்லாம் சொல்லவில்லை. ஆனால், திருமாவளவன் எதிர்ப்பு கோபத்தையும் மீறி அதை சட்டமாக்கினார் ஸ்டாலின். இந்த விஷயத்தை எல்லாம் அமைச்சர் துரைமுருகன், ராமதாஸிடம் ஒரு தகவலாக சொல்ல... அது இன்னும் ஸ்டாலின் மீது மரியாதையைக் கூட்டியது.

20210817231026735.jpeg

இந்த நேரத்தில்தான் அன்புமணி மகள் திருமணத்தில், ஸ்டாலினின் நிலைப்பாடு என்ன என்பதை கவனிக்க காத்திருந்தார் டாக்டர் ராமதாஸ். காரணம்... அன்புமணி, ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் மறந்து, ஸ்டாலின் அன்புமணி மகள் திருமணத்திற்கு துரைமுருகன், பொன்முடி, ஏவா வேலு, கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின் என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு வந்து மரியாதை செய்தார். அது ராமதாசை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அங்கு இருவரும் தனியாகவும் பேசினார்கள். அதன் பிறகுதான்... டாக்டர் ராமதாஸ், இப்போது கூட்டணி எல்லாம் வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை உணர்த்த நாம் தனித்துப் போட்டி என்று அறிவிப்போம். இது மறைமுகமாக திமுகவிற்கு சாதகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை, பார்த்துக் கொள்வோம் என்று முடிவு செய்தார். அதன்படிதான் தனித்துப் போட்டி அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜிகே மணி அறிவித்தார். வன்னியர்களுக்கான சலுகைகளை திமுகதான் அறிவித்தது. எனவே வன்னியர்கள் வாக்கு வங்கி திமுக பக்கம் தான் திரும்பும், இது திமுகவுக்கு சாதகம் என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கட்சி ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டினார் ஸ்டாலின். அந்தக் கூட்டத்தில்... அப்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரும். அந்தத் தேர்தலில் 100% நாம் வெற்றி பெற்றாக வேண்டும். இதில் யார் சரியாக வேலை செய்யாவிட்டாலும், அவர்கள் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும். இப்போது நமக்கு எல்லா சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது, இதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

அப்போது சில ஒன்றிய செயலாளர்கள்... தேர்தல் வாக்குறுதிகளை பற்றி மக்கள் இப்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக... குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய், நகை கடன் தள்ளுபடி இதையெல்லாம் நாம் செய்தாக வேண்டும். அப்போதுதான் நீங்கள் சொல்லும் அந்த நூறு சதவீத வெற்றிக்கு வாய்ப்பு என்று சொன்னார்கள். ஸ்டாலின், சரி... அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன்படி 5 சவரன் நகை கடன் தள்ளுபடி என்று சட்டசபையில் அறிவித்தார்.

இதேபோல் கூட்டணிக் கட்சிகளுக்கு, வார்டு ஒதுக்கீடு பற்றியும் மாவட்ட செயலாளருக்கு தெளிவாக குறிப்பு அனுப்பியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர்களுக்கு எந்த வார்டுகளில் செல்வாக்கு இருக்கிறது என்பதை பார்த்து அதை மட்டும் ஒதுக்குங்கள். அவர்களை சுமக்கிற வேலையெல்லாம் செய்யாதீர்கள் என்பதையும் தெளிவாக சொல்லிவிட்டார்.

உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி, மாநகராட்சி எல்லாவற்றிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று தான் யோசித்தார் ஸ்டாலின். ஆனால், மூத்த தலைவர்கள் வேண்டாம், முதலில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். அதைப் பொறுத்து... அடுத்த கட்ட தேர்தலுக்கு போவோம் என்று சொல்லி ஸ்டாலின் மனதை மாற்றி விட்டார்கள்.

தேர்தல் கூட்டணி என்பது சட்டசபை, பாராளுமன்ற தேர்தலுக்கு சாத்தியம். மற்றபடி உள்ளாட்சித் தேர்தலில், அந்தப் பகுதியில் செல்வாக்கு உள்ள நபர் தான் வெற்றி வாய்ப்பை பெற முடியும். அவரை தவிர்த்து வேறு ஒருவருக்கு வாய்ப்பு தந்தால், அவரே சுயேச்சையாக போட்டியிட்டு கட்சி வேட்பாளரின் வெற்றியை தடுப்பார் அல்லது அவரே வெற்றி பெறுவார். அப்படி அவர் வெற்றி பெற்றால், கட்சி விரோத நடவடிக்கை என்றெல்லாம் பார்க்காமல், கட்சி அவரை அணைத்துக் கொள்ளும் சம்பவமும் நடைபெறும். இதெல்லாம் ஊராட்சி தேர்தலில் நடப்பதுதான். சிலசமயம் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களின் கை ஓங்கி இருப்பதும் உண்டு.

திமுக தலைவர் ஸ்டாலினை பொருத்தவரை... பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை அடுத்து, உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர் வெற்றியாக தொடர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த மாவட்ட அமைச்சர்களுக்கு, அந்த மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியைப் பொறுத்தே உங்கள் மந்திரி பதவி ஆயுள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதையும் உறுதிபட தெரிவித்து இருக்கிறார். திமுக எதற்கும் தயார் என்று களத்தில் இறங்கிவிட்டது. அதிமுக நிலைமை இப்போதைக்கு பாவம், பரிதாபம்.