தொடர்கள்
Daily Articles
பத்மஸ்ரீ விருது வென்ற வில்லிசை கலைஞரின் நினைவலைகள்... - 34 - கலைமாமணி பாரதி திருமகன்

20210819191223531.jpg

‘வில்லுப் பாட்டை – கலையைத் தற்காலத்தில் வாழவைத்த பெருமைக்கு உரியவர்’ என்ற வாசகம், மக்கள் குரலாகி – மகேசன் குரலாகி – மகாபெரியவா குரலாகி – மிகப்பெரிய கலையாக மாறியது என்பவை நாம் அறிந்ததே…

வில்லுப்பாட்டின் உயிர்நாடி – என் தந்தை கையில்… என் தந்தையின் உயிர்நாடி, யார் கையில்..? அத்தகைய பெருமைக்குரியவரை நான் என்றென்றும் நன்றியோடு நினைத்தாக வேண்டும். அவர்தான் – என் தாய் திருமதி மகாலட்சுமி சுப்பு ஆறுமுகம்!

கள்ளங்கபடம் அறியாத வயதில் நடந்த திருமணம் – சொந்த மாமன் மகள் – தன்னையும் அறியாது, சென்னையும் தெரியாது… நெல்லை சீமையின் நித்ய சுமங்கலி என் தாயார் மகாலட்சுமி. இளவயதில் திருமணம் என்பதால், என் தாயை குழந்தையைப் போல் கரம்பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தார் என் தந்தை.

ஓடும் ரயிலில் தனது இருக்கையில் டம்ளரை வைத்தால் கீழே விழும் (விழுந்துவிட்டது!) என்ற உலக அனுபவம் அறியாத உத்தமி!

‘எங்களை வளர்த்ததுகூட பெரிய விஷயமில்லை’ என்று என் தந்தை கூறுமளவுக்கு – என் தாயாரை சிறுகுழந்தையைப் போல் சொல்லி சொல்லி, தற்கால நடைமுறைக்கு ஏற்ப வளர்த்திருக்கிறார்.

எனினும், தற்போது ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் என்று சொல்கிறோமே… அந்தp பேர், என் தந்தைக்கு..! ஆனால், எங்கள் குடும்ப விருட்சத்தின் ‘வேர்’ – என் தாயார்தான்..!

அக்காலத்தில் என் தந்தை நிறைய படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி கொடுப்பார். ஆனால், அவரிடம் ‘என்ன வருமானம், என்ன தொழில்…’ என்று என் தாய் கேட்டதில்லை. வறுமையில் இருந்தபோது, ‘எப்படி வாழப் போகிறோம்?’ என முகம் சுணங்கியதில்லை.

இதுபோன்ற ஒரு மனைவியை தற்காலத்தில் பார்க்க முடியுமா..? ஒரு பெண்ணை காட்ட முடியுமா..? இப்போ சில இடங்களில் தங்களது கணவரிடம் ‘எனக்கும் செலவு பண்ணுங்க, என்ன சம்பளம் வாங்கறீங்க… நான் ஆசைப்பட்டு கேட்கறதை வாங்கி தராம, கணக்கு பார்ப்பீங்களா?’ என பெண்கள் வறுத்தெடுப்பது மிக அதிகமாக உள்ளது என செவிவழி தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இதுமாதிரியெல்லாம் என் தாயார் இதுவரை கேட்டதே இல்லை! எனது தந்தையின் வறுமை அத்தியாயங்களை, என் தாய் ‘வாசுகி பண்பினால்’ எளிதாகக் கடந்துவிட்டார்..!

கடந்த 1975-ம் ஆண்டு முதல் வில்லிசை வளர வளர… என் தந்தைக்கு முதல் ரசிகை – என் தாயார்தான்..! என் தந்தையின் வில்லிசை வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை கூறியிருக்கிறேன். இன்னும் நிறைய சொல்லப் போகிறேன்… அத்தனைக்கும் அஸ்திவாரம் – என் தாயார்தான்..!
எங்களின் வில்லிசை வாழ்க்கையின் சுகமான பக்கங்களை இதுவரை பகிர்ந்தேன்… இன்னும் சில சோகமான பக்கங்கள் – துக்கங்கள் – சோதனைகள் – அதில் பிறந்த சாதனைகள் குறித்த எண்ணங்கள் பொங்கி எழுகின்றன. அவற்றில் ஒன்றை இப்போது கூறுகிறேன்…
சென்னை ஆழ்வார்பேட்டை, நாரதகான சபாவில் ஒருமுறை டிசம்பர் மாத இசை திருவிழாவில் எங்களின் வில்லிசை கச்சேரி... முன்பே ஒப்புக்கொண்ட வில்லிசையில் ‘பகவத்கீதை’ தொடர் நிகழ்ச்சி…
இன்றைக்கு நாரதகான சபாவின் செயலராக இருக்கும் ஹரி அவர்களின் தந்தை கிருஷ்ணசாமி, அப்போது செயலராக இருந்தார் (இருவரும் நெல்லையின் நல்முத்துக்கள்!).

அப்போது என் தாயாருக்கு திடீரென கடும் வயிற்றுவலி… அவருக்கு 10-வது முறையாக தொடர் ஹிரண்யா எனும் குடலிறக்க நோய். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளன்று அன்று மாலையும் நாரதகான சபாவில் எங்களின் வில்லிசை நிகழ்ச்சி. 3-வது நாள் அறுவை சிகிச்சையின்போதும் எங்களுக்கு அங்கு வில்லிசை நிகழ்ச்சி…
எங்கள் குடும்பமே வடபழனி, விஜயா மருத்துவமனையில் கவலையோடு காத்திருந்தது. ‘ஒரு பக்கம் கடமை… மறுபக்கம் தாய்மை…’ – என்ன செய்வது என கலங்கிய என்னை, நான் வணங்கும் காளி கைவிடவில்லை..!

ஆனால், என் தந்தையின் முகத்தில் கவலை – பயம் – துக்கம்… ஏனெனில், என் தாயாரை ஆபரேஷனுக்கு முன் 24 மணி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அன்றிரவு நாரதகான சபாவில் நிகழ்ச்சி முடிந்து, என் தந்தையுடன் நாங்கள் அனைவரும் விஜயா மருத்துவமனைக்கு ஓடிவந்தோம்.

இரவு 11 மணி… படுக்கையில் இருந்த என் தாய் மயக்கம் தெளிந்து கேட்ட முதல் கேள்வி – ‘‘கச்சேரி நல்லபடியா பண்ணீங்களா..?’’ இதை கேட்ட என் தந்தையுடன் எனக்கும் கண்களில் நீர் ஆறாக கொட்டியது. அந்தத் தாய் செய்த தியாகங்கள்தான் – இன்று எங்கள் வாழ்க்கை, விருதுகள் எல்லாமே..!

வறுமை, பசி, விட்டுக்கொடுக்கும் நிலை, மானம், திகில் வாழ்க்கை, எழுத்தை – கலையை நம்பிய தேதிகள், பலரது ஆதரவு, சிலர் தந்த ஏமாற்றம், ஒரு சிலரின் மதிக்காத புரிதல், இல்லா தன்மை – இப்படியான தியாக வாழ்க்கை வாழ்ந்த என் தாய்தான், என் தந்தையின் வாழ்க்கை வரலாற்றை ‘ஒரு உண்மை கவிஞனின் கதை’ என்பதை எழுதி, கடந்த 1990-ம் ஆண்டு புத்தகமாக வெளியானது. 1995-க்குமேல் சிங்கப்பூரிலும் புத்தகம் வெளிவந்தது.

இயல்பான தமிழ்நடை எழுதும் இதயம் – திறந்த புத்தகம்… படித்தவர்களும் (பிள்ளைகள்) செய்ய முடியாத பண்பாட்டு சாதனை..! அவரால் எப்படி எழுத முடிந்தது என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன். அதுவரை…

– காத்திருப்போம்