
கான்ஃபிடன்ஸ் கார்னர்
எனக்கு இந்தப் புத்தகம் என்னுடைய பயிற்சிப்பட்டறையின் போது என் மாணவிக்கு ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதியது என்று சொல்வதை விட தொகுத்தது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும், இது ஆறாம்பாகம். இதன் முன்னுரையில் அவரே சொல்வது போல... “மனதில் எழுந்தவை-செவியில் விழுந்தவை - வலையில் கிடந்தவை”. இந்த வகையில் பக்கத்துக்கு ஒன்றாக 100 குறுங்கதைகள். அவற்றில் இருந்து என்னை கவர்ந்த சில கதைகள்:
“தானுண்டு தான் வேலையுண்டு என்றிருப்பார் அந்த இளைஞர். வேளை கொடுத்த மேலாளரோ எல்லாரோடும் கலந்து பழகச் சொன்னார். ‘என் வேலையைத் தானே செய்ய வேண்டும்’ என்றார் அந்த இளைஞர். மேலாளர் சொன்னார், ‘பூமிக்குள் புதைந்த விதை துளிர்விட நீரின் ஈரம், சூரியச் சாரம், காற்றின் வீச்சு எல்லாமே தேவை. அப்போது தான் வேர் ஆழமாகும். நீ சக மனிதர்களிடமிருந்து விலகி இருந்தால், உன் உற்சாகம் கருகி விடும்.’
வேர்விடத் தொடங்கினார் அந்த இளைஞர். (பளிச் கடைசி வரி!)
“மரண நேரத்தில் பெரும்பாலான மனிதர்கள் மனங்களில் எழும் ஏக்கம் என்னவென்று மருத்துவ நிபுணர் ஒருவர் ஆய்வு செய்தார்.
கீழ்க்கண்ட அபிப்ராயங்கள் கிடைத்தன...
“மற்றவர்கள் விரும்பியதைச் செய்யாமல் நான் விரும்பியதைச் செய்திருக்கலாம்”
“என் உணர்வுகளை இன்னும் துணிச்சலாய் வெளிப்படுத்தியிருக்கலாம்”
“நண்பர்களை இன்னும் நெருங்கி இருக்கலாம்”
“இன்னும் கூட மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம்”
முன்பே தெரிந்தது நல்லதுதானே!” (இப்பவாவது ஏதாவது செய்யணும்)
இந்தக் கதை இன்றைய நிர்வாக உலகில் அவசியத் தேவை...
“நிர்வாகத் திறமை மட்டுமே மிக்க ஒருவரின் நிறுவனம், வெவ்வேறு துறைகளில் வளர்ந்து சாதனை படைத்தது. அதன் ரகசியத்தை கேட்டபோது, அவர் சொன்னார்.... “என் நிறுவனம் எந்த விதமாக வளரவேண்டும் என்ற என் கனவை புரிந்து கொள்ளகூடிய மனிதர்களை நான் வேலைக்குத்தேர்வு செய்தேன்” அவ்வளவுதானா என்ற போட்டியாளர் ஏமாற்றமடைந்தார். “இன்னும் இருக்கிறது; அதன்பிறகு அவர்கள் வேளையில் தலையிடாமல் தள்ளி நின்றுகொண்டு அவர்கள் சரியானதைத்தான் செய்கிறார்களா என்ற மட்டும் கண்காணித்தேன்” என்றார்.
சுதந்திரத்தில் பிறப்பதே செயல்திறன் (சத்தியமான வார்த்தை)”
“வித்தியாசமான மருத்துவர் ஒருவர் இருந்தார், அவர் எழுதும் சீட்டுக்களில் சில நேரம் மருந்துகளின் பெயர்கள் இருப்பதில்லை. மந்திரம் போன்ற பொன் மொழிகள் இருக்கும்...
தனக்கு உறக்கமே வரவில்லை என்று அவரிடம் வந்த ஒருவருக்கு அந்த மருத்துவர் தந்த சீட்டில் இருந்த வாசகம் இது....
“ஒரு நாளில் பகல் பொழுதுக்கு... பயனுள்ள விஷயம் ஒன்றை நீங்கள் பரிசளித்தால், அந்த நாள் இரவு, தூக்கத்தை உங்களுக்கு பரிசாகக் கொடுக்கும்.” ( முயன்று பார்க்கலாம் )
கடைசியாக......
“நண்பரை சந்திக்க சென்ற கவிஞர் கண்ணதாசன், அவர் வீட்டு வாசலின் முன் நின்றார். வாசலில் நிழலாடுவதைக் கண்ட நண்பர் “who is standing out?” கேட்டதும்...
கவிஞர் “An Outstanding Poet” என்ற இருபொருள்படக் குரல் கொடுத்தார்.
எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த கவிஞர், தாய்மொழியை சரியாகக் கற்றால் எந்த மொழியும் வசப்படும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார்.” ( கவியரசு மட்டுமல்ல அவர் மொழியரசும் கூட).
இன்னுமொரு குட்டித் தகவல்... இந்தப் புத்தகம் கோவை விஜயா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அப்போது பதிப்பகம் பற்றி அறியாமல் தான் படித்தேன்.. இப்போது வேலாயுதம் ஐயா பற்றி தெரிந்த உடன், புத்தகத்தின் மதிப்பு மேலும் கூடிவிட்டது.
கான்ஃபிடன்ஸ் கார்னர் - உற்சாக ஊற்று கையடைக்கமாய் !

Leave a comment
Upload