தலைநகரில் கொலை விழா..!

‘செழிப்போடும் செல்வாக்கோடும் பெரும் சக்தியாக விளங்கிய இந்தியத் தலைநகரா, இவ்வளவு சுலபத்தில் தன் காலடியில் பணிந்து வீழ்ந்துவிட்டது..?’ என்ற களிப்பில் மூழ்கிய நாதிர்ஷா, இரவுப் போர்வை நகரை மூடியவுடன் ‘‘சரி, ஓய்வெடுப்போம்..!’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே நடந்தார்.
டெல்லி அரண்மனைக்குள் அலங்கரிக்கப்பட்ட படுக்கையறை, பாரசீக மன்னருக்காகத் தயாராகக் காத்திருந்தது. சுவைத்து மகிழ வெற்றிக்கனி மட்டும் போதுமா? கொஞ்சித் திளைக்கக் கட்டழகுக் கிளி ஒன்றும் அவருக்குத் தேவைப்பட்டது. வந்ததிலிருந்தே அரண்மனையில் தன் கவனத்தைக் கவர்ந்த இந்து அடிமைப் பெண் நூர்பாய், இந்தப் பாரசீகப் பருந்தால் படுக்கையறைக்குக் கொத்திச் செல்லப்பட்டாள்! மதுவும் மாதுவும் மனதை லேசாக்க, படுக்கையில் சரிந்து கண்ணயர்ந்தார் நாதிர்ஷா.
வெள்ளிக்கிழமை காலையும் விடிந்தது. காத்திருந்த செய்தி திகைப்பூட்டியது!
ஜும்மா மசூதியில் தொழுகையின்போது மன்னர் நாதிர்ஷாவின் பெயரை (கட்டாயத்தின் பேரில்தான்!) முன்வைத்து ‘குத்பா’ ஓதப்பட்டபோது, கூடியிருந்த மக்களிடையே கேலிக் கூக்குரல்களும் கண்டனக் குரல்களும் எழுந்தன என்றும், அதைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு வெளியே சற்று அசந்தர்ப்பமான சூழ்நிலை நிலவுகிறது என்றும் வந்து வணங்கி நின்ற மெய்க்காவலர், மன்னரிடம் சொன்னார். பிறகு, தயக்கத்துடன் தரையைப் பார்த்தவாறு மேலும் தொடர்ந்தார் மெய்க்காவலர்.
‘‘சக்ரவர்த்தி, என்னை மன்னிக்க வேண்டும்! துரதிர்ஷ்டசாலியான என்னிடம் தங்களுக்குச் சொல்ல நல்ல சேதி இல்லை! கடைத்தெரு வழியாகச் செல்லும் நம் வீரர்களைப் பார்த்துக் கேடுகெட்ட டெல்லி மக்கள் ஏசுகிறார்கள். கிண்டலும் நையாண்டியும் தாங்க முடியவில்லை. பொறுமைமிக்க நம் தளபதிகள் குதிரைகளில் செல்லும்போது, அவர்கள்மீது மாடிகளிலிருந்து பெண்கள் குப்பையைக் குறிபார்த்துக் கொட்டுகிறார்கள். அரிசி, இறைச்சி என்று கடையில் எது வாங்கப் போனாலும், நமக்கு மட்டும் தனி விலை – மூன்று மடங்கு அதிகம்! தங்கள் ஆணை எதுவும் இல்லாத நிலையில், இந்த விசித்திரமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கலங்கிப் போய் நிற்கிறார்கள் நம் தளபதிகளும் வீரர்களும்!’’ என்று முடித்த மெய்க்காவலர், நாதிர்ஷாவின் காலடியில் விழுந்து ‘‘உள்ளே நகருக்குள் இருக்கும் நம் வீரர்கள் சில நூறு பேர்தான். நம் பெரும்படை ஊருக்கு வெளியே நிற்கிறது. ஏன்? டெல்லி மக்களுக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று தாங்கள் சொன்னதற்காக!’’ என்று புலம்பினார்.
நாதிர்ஷாவின் கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்ட அவர், ‘‘டெல்லி மக்கள் முட்டாள்கள் என்று தோன்றுகிறது. வலுக்கட்டாயமாகத் தண்டனையை வரவழைத்துக் கொள்ளப் பார்க்கும் இவர்களை வேறு எப்படி அழைப்பது? சரி, சற்றுப் பொறுமையோடு இருப்போம். இவர்களுக்குப் புத்தி திரும்புகிறதா என்று பார்ப்போம்!’’
மறுநாள்… தேதி 10, மார்ச் 1739. சனிக்கிழமை… விதி, மேலும் விளையாடியது! அன்று ஈதுல்-ஜுஹா- (பக்ரீத்) பண்டிகை நாள். பலியிடுவதற்காகச் சில பசுமாடுகளை நாதிர்ஷாவின் வீரர்கள் பிடித்துக் கொண்டு போக, இந்துக்கள் ஆவேசப்பட்டனர். ‘ஒழிக’ குரல்கள் ஓங்கின. வீரர்கள்மீது சில கற்களும் விழுந்தன.
இதெல்லாம் ஒருபுறம் நடக்க, அரிசி வாங்க முடியாமல் நாதிர்ஷாவின் வீரர்கள் தவித்தனர். அரிசி மண்டிகள் வைத்திருந்த இந்துக்கள் கடைகளை மூடிக்கொண்டதுதான் காரணம். கோதுமை வியாபாரம் முஸ்லிம்கள் வசம். அதையாவது வாங்கலாம் என்றால், அந்தக் கடைகளின் கதவுகளும் முகத்தில் அறைந்தாற்போல மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து, நாதிர்ஷா படையெடுப்பை எதிர்த்து ஊர்வலங்கள் நடத்தினார்கள்.
திடீரென்று மார்க்கெட் பகுதிக்குப் போன சில பாரசீக வீரர்களை, மக்கள் கூட்டம் அடித்து விரட்டியது. இந்தச் செய்தி நாதிர்ஷாவுக்கு வந்து சேர, ‘‘அது உண்மைதானா..? நேரில் போய் நிலவரத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்!’’ என்று சொல்லி, ஏழு வீரர்களை அனுப்பினார் பாரசீக மன்னர். போனவர்களில் திரும்பியவர்கள் மூன்றே பேர்தான்! உடலெங்கும் காயங்களுடன், உடைகள் கிழிந்த நிலையில் தடுமாறித் திரும்பி வந்து சேர்ந்த அவர்கள், ‘மற்ற வீரர்கள் மக்களிடம் மாட்டிக் கொண்டதாகவும், அவர்களைக் கூட்டம் உயிரோடு எரித்துவிட்டதாகவும்’ கொடூரமான ஒரு செய்தியைச் சொன்னார்கள்.
நாதிர்ஷாவின் உடல் கோபத்தில் அனல் அடுப்பாக மாறியது. மூச்சுக் காற்றின் உஷ்ணம் அதிகரித்தது. ‘‘வெளியே இருக்கும் நம் படைக்குத் தகவல் அனுப்புங்கள். ஊருக்கு உள்ளே வந்து, அவர்கள் அணிவகுக்கட்டும். தளபதிகள் எல்லோரையும் என்னை உடனே சந்திக்கச் சொல்லுங்கள். அதற்கு முன் நானே ஒருமுறை நகரை வலம் சென்று வருகிறேன். நாதிர்ஷா ஊருக்குத் திரும்பிவிட்டதாக இந்த அகம்பாவம் பிடித்த மக்கள் தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது!’’ என்று கர்ஜித்துவிட்டுக் குதிரையேறி, ஒரு சிறு படையுடன் கிளம்பினார்.
அதே சமயம், பாரசீகப் பெரும்படை தகதகக்கும் வாட்களை உயர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து பரவியது.
ஆச்சரியம்தான்! ஆனால், வெற்றி பெற்ற அந்நிய மன்னர்களின் வழக்கத்துக்கு மாறாக, இரண்டு நாட்கள் நாதிர்ஷா பொறுமை காத்தது உண்மை. இதுபற்றி எல்லா வரலாற்றுப் புத்தகங்களுமே குறிப்பிடுகின்றன. அதே சமயம், தமக்குள்ளே எத்தனை பிரச்னைகள் இருந்தாலும், இந்த வேண்டாத விருந்தாளி உள்ளே திடும் பிரவேசம் செய்தது, டெல்லி மக்களுக்கு எரிச்சல் ஊட்டியதிலும் வியப்பில்லை. ஒருவேளை, பாரசீக முழுப் படையின் அசுர பலத்தை நேரில் பார்த்திருந்தால், மக்கள் அச்சத்துடன் அடங்கிப் போயிருக்கலாம். கடைவீதிகளில் உதிரிகளாக, எதிரிகளைக் கண்முன்னே பார்த்தபோது, மக்களுக்குப் பயப்படத் தோன்றவில்லை… பந்தாடிவிட்டார்கள்!
பிறகு…
விதி கண்களை மூடிக்கொண்டு, டெல்லியை நிராதரவாக விட்டுவிட்டு ஓட்டமெடுத்துவிட்டது!
குதிரையில் ஏறிப் புறப்பட்ட நாதிர்ஷா, மார்க்கெட் பகுதியில் இருந்த ரோஷன்-உத்-தௌலா மசூதிப் படிக்கட்டுகளில் தாவிச் சென்று, அங்கிருந்த மேடைமீது அமர்ந்தார். மக்களிடமிருந்து ‘‘திரும்பிப் போ!’’ என்று ஆவேசக் குரல்கள் கிளம்பின.
‘‘இதுதான் கடைசி எச்சரிக்கை! ஐந்து நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். எல்லோரும் கலைந்து போங்கள். ஐந்தே நிமிடங்கள்..!’’ – மிகவும் கலவரமான அந்தச் சூழ்நிலையில், குரலை உயர்த்தி, மிகுந்த கோபத்துடன் முழங்கினார் நாதிர்ஷா.
மக்கள் முகங்களில் பயம் தெரியவில்லை. மாறாக, சில அழுகிய பழங்களும் முட்டைகளும் பாரசீக மன்னர்மீது வந்து விழுந்தன…
அதையடுத்து, அந்த விபரீதம் நிகழ்ந்தது…
ஏதோ மாடியிலிருந்து குறிவைக்கப்பட்ட துப்பாக்கியிலிருந்து சீறிவந்த தோட்டா, நாதிர்ஷாவுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்த ஓர் இளம் மெய்க்காவலர் மார்பில் ஊடுருவ… உயிரிழந்த அந்த வீரரின் உடல், பாரசீக மன்னரின் மடியில் விழுந்தது.
வெறியோடு எழுந்து நின்ற நாதிர்ஷா, தன் இடையிலிருந்து வாளை உருவினார். கோபாவேசத்துடன் அதை உயர்த்திப் பிடித்தார். அதைத் தொடர்ந்து, அடித்தொண்டையில் இருந்து வெளிப்பட்ட அவர் குரல், கனத்த பெரும் அருவியின் கர்ஜனையை ஒத்திருந்தது –
‘‘இந்த நாளை நான் மறுபடியும் உறைக்குள் போடும்வரை பாரசீகப் படை, இந்தக் கேடுகெட்ட மக்களை ஆசைதீரக் கொன்று தீர்க்கட்டும். ஆண், பெண், குழந்தை… யாரையும் விடவேண்டாம். நம் அத்தனை வீரர்களின் வாட்களும் இயங்க வேண்டும். டெல்லியில் ஒரு உயிர்கூட மிஞ்சக்கூடாது…’’
சுமார் முந்நூற்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தைமூரின் படை, டெல்லியில் நிகழ்த்திய வெறியாட்டத்தை வாசகர்கள் மறந்திருக்க முடியாது (இந்தப் புத்தகத்தின் முதல் மற்றும் இரண்டாம் அத்தியாயங்கள்!). அந்தப் பயங்கரம் மீண்டும் நிகழ்ந்தேறியது…
வரலாற்றில் பலமுறை பரிதாபப்பட்டுப் போன டெல்லி என்னும் களத்தில் ஒண்ணேகால் லட்சம் பாரசீக வீரர்கள் ஆவேசத்துடன் வாட்களைச் சுழற்றியவாறு குதித்தார்கள். சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான தலைகள் தலைநகர் வீதிகளில் உருண்டன. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து, ஒடுங்கி ஒளிந்து கொண்டிருந்தவர்களை வெளியே இழுத்துப் போட்டுக் குடும்பம் குடும்பமாக வெட்டிச் சாய்த்தனர் அந்நிய வீரர்கள். பீதியில் ஆழ்ந்த நூற்றுக்கணக்கான டெல்லிவாசிகள், மாடியிலிருந்து கீழே குதித்தும் குறுவாளால் குத்திக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்துக்கள் செந்நிறப் பொடி தூவிக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை நாளான அன்று, வீதிகள் வேறு விதமாகச் சிவந்துபோன கொடூரம் நிகழ்ந்தது!
பிறகு, கடைவீதிப் பகுதிகளுக்குப் பாரசீக வீரர்கள் தீ வைத்தார்கள். கொழுந்து விட்டெரிந்த தீயில், எதிரிப் படையினரால் தூக்கிப் போடப்பட்ட இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கதறித் துடித்து இறந்து போனார்கள்.
யுத்தத்தின் ரத்தச் சூழ்நிலையில், வழக்கமாகத் தலைதூக்கும் வெறியும் அங்கே வெடித்தது. எரிந்த வீடுகளிலிருந்து அலறித் தப்பி ஓடிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான இந்து-முஸ்லிம் பெண்கள் அபகரிக்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டனர். இப்படிக் கற்பழிக்கப்பட்ட பல பெண்கள் குமுறிக் கிளம்பிய தீயில் வீறிட்டவாறு குதித்து, உயிரை மாய்த்துக் கொண்டனர். வீதிகளெங்கும் கிளம்பிய தீச்சுவாலைகள், ‘ஐயோ’ என்பது போல வான் நோக்கித் தன் சிவந்த நெடிய கரங்களை நீட்டி அரற்றின!
காலை எட்டு மணி சுமாருக்குத் துவங்கப்பட்ட இந்தப் பாரசீகக் கொலை விழா, பிற்பகல் வரை நீண்டது..!
சில அமைச்சர்களுடன், கலங்கிப்போன முகத்துடன் நடுங்கியவாறு வந்தார் மொகலாய சக்ரவர்த்தி முகமது ஷா. நாதிர்ஷாவின் காலடியில் விழுந்து, அவர் பாதங்களை முத்தமிட்டார். ‘‘போதும், இந்தத் தண்டனை… என் மக்களை மன்னித்துக் கருணை காட்டுங்கள்!’’ என்று கதறினார். டெல்லி பாதுஷா தன் காலடியில் துவண்டு விழுந்து அழுததைப் பார்த்த நாதிர்ஷாவின் கோபம் சற்றே தணிந்தது. அவர் வாள், மீண்டும் உறைக்குள் சென்றது. ஒருவழியாகப் பாரசீக வீரர்கள் ஓய்ந்தார்கள்.
அந்த ஒரு நாளில் நாதிர்ஷா வீரர்களின் வாட்களுக்கு இரையான டெல்லி மக்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது!
நாள் முழுவதும் கொலைவெறியில் இருந்ததாலோ என்னவோ, அன்றிரவு படுக்கப் போன நாதிர்ஷாவின் உடல் கொதித்துக் கொண்டிருந்தது என்று கேள்வி. ‘‘ஐயோ… என் உடல் எரிகிறதே!’’ என்று படுக்கையில் புரண்டவாறு பாரசீக மன்னர் அலறித் துடிக்க, பயந்து ஓடிச்சென்ற அழகி நூர்பாய், ஹகீம் அலாவிகான் என்னும் வைத்தியரை அழைத்துக்கொண்டு வந்தாள். தான் தயாரித்த களிம்பை நாதிர்ஷாவின் உடலில் தேய்த்து சிகிச்சை அளித்த அந்த முதியவர், ‘‘இதென்ன கொலைவெறி..? ஒரு சிறந்த மன்னனுக்கு அழகா இது..? கோபம் என்பது பைத்தியக்காரத்தனத்துக்குப் பிறந்தது என உங்களுக்குத் தெரியாதா..? அப்பாவி மக்களை, முதியவர்களை, பெண்களை, குழந்தைகளைக் கொல்வது வீரமா..? இதுதான் தங்கள் நாட்டுக் கலாசாரமா..?’’ என்று துணிவோடு சரமாரியாக ‘டோஸ்’ விட… ஆயிரக்கணக்கானவர்களை வெட்டித் தள்ளிய நாதிர்ஷா, தட்டுத் தடுமாறி நின்ற இந்த முதியவரின் சுட்டெரிக்கும் பேச்சுக்கு முன் தோற்றுத் தலைகுனிந்து, ‘‘தவறுதான்! இப்படி நடந்துவிட்டது… உங்கள் ஊர் மக்கள்தான் முதலில் காரணம்… இந்த அளவுக்குத் தூண்டிவிட்டுவிட்டார்கள்..!’’ என்று சற்றே கூச்சத்துடன் முணுமுணுத்ததாகக் கூறப்படுகிறது!
யுத்தங்கள் நடந்து முடிந்த பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்படுவதுண்டு. அதில், திருமண ஒப்பந்தம் ஒன்றையும் சேர்த்துக் கொள்வது – அந்தக் காலத்தில் வழக்கம்! அதன்படி, மறைந்த ஔரங்கசீப் பாதுஷாவின் பேரன் இஸ்தன் பக்ஷ் (காம்பக்ஷ் மகன்!) என்னும் இளவரசரின் மகளுக்கும் நாதிர்ஷாவின் மகள் நெஸிர் இல்லாஹ் மிர்ஸாவுக்கும் (நகரெங்கும் குவியலாகக் கிடந்த உடல்களை அப்புறப்படுத்தி, டெல்லி வீதிகளைத் துப்புரவாக்கிய பிறகு!) திருமணம் நடந்தது.
‘வசதியான இடம்… நிறையவே வரதட்சணை வாங்க வேண்டும்!’ என்று நினைத்த பாரசீக மன்னர், டெல்லி பாதுஷாவிடம் மரியாதைக்குக்கூட அனுமதி கேட்காமல், கஜானாவைத் துடைத்து எடுத்துக் கொண்டுவிட்டதாக வரலாறு கூறுகிறது!
எழுபது கோடி ரூபாய் தங்க-வெள்ளி நாணயங்கள், ஐம்பது கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத் தாம்பாளங்கள், 100 யானைகள், 7,000 குதிரைகள், 10,000 ஒட்டகங்கள், கலைஞர்கள் 150 பேர், தச்சர்கள் – பொற்கொல்லர்கள் என்று 500 பேர்… உச்சக்கட்டமாக, பலகோடி ரூபாய் மதிப்புள்ள மயிலாசனம்..!
இப்படி 348 ஆண்டுகள் மொகலாய ராஜபரம்பரை சேர்த்து வைத்திருந்த சொத்து முழுவதும் ஒட்டுமொத்தமாக ஒரே நிமிடத்தில் கைமாறிப் போய்விட்டது! மிஞ்சியிருந்தது ஒன்றே ஒன்று… அதுதான், விலை மதிக்க முடியாத கோஹினூர் வைரம்! கேட்டால், ‘‘அதைக் காணோம்… எங்கு போனது என்று தெரியவில்லை!’’ என்றார் சக்ரவர்த்தி(?) முகமது ஷா, சற்றே கலவரத்துடன்! ஆனால், ‘வைரம் எங்கும் போகவில்லை… மிக அருகிலேயே – மொகலாய பாதுஷாவின் தலைப்பாகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது!’ – சரேலென்று ஒரு ஊகம், நாதிர்ஷாவின் மூளையில் பாய்ந்து ஊடுருவியது.
தன் எதிரில் நடுங்கி நின்று கொண்டிருந்த டெல்லி சக்ரவர்த்தி முகமது ஷாவிடம் விடைபெற்றுக் கொண்ட நாதிர்ஷா, திடீரென்று ‘‘பாதுஷா அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்… நெருங்கிய இரு நண்பர்கள் பிரியும்போது, தலைப்பாகைகளை மாற்றிக் கொள்வது எங்கள் நாட்டுச் சம்பிரதாயம்!’’ என்றார் புன்னகையுடன். மறுகணம் தானாகவே முகமது ஷாவின் தலைப்பாகையை எடுத்துக்கொண்டு, தன் தலைப்பாகையை அவருக்கு அணிவித்தார். ‘நாகரிகம், நாசூக்கு எல்லாம் காட்டத் தேவையில்லை’ என்று முடிவு கட்டிய பாரசீக மன்னர், தன் வசம் வந்த தலைப்பாகையை அங்கேயே கழற்றிப் பார்க்க… பளீரென்று மின்னலடித்தவாறு கீழே விழுந்தது – கோஹினூர் வைரம்..!
‘இந்த ஒரு வைரத்தைக் கொண்டுதான் எப்படியோ மிச்சசொச்ச வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டும்’ என்று டெல்லி சக்ரவர்த்தி நினைத்திருக்கக்கூடும். அந்த ஆசையும் நிராசையாகிப் போனது. ஏமாற்றமும் வைரத்தின் ஒளியும் தாக்க… தலையைக் குனிந்துகொண்டு பரிதாபமாக அமர்ந்திருந்த மொகலாய பாதுஷாவிடம், ‘‘ஓ! இதுதான் நான் கேள்விப்பட்ட வைரமா..?! சரி, நான் கிளம்புகிறேன்… நம் மதத்துக்கும் மண்ணுக்கும் எப்போது ஆபத்து வந்தாலும், உதவிக்கு உரிமையோடு இந்த நண்பரைத் தாங்கள் கூப்பிட்டனுப்பலாம். உடனே வருவேன்!’’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு நடந்தார் நாதிர்ஷா.
ஐம்பத்தேழு நாட்களுக்கு டெல்லியில் ஆர்ப்பாட்டமாகத் தங்கியிருந்த இந்த பாரசீக நாட்டு அரசர் நாதிர்ஷா, ஊருக்கு எடுத்துக்கொண்டு போகாமல் விட்டுவிட்டுப் போனது ஒன்றை மட்டுமே!
டெல்லியில் தங்கியிருந்த நாட்களில் தன்னை மகிழ்வித்த அடிமைப் பெண் நூர்பாயிடம் தன் மனதைப் பறிகொடுத்த நாதிர்ஷா, அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போக விரும்பினார். ‘‘நான் வரமாட்டேன்… தயவுசெய்து என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள். நான் இந்த மண்ணிலேயே சாக விரும்புகிறேன்…’’ என்று அந்தப் பேரழகி, நாதிர்ஷாவின் காலில் விழுந்து புரண்டு அழவே… மிகவும் மனம் இளகிப்போன மன்னர், நூர்பாயை ஆதரவோடு தூக்கி நிறுத்தி, ‘‘சரி… உன் விருப்பம்..!’’ என்று சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டதாக ஒரு ‘குட்டித் தகவல்’ உண்டு!

Leave a comment
Upload