தொடர்கள்
விகடகவியார்
வந்தார் புது ஆளுநர்... - விகடகவியார்

20210817180816340.jpeg

கடந்த ஆறு மாதங்களாக தமிழக ஆளுநர் மாற்றப்படுவார் என்ற வதந்தி உலாவிக் கொண்டிருந்தது. சென்ற வாரம் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.
ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார் என்ற அறிவிப்பும் அந்த உத்தரவில் இருந்தது.

இந்த அறிவிப்பு வெளியானதும்... தமிழக முதல்வர் ஸ்டாலின், புதிய ஆளுநரை வரவேற்றும், பன்வாரிலால் புரோகித் அவர்களை பாசத்துடன் பழகினார் என்று பாராட்டியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

ஆனால் ஆர்.என். ரவி நியமனத்தை, கடுமையாக ஆட்சேபித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது வழக்கம். ஆனால் அதற்கு முற்றிலும் புறம்பாக, பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் பொறுப்பில் இருந்தவரை ஆளுநராக நியமித்தது, ஜனநாயக படுகொலை நடத்த அவரை ஆயுதமாக பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள கட்சிகள் மக்களை திரட்டி போராட வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை செய்திருந்தார் அழகிரி. தமிழக காங்கிரஸ் தலைவரின் அச்சம் நியாயமானது தான் என்றார் தொல் திருமாவளவன்.

20210817180850418.jpeg

1976 ஐபிஎஸ் ஆபீஸரான ஆர்.என். ரவி காவல்துறையில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அதில் உளவுத்துறையும் ஒன்று. ஆர்என் ரவியை பயங்கரவாத குழுக்களுடன், பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பயன்படுத்தியது. குறிப்பாக நாகாலாந்து பயங்கரவாதிகளுடன் ரவி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டார். ஆனால், அப்போதே ரவிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் விமர்சனம் எழுந்தது. பழங்குடிகளுக்கு எதிரானவர் ரவி என்று கம்யூனிஸ்டுகள் அவரைச் சாடினார்கள். அதன்பிறகு அவர் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கும் அவர் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் உஷாராக தான் இருந்தார்.

ஆளுநரை நியமிப்பதற்கு என்று எந்த வரையறையும் இல்லை. ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற குர்மீத் சிங், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆபீசர்கள் ஓய்வு பெறும் தருணத்தில்.... அவர்கள் பார்வை அரசியல் கட்சிகளை நோக்கியும், ஆதாய பதவிகளை வாங்குவதிலும் அவர்கள் கவனம் செல்ல தொடங்கியிருக்கிறது என்பது உண்மை.

இதை முதல்முதலில் காங்கிரஸ்தான் துவக்கியது. வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தவரை அரசியலுக்கு இழுத்தது காங்கிரஸ்தான். ரமேஷ் பண்டாரி, நட்வர்சிங், சசிதரூர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பாரதிய ஜனதாவும் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை தான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் நியமித்திருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியை ராஜ்யசபா உறுப்பினராக்கி இருக்கிறது. நீதிபதி சதாசிவம், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போதுகூட... பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக தீர்ப்புகளை அவர் வழங்கியதற்கு, தரப்பட்ட பரிசு என்ற விமர்சனம் கூட எழுந்தது. அதேசமயம் கே.எஸ். அழகிரி உளவுத்துறை அதிகாரியை ஆளுநராக நியமித்ததை ஆட்சேபனையாக வைத்திருக்கிறார். இதற்கும் வழிகாட்டியது காங்கிரஸ்தான். ஏற்கனவே உளவுத்துறை இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் காங்கிரஸ் ஆளுநராக நியமித்து, பிரதமரின் செயலாளராக இருந்த பிசி அலெக்சாண்டரை தமிழக ஆளுநராக நியமித்தது. இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். மத்திய அரசின் உளவாளி ஆளுநர் என்பது உண்மைதான். காங்கிரஸ் ஆட்சியிலும் அதைத்தான் செய்தார்கள்.