தொடர்கள்
மருத்துவம்
கோவிட் தடுப்பூசி சாதனைகள்... - தில்லைக்கரசி சம்பத்

20210817144757933.jpeg

கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா பெரும் சாதனை புரிந்திருக்கிறது. இதுவரை 75.89 கோடி இந்திய மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 16, 2021-லிருந்து அரசு தடுப்பூசிகளை வழங்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, கடந்த ஜூனில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.

இந்த வேகத்தில் தொடர்ந்து பயணித்தால், மத்தியரசின் இலக்கு தேதியான 2021 டிசம்பருக்குள் தகுதியுடைய அனைத்து இந்திய மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது.

கொரோனா வந்துவிட்டால், அதை குணப்படுத்தும் வகையில் உயிர் காக்கும் மருந்து எதுவுமே கண்டுப்பிடிக்காத தற்போதைய சூழலில் கொரோனா வைரசை வெல்ல தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசி பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

சென்ற வருட மத்தியில், உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவிய காலக்கட்டத்தில் மத்திய அரசு தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணிகளை முடுக்கிவிட்டது. இதன் விளைவாக கோவிஷீல்டு தடுப்பூசி டிசம்பரில் சோதனை கட்டங்களை தாண்டி ஜனவரி 2021இல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து கோவேக்சினும் பயன்பாட்டுக்கு வந்தது.

மேலும் வெளிநாட்டிலிருந்து ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்சன் ஆகிய தடுப்பூசிளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது வரை பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிகம் போடப்பட்டு வருகிறது. மார்ச் 2021-ல் தொடங்கி இந்தியாவையே சூறாவளியாக சுழன்று அடித்து, பெரும் உயிர்ச்சேதங்களை விளைவித்த நாசக்கார இரண்டாம் அலையின் சமயத்தில் தடுப்பூசிகளின் உற்பத்தி குறைவாக இருந்ததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டன.

தற்போது இரண்டாம் அலை மிகவும் குறைந்து வரும் வேளையில், தடுப்பூசி உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, ஒரே நாளில் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சாதனை செய்யப்பட்டது.

செப் 1 அன்று...

2-வது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா மற்றுமொரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. அன்று (செப்1) மாலை வரையில் மட்டும் சுமார் 1.28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

புதிய கொள்கையின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக அளித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில், மக்கள் மத்தியில் தயக்கம் இருந்து வந்தது.

ஆனால் மருத்துவர்கள், நிபுணர்கள், தடுப்பூசியின் நன்மைகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்ததிலும், பெரும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முன்வந்து தங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, தற்போது தடுப்பூசிகளை மக்கள் ஆர்வமாக போட்டுக்கொள்கின்றனர். இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75 கோடியை தாண்டி, புதிய சாதனை படைத்துள்ளது. இதற்காக இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் பூனம் கேட்ரபால்...

“கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்த பிறகு, அதை செலுத்திக் கொள்வதில் மக்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் நாடு முழுவதும் 10 கோடி டோஸ் போடுவதற்கே 85 நாட்கள் ஆகி இருக்கிறது.

இந்த நிலை தற்போது மாறி, 13 நாட்களில் 10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு, இந்தியா புதிய சாதனை படைத்துளளது. இதன் மூலம் 65 கோடியாக இருந்த எண்ணிக்கை, தற்போது 75 கோடியை தாண்டி டோஸ் செலுத்தப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறி இருக்கிறார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில்... இமாச்சல பிரதேசம், லடாக், சிக்கிம், லட்சத்தீவு, தாத்ரா அண்டு நகார் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகிய மாநிலங்கள் 100 % முதல் டோஸ் செலுத்தி சாதனை புரிந்திருக்கின்றன.

பிரதமர் மோடியும் “இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை, டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதித்திருப்பது, ஒவ்வொரு இந்தியனையும் பெருமை அடைய செய்யும். சுயசார்பு இந்தியா என்ற கனவை நனவாக்க, நம் நாட்டின் அறிவியலாளர்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது” என தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ (UNIVERSAL PASS CUM CERTIFICATE) ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்தச் சான்றிதழை பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து-ரயில்-விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்களின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம்.

அடுத்து, நமது தமிழகத்தில் இதுவரை 4 கோடி மக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை செய்யப்பட்டிருக்கிறது.

அதன் அங்கமாக செப்டம்பர் 12 அன்று, தமிழ்நாட்டில் தமிழக அரசு சார்பாக 40 ஆயிரம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இவற்றின் மூலம் அன்று ஒரு நாளில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதையும் தாண்டிய எண்ணிக்கையில் பெரும் சாதனை புரிந்திருக்கிறது தமிழகம்.

செப் 12 அன்று நடந்த இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்களில், பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள், மிகப்பெரிய பலன்களை கொடுத்துள்ளது.

அன்று மட்டுமே... மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். இது இந்திய அளவில் வேறு எந்த மாநிலமும் எட்ட முடியாத சாதனை.

குறிப்பாக இந்த முகாம், பொதுமக்களிடையே விழிப்புணர்வு விழா போல் மாறி இருக்கிறது.

இதுவரை 66 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். மொத்தம் 6 கோடி பேருக்கு போட வேண்டும். அதில் 4 கோடியே 3 லட்சம் பேர் போட்டுள்ளார்கள்.

தடுப்பூசி கூடுதலாக கிடைத்தால், இன்னும் அதிக அளவில் போட முடியும். மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தொலைபேசியில் தொடர்புகொண்டு, சிறப்பு முகாம் பற்றி பாராட்டினார். தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் சிறப்பாக உள்ளது என்றார்.

அதைத் தொடர்ந்து 13½ லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் கூடுதலாக அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.

80 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால், 3-வது அலை வந்தாலும் பயமில்லை.

செப் 12 அன்று நடந்த முகாம்களுக்கு, ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட முகாம்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பொதுமக்கள் வந்ததால், சிலருக்கு போட முடியவில்லை. அவ்வாறு போட முடியாதவர்களிடம் தொடர்பு எண்களை அலுவலர்கள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு மறுநாள் ஊசி போடப்பட்டது.

சிறப்பு முகாம்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதால், மீண்டும் குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் செப் 12 இல் நடைப்பற போவதாக, அரசு சார்பில் மக்களிடம் பெரும் அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத் தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுமக்களின் கைப்பேசிகளிலும் குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பப்பட்டது. சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி போட முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு வார்டிலும் 2 நடமாடும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டது. ஒரே இடத்தில் நடமாடும் முகாம்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

நீட் தேர்வு எழுதுவதற்கு வெளியூர்களில் இருந்து சென்னை வந்த ஏராளமான மாணவ-மாணவிகளுக்கும் இந்த முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டது.

99.25% முகாம்களிலும் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகள் கைவசம் இருந்தது. இதனால் முகாமுக்கு வந்த யாரும் தடுப்பூசி போடாமல் ஏமாற்றம் அடையவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

முகாம்களை தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருவரும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

20210817144621402.jpeg

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்...

“செப் 12 அன்று டிவிட்டரில்.... 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை!” என்று தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களைப் பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்குச் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

“வீடில்லா நடைப்பாதைவாசிகள், நாடோடிகள், சாலையோர பிச்சைக்காரர்கள் என இந்த மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை மாதத்திலேயே சொன்னதையடுத்து, தமிழகரசின் சார்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் “15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 நகர பஞ்சாயத்துகள் உட்பட 664 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வீடற்ற நடைபாதைவாசிகளுக்கு தீன்தயாள் அந்தியோதயா யோஜனா மூலம் உதவி வழங்கப்படுகிறது. அதில் கொடுக்கப்படும் நிதி அவர்களின் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும்” என்று சொல்லப்பட்டது. அதன்படியே தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 500 கிராமங்களில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் (செப் 14-ன் தகவல்படி) தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், 100 சதவீதம் முதல் டோஸ் போட்டுக்கொண்ட மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

அதேபோல, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்த திட்டமிட்டு, அதன்படி ‌நடைப்பெற்றால்... நீலகிரி மாவட்டம் தமிழகத்திலேயே, இரண்டாம் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் செலுத்திக்கொண்ட முதல் மாவட்டமாக மாறும்.

தமிழக அரசு அதிக தடுப்பூசிகளை நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கியதால், இந்த இலக்கை எட்ட முடிந்தது என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் பல கிராமங்களில் குறைவான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். அதனால் தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்வோர் தடுப்பூசி போட்டால் தான் வேலை கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் கண்டிப்பாக கூறியதில், கிராம மக்கள் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர்.

செரியலூர் கிராமத்தில் வருவாய்த்துறை ஊழியர்களுடன், சுகாதார பணியாளர்களும் இணைந்து வீடுவீடாக தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால், குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று ஊராட்சி சார்பில் பரிசு திட்டம் அறிவித்த நாளில் மட்டும்... சுமார் 400 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பரிசுக்குரியவர்கள், குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டு 50 பேருக்கு குடம் , பக்கெட் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது. இதே முறையை மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தி கொரோனா தடுப்பூசி போட, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொடைக்கானல் பழங்குடியின கிராமங்களில் மொத்தம் உள்ள 3,365 பேரும் தடுப்பூசி போட்டு 100% தடுப்பூசி போட்ட சாதனையை படைத்துள்ளனர்.

செப் 12 நிலவரப்படி...

சென்னை மாநகரில் இதுவரை 51 சதவீதம் பேர் முதல் தவணை ஊசி போட்டுள்ளார்கள். 24 சதவீதம் பேர் 2-வது தவணை ஊசி போட்டுள்ளனர். திருச்சி, செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரி 45 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணை தடுப்பூசியை போட்டு இருக்கிறார்கள்.

காஞ்சிபுரத்தில் 60 சதவீதம் பேர் முதல் தவணை ஊசி போட்டுள்ளார்கள். 2-வது தவணையை 13 சதவீதம் பேர் போட்டுள்ளார்கள்.

இந்த வரிசையில் கோவை, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் தவணையை போட்டுள்ளார்கள்.

சில இடங்களில், துரதிர்ஷ்டவசமாக... ஒரே நேரத்தில் இரண்டு தவணை தடுப்பூசிகளுமே செலுத்தப்பட்ட சம்பவங்களும்... ஏற்கனவே 2 தவணை போட்டவர்களுக்கு, மூன்றாம் முறை தடுப்பூசி போடப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தன.

திண்டிவனத்தை அடுத்த விட்டலாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் விவசாயி...

“ஏற்கனவே எனது தாய் கண்ணம்மாவுக்கு (வயது 70) 2 தவணைகள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை நான் எனது விவசாய நிலத்துக்கு சென்றிருந்தேன். எனது தாயாருக்கு சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. எனது தாயார் பொது இலவச மருத்துவமுகாம் என நினைத்து விட்டலாபுரத்தில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமுக்கு போனதில், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் எனது தாயாரிடம் எந்த விபரத்தையும் கேட்காமல் அவருக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்” என்று புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் கூறினார்.

செப்டம்பர் 1 முதல் தமிழ் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் மட்டுமே வகுப்பில் அமர்ந்து பாடம் கவனிக்க அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்கள் கல்லூரியினுள் அனுமதிக்கப்படவில்லை. பதினெட்டு வயது நிறைவடையாத கல்லூரி மாணவர்கள், கல்லூரிக்கும் வர முடியாமல் தடுப்பூசியும் போட முடியாமல் அலைகழிக்கப்பட்டனர். பதினெட்டு வயது நிறைவடையாதவர்கள் தொடர்ந்து கல்லூரிக்கு வர என்ன வழி என்ற குழப்ப நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசின் விஷேஷ ஏற்பாடாக...

24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் அடையாறு நகர நல்வாழ்வு மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து சென்னையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தடுப்பூசி போட வரும் மக்கள் உடனடியாக தடுப்பூசி பெறும் வகையில் அவசர சிகிச்சை பிரிவின் அருகேயே இந்த மையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உள்நாட்டிலேயே ZyCOV-D என்ற கோவிட் தடுப்பூசி Zydus-Cadila நிறுவனமும், PTX-COVID19-B எனப்படும் கோவிட் தடுப்பூசி Biological E நிறுவனமும் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிகளுக்காக பல வளர்ந்த நாடுகள் கூட அடுத்த நாட்டிடம் கையேந்தி நிற்கும் வேளையில், உள்நாட்டிலேயே தடுப்பூசி உற்பத்தி செய்து இந்தியர்களுக்கு கொடுத்தது மட்டுமல்லாமல்... கையேந்தும் அடுத்த நாடுகளுக்கும் இன்று உதவிக்கரம் நீட்டுகிறது இந்தியா. இவையெல்லாம் ஏதோ ஒரு நாளில் நடக்கும் மாயாஜாலங்கள் இல்லை.

கடந்த 70 ஆண்டுகளாக ஜவஹர்லால் நேரு ஆண்ட காலத்திலிருந்தே படிப்படியாக அறிவியல், ஆராய்ச்சி துறைகள் சிறப்பாக கட்டமைக்கப்பட்டதாலேயே, இந்தியா தொழில்நுட்பத்திலும், அறிவியல் ஆராய்ச்சிகளிலும் இன்று வளர்ந்த நாடுகளோடு போட்டி போட்டு, உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. கொரோனாவால் இந்தியா பாதிக்கப்பட்ட போது, ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசிகளை வாங்குமாறு பிரதமர் மோடியிடம் கேட்ட போது... “தேவையில்லை..! உள்நாட்டிலேயே நாங்கள் எங்களது தடுப்பூசியை உற்பத்தி செய்து கொள்வோம்” என்று கூறி தடுப்பூசி பணிகளை முடுக்கி, அதில் வெற்றிக்கண்ட மோடியை இந்நாடு பாராட்டுகிறது. அதே சமயத்தில்... தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி விட வேண்டும் என்று உறுதி பூண்டு, மிகச் சிறப்பாக செயல்படுவது, தமிழக மக்களின் பாராட்டுக்குரியதாக விளங்குகிறது.