
பேராழியைவிட பெரியது தமிழ் இலக்கிய உலகம். அதை அவ்வப்போது புரட்டிப்போட்ட ஆழிப்பேரலைகள் பல... அவ்வாறான ஒரு ஆழிப்பேரலையே ‘எழுத்தாளர் கோணங்கி’. அந்தப் பேரலையில் நனைந்த தமிழ் வாசகர் உலகு இன்னும் தலைதுவட்ட மனமில்லாமல் நனைந்து கொண்டே இருக்கிறது. அந்தப்பேரலையில் மூழ்கி அதிலிருந்து ஒரு சிறு துளியை ஒரு குப்பிக்குள் அடக்கி உங்களுக்கு பருகத் தரும் முயற்சியே இது.
கோவை, விஜயா பதிப்பக வாசகர் வட்டத்தின் சார்பாக கரிசல் எழுத்தின் பிதாமகர் கி.ரா. பெயரில் ஏற்படுபடுத்தப்பட்டு, சக்தி மசாலா குழுமத்தின் சார்பாக விருதும், ஐந்து லட்ச ரூபாய் சன்மானமும் தரப்படுகின்றது. கி.ரா-வே சொல்வது போல கதைசொல்லிக்கான உயர்ந்த விருது வாசகரால் கொண்டாடப்படுவதுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாளை கோணங்கி கொண்டப்படுகிறார்... இது தொடரும்... என்றென்றும்...
வணக்கம் ஐயா, விகடகவி மின்னிதழிலிருந்து கி.ரா விருது பெரும் உங்களை பாராட்டி உங்களோடு சிறிது பேச வேண்டி இந்த சந்திப்பு.
கோணங்கி: வணக்கம். உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நானே பேசிவிடட்டுமா அல்லது கேள்விகள் உண்டா?
விகடகவி: என்னிடம் சில கேள்விகள் உண்டு ஐயா. அதை நான் கேட்கிறேன், நீங்கள் உங்களுக்கு பிடித்த வகையில் பதில்களைத் தரலாம்.
முதலில், உங்களுக்கு எழுதவேண்டும் என்று தோன்றியபோது எழுதியது என்ன?
உங்கள் கதையின் தலைப்புக்கள் மிகவும் வித்தியாசமாய் இருக்கிறதே, “கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம், இந்த ஒன்று என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்கியது ‘உப்புக்கதியில் மறையும் சிறுத்தை’ இருள்வ மௌத்திகம்” இந்த விஷயங்கள், எப்படி இந்த தலைப்புகளை வைக்கிறீர்கள்?
கதையிலே இவை சொல்லப்படுகிறதா? அதன் காரணம் என்ன? வாசகர்களை கவருவதற்காக வைக்கிறீர்களா? ஒரு வகையான மார்க்கெட்டிங் உத்தியா? (இந்த இடத்தில் கோணங்கி குறுக்கிட்டு ..ம் அழகான கேள்வி என்கிறார்) இப்ப ‘உப்புக்கதியில் மறையும் சிறுத்தை’ அப்படீன்னா... அதைவைத்து கதையை ஊகிக்க முடியவில்லை.. எதனால் இப்படி ஒரு தலைப்பு? இது இரண்டாவது கேள்வி..
மூணாவது கேள்வி, உங்களைப்பத்தி எஸ். ராமகிருஷ்ணன் நிறைய எழுதியிருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் , மனதை சந்தோஷப்படுத்தும் விஷயம் உங்களுடைய பயணம். உங்களை இந்த நேர்காணலுக்காக தொடர்புகொள்ள முயற்சித்தபோதெல்லாம், என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. அப்போதெல்லாம் ‘சித்தம் போக்கு, சிவன் போக்கு’ என்று எங்கேயோ பயணப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போல என்று எஸ்.ரா சொன்னதை வைத்து நான் நினைத்துக்கொண்டேன்.. (சிரிக்கிறார்..) ஆக... பயணத்தில் தான் உங்களுடைய கதையின் கரு கிடைக்கிறதா, அல்லது பயணத்திற்கும் கதைகளுக்கும் சம்பந்தம் இல்லையா? உங்கள் வாழ்க்கையில் பயணத்தின் பங்கு என்ன? இதுதான் மூணாவது கேள்வி.
நாலாவது கேள்வி.. இப்ப என்ன எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? இன்னும் எழுதாம என்ன விட்டுவைத்திருக்கிறீர்கள்..? இதை நான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது ஏதாவது இருக்கிறதா?
முடிவாக, உங்களுடைய சிற்றிதழான “கல்குதிரை”யின் அடுத்த திட்டம் என்ன? இப்போது கி.ரா விருதுக்குப் பிறகு நிறைய வாசகர்கள் உங்கள் படைப்புக்களை அணுக முற்படுவார்கள். அவர்களை சரியான முறையில் அணுக, கல்குதிரையை மின்னிதழாக மாற்றும் எண்ணம் உண்டா? அல்லது அச்சு வடிவம் தானா.?

இந்தக் கேள்விகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டவர், நான் குறிப்புகளாக சிலவற்றை எழுதி வைத்திருக்கிறேன்... அதையே உங்களிடம் விரிவாக பகிர்ந்து கொள்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று துவங்கினார்...
“நமக்கான கதை மரபு என்ன என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது, சமஸ்க்ருத கதைகள் வழியான மரபா? அதாவது புராணங்கள் வழியான மரபா? என்று பார்க்கும்போது, கடல் சார்ந்துதான் நாம வாரோம்., தென் கடல் என்பது மிகவும் பழமையானது. அது மேகலா ரேகை என்று கண்டுபிடிச்சேன். மேகலாத் தெய்வம், மணிமேகலையை கொண்டுபோகும் அந்த தெய்வம், அது தான் மேகலா ரேகை. ஆபுத்திரனுக்கு கிடைக்கும் அட்சய பாத்திரம் நம்முடைய தொன்மம். மேகலா ரேகை என்பது பூமத்தியரேகைதான். அது மகரத் திருப்பம், கடகத் திருப்பம் என்பது உஜ்ஜயினி. மகரத் திருப்பம் என்பது இலங்கையில் சேரும், தென் பகுதியில் உள்ள எல்லாமே சேரும், சித்தன்ன வாசல் ஓவியத்துல மகர மீன் இருக்கிறது. மகரம் என்பது (tropic of capricorn) மகர ரேகை தான். குறைத்து நூறு முறைக்கு மேலாவது நான் சித்தன்னவாசல் ஓவியங்களை பார்க்க போயிருக்கிறேன். ஓவியத்தில் உள்ள பச்சை வண்ணத்தை பார்த்துகொண்டேயிருக்கும்போது, அது வெவ்வேறு பச்சையாய் மாறுகிறது. அந்த பச்சை இலைகள் ஒருவகையில், தாந்த்ரிக் இலைகள் போல எனக்குப் படுகிறது. சித்தன்னவாசல் தாந்த்ரிக் முறையில் செயல்பட்ட இடம் தான். அங்கே நான் பார்த்த மகர மீன் என்பது, சூரியனின் நிழல் விழாத ஆற்றுடைய புள்ளி அது. அதைத்தான் மேகலா ரேகையில் பார்க்கிறேன். இதை வைத்து பார்க்கும்போது, நமது கதை மரபிற்கு மேகலா ரேகை மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது தெரிகிறது. மனிதனை மையப்படுத்தாத முதல் கதை பிறந்தது. சூலிச் சங்கு, கன்னிச் சங்கு அல்ல இது வேறு... கன்னிச்சங்கில் பிறப்பது கிறிஸ்தவம், அன்னை மேரி என்பது கன்னிச்சங்கு. கன்னியாக இருந்தே பிள்ளையை பெற்றெடுக்கும் நிகழ்வு அந்த பிரளயம் (Evolution). இது சூலிச் சங்கு.
‘சூலிச் சங்கு பனிரெண்டு அங்குலமாய் அளவிட்டு நண்பகலைச் சதுரமாக்கிய நிலத்திலே நிறுத்திப் பார்த்தால், சூலக் கருச்சாயை எந்தப் பக்கத்திலும் காணப்படாது (நிழல் விழாது) அலரி மேடாயன துலாயனத் தினங்களில் மேகலா மண்டலத்தில் இருக்கிறான்.
மேகலா மண்டிலமாவது, பூமத்திய ரேகைக்கு நேராக ஆகாசத்தில் இருக்கிற மண்டிலமாம். மேகலா ரேகை என்பதே நடுவாம்.
எதனால் மேகலா நிழல் விழாமல், விசுவன் எனும் நடுப்புள்ளியில் சுழன்று சூலிச்சங்கின் சுரியல் விசுவச் சாயைபடாமல் வீற்றிருக்கிறாள். சங்கின் உள்நாக்கு கன்னி வாலையாய் (கடல் தெய்வம்) பொன்னிய முதல் புதுக்கொழுந்தாய் சூர்வாய் திறந்து முற்பிறப்பின் காதைகள் பல கூறிவர இசை அளவு கண்டான்...
(இசையின் அளவு சொல்லக்கூடியவன் இராவணன், தென்னவன் என்றால் இராவணன், தோடி ராகச் சக்கரவர்த்தி, தன் கை நரம்பை அறுத்துக் கின்னரியில் பூட்டி இசைத்தவன். அதனால் அந்த இசை அளவு கண்டதை அவனுக்கு கொடுக்கிறேன். இங்கே தெற்கில் அவனது சிம்மாசனத்தில் முப்பத்தி இரண்டு பதுமைகள் இருக்கிறது. இதே போல உஜ்ஜயினியில் விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் முப்பத்தி இரண்டு புதிர் பதுமைகள் உண்டு. அது Tropic of cancer இது Tropic of capricorn)
‘இசை நுணுக்கம் இந்திரகாளியம் (நம்மிடம் இருந்தது, கடலில் மூழ்கியது) பஞ்ச மரபு, பரத சேனாபதியம், செயிற்றியம் முதலானவை மேகலா ரேகையில் ஊர்ந்து வர, முற்பிறப்புக் காதைக்கிணங்கி, சொற்களை அச்சரித்திரங்களில் பிரவாகமெடுத்தவள்’ (நம்முடைய கடல் தெய்வம் மேகலா, இது முற்கால பாண்டிய வணிகர்கள் பெட்ரா-ஜோர்டான்- சென்று அங்கிருந்து ரோம் நகரம் சென்றார்கள்.)
‘அருக சரிதையோடு (சமணம்) உயிர் மென்மை கூற, வித்யா சில்பம் நிகண்டு உரைப்ப, பாணர், விறலியர் பகல் பொழுதையும் சேராமல், நிசியையும் சேராமல், இரண்டுக்கும் இடையே ஊடாடும் ஒரு கணத்தையும் சேராமல் ஒரு முடிவுறாத, மங்கியதோர் தெளிவற்ற மேகலா ரேகை அது. நம் தொன்மத்தின் ஒளிப்பாட்டமாய் இருக்கலாம்.
‘இருட்டு மின்னலில் மறைந்த மேகலா மலை அடுக்கத்தின் பரந்த இருளாக இருக்குமென்றும், ஒரு வேளை முற்பிறப்பு ரேகையில் சிவந்தெரியும் ஆபுத்திரனின் முற்பிறப்பு எலும்புகளின் தொலை தூரங்களாகவும் இருக்கலாம். ஒவ்வொன்றும் நிகழப்போவதையும் மேகலா ரேகை முன் கூறி விடுவதாக குறிப்பிட்ட காலத்துக்கு கடல் படாத புனைவு கதாபாத்திரங்களின் இருப்பை அவசியப்படுத்தாத கோடுகள், அரூபங்கள் ரூபங்களாகும் வெளி. இதுதான் என்னுடைய படைப்புக்கான ஆதாரங்களின் கோட்பாடு. கதை தோன்றுவதற்கான அடிப்படை, தமிழ் தொன்மத்தை சேர்ந்தது.
உங்கள் கேள்விக்கான பதில் இதுதான். கொல்லிப்பாவை கபாட புரத்திலும் இருக்கிறாள். அதேபோல விருது தருபவர்களின் இடத்திலும் கொல்லிப்பாவை இருக்கிறாள். (கொல்லிமலைச்சதகம்) அதே போல அங்கிருப்பவர் இங்கிருப்பவருக்கு கொடுப்பது கொல்லிப்பாவைக்கு கொடுப்பது தான். கதை மரபுக்கு கொடுப்பது தான். மலை அடுக்கத்தில் நமது கதை மரபு இருக்கிறது. அதுவும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தானே? கொல்லிமலையின் கொல்லிப்பாவையையும், இங்கே கடல் கொண்ட கபாடபுரம், பாண்டியானத்தின் கொல்லிப் பாவையையும் சந்திக்க வைக்கிற இந்த விருது எல்லோரும் பிரஞை பூர்வமாக செய்தார்களா என்பதை விட, நம்மை அறியாமல் நமக்குள் ஓடுகிற நனைவிலி மெய்ஞ்ஞானத்தால் இந்தப் பாதை போயிருக்கிறது.
இதை நமக்கு தருவது ஒரு வாணிபர். இந்தத் தொன்மம் வருவது எப்படி. கொங்கு நாட்டிலிருந்து தான் வருகிறது, பின் அங்கிருந்து முசிறி சென்று நறுமணப் பொருள்கள் அங்குள்ள குட்டுவன்தொண்டி போய், நானிருப்பதோ பாண்டியன் தொண்டி, இங்கு நவீனமாக ஒரு வாணிபர் (விஜயா வேலாயுதம் ஐயா) கொடுக்கிறார் என்றால், இந்த வணிகத்தின் தொன்மம் என்ன? கோவலன் போலத் தான், அங்கே சென்றால் கண்ணகி அங்கேயும் இருக்கிறாள். இலங்கையிலும் இருக்கிறாள், மதுரையிலும் இருக்கிறாள், வாணிபர்கள் அங்கும் இருக்கிறார்கள். லவங்கம், ஏலம், மிளகு, இஞ்சி மற்றும் எகிப்திய பாரோ மன்னர்களுக்கு பதனத் தைலம், உடல்களை பதனடப்படுத்த, எல்லாவற்றையும் தமிழ் வணிகன் கொண்டு சென்றான். அது போல ஒரு வணிகர் அதுவும் வாசனைப் பொருள்கள் தயாரிக்கும், சக்தி மசாலா நிறுவனம் தருவதும் அதுபோல ஒரு நிகழ்வுதான். இதனை கி.ரா பெயரில் தருவது, ஒரு நாட்டார் மரபில் வந்த கதைசொல்லி பெயரால் வழங்கும்போது, அவர் படைத்த கதைகள், ரஷிய, உக்ரேனியக்கதைகள், ஆர்மீனியக்கதைகள் உஸ்பேக்கிஸ்தான் கதைகள். ரஷ்ய நாட்டார் கதைகள் போன்றவை தமிழில் பதிப்பிக்கப்பட்டபோது, கரிசல் இலக்கியத்தை கண்டுபிடித்து, நாட்டார் கதைகளை பதிப்பித்த இவர் ந.வானமாமலையின் ஆராய்ச்சி வட்டத்தை சேர்ந்தவராக இருக்கிறார். இவர் கரிசல் நாட்டார் சொல் அகராதியை உருவாக்கினார். அவருடன் இணைந்து எழுதிய ஊர்கிழவர்கள், அவ்வாக்கள், விவசாயப்பெண்கள், பருத்திபெண்டிர், சோள பெண்டிர் ஆகியோர் வழியாகவும், இவருடைய ஞாபகம் வழியாகவும் எடுத்து தொகுத்ததுதான் கரிசல் வட்டார சொல்லகராதி. அதையெல்லாம் அவர் ஒரு வரைபடமாக வரைய, அதிலிருந்து நாம் மற்ற நிலங்களுக்குத் தாவுகிறோம்.
பயணம் என்பது ஒரு நாவலுக்கு எப்படி உதவுது? இப்ப சித்தன்ன வாசலுக்கு போனா வெறுமே சித்தன்ன வாசலுக்குப் போயிட்டோம்னு இல்ல, அதுல இருக்கிற மகர மீனை கண்டுபிடிக்கிறேன். அந்த மகர மீன் தான் Tropic of capricornனு கண்டுபிடிக்கிறேன். அது மேகலா ரேகை தான்னு கண்டுபிடிக்கிறேன், அது கடலுக்குள்ள மட்டும் தான்னு இல்ல... அதை சுத்தி நூறு கிலோமீட்டர் தூரத்துக்கு அதன் கலைச்சலனங்களையும் உயிர் ஆற்றலையும் மாயப்பரப்பையும் கொண்டிருக்கும். அது தான் இலங்கையிலும் பரவியிருக்கிறது. இது தான் கதை தோன்றும் விதம்.
விகடகவி: அருமை. அருமையா சொன்னீங்க. உங்க ‘பிதிரா’ நாவல்ல ஐந்திணைகளை பற்றி சொல்லும்போது, முல்லை நிலத்திற்கு ஆந்திரப்ரதேசத்தை சொல்வது புதியதான ஒன்று.....
கோணங்கி: ஆமாம், ஆந்திராவின் தக்காணப்பீடபூமியை முல்லையாகவும், இங்கிலாந்தைப் பனி மருதமாகவும்... லத்தீன் அமெரிக்காவிலுள்ள காமேடரஸ்மலையை குறிஞ்சி நிலப்பரப்பாகவும் சொல்வது, நமது நிலங்களை மட்டும் தான் ஐந்து நில கோட்பாடுகளுக்குள் கொண்டு வரவேண்டுமா? என்று யோசித்து தமிழவனைக் கேட்டபோது, எல்லா கண்டங்களுக்கும் ஏன் இந்த அண்டத்திற்கே இந்த திணைக் கோட்பாடு பொருந்தும் என்று சொல்லி, இந்தப் பிரித்துப் பார்த்தலை அடிப்படையாய் வைத்து ‘பிதிரா’ நாவலை எழுதப்பான்னு சொல்லி என் சிந்தனைச் சாளரத்தைத் திறந்து விட்டவர் அவர்தான்.
விகடகவி: அதேபோலவே ‘நகுலன்’ எவ்வாறு உங்களை பாதித்தார்? அவரை வைத்து ஒரு சிறுகதையே எழுதினீர்கள் அல்லவா?
கோணங்கி: அடுத்த கட்டத்திற்கு என்னை நகர்த்தியவர் நகுலன் தான். ‘நகுலன் இறந்த பின்னும் ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ கதை அது.
சிறிது இளைப்பாறுதலுக்குப்பின் நேர்காணல் தொடருகிறது......

Leave a comment
Upload