தொடர்கள்
வரலாறு
சென்னை 2000 ப்ளஸ் (பாகம் 4) - மூத்த பத்திரிகையாளர் ஆர். ரங்கராஜ்

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

20210818073827873.jpeg

1954 -ம் ஆண்டில் வெளிவந்த தூக்கு தூக்கி திரைப்படத்தில், உடுமலை நாராயண கவி இயற்றிய அருமையான பாடல் “குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”. பல்வேறு உயிரினங்களாய வாழ்ந்து படிப்படியாக உரு மாறி, பிறகு குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன் என்று பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு தெரிவிக்கிறது.

திரைப்படம்: தூக்கு தூக்கி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியோர்: பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன், வி.என். சுந்தரம்
ஆண்டு: 1954

“குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்

.... உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு

உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு
உண்மையில் வித்தியாசமில்லை
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”.

பல்வேறு உயிரினங்களாய வாழ்ந்து படிப்படியாக உரு மாறி, பிறகு குரங்கிலிருந்து உருவானவன்தான் மனிதன் என்று பரிணாம வளர்ச்சியின் கோட்பாடு தெரிவிக்கிறது. ஆதி மனிதன் உருவானதும் இப்படிதான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். சார்ள்ஸ் டார்வின் உருவத்தையே இந்த வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக சித்தரிக்கப்பட்டது!

நான் நாயுடு, நான் செட்டியார், நான் ஐயர், நான் நாடார், நான் வன்னியர் என்று மனிதன் நினைக்கிறான். தவிர நாம் அனைவரும் அடிப்படையில், குரங்கிலிருந்து வந்தவர்கள்தான் என்று மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. இதை உணர்ந்தால் சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம்.

அகஆழ்வு என்பது நமக்கு சம்பந்தமில்லாதது என்று நினைப்பவர்களுக்கு, இத்தொடரின் மூலமாக நாம் தெரிவிப்பது, பல்லாவரம்/திருசூலம், ஆதிரம்பாக்கத்திலிருந்தும் மற்ற இடங்களிருந்தும் வரும் செய்திகள் பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த நம் முன்னோர்களின் கதைதான்.

குரங்கனில்முட்டம்

குரங்கிற்கும் - மனிதனுக்கும் உள்ள தொடர்பை, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை ஒரு பிரசித்திபெற்ற தலம் நமக்கு நினைவூட்டுகிறது.

வாலி குரங்கு உருவிலும், இந்திரன் அணில் உருவிலும், எமன் காகம் (முட்டம்) உருவிலும் இத்தலத்தில் இறைவனை தனித்தனியே வழிபட்டு, தங்களது சாபம் நிவர்த்தியடையப் பெற்றதால் இத்தலம் குரங்கனில்முட்டம் என்ற பெயரைப் பெற்றது. குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு “கொய்யா மலர் நாதர்” (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.

16வது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர், சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன், சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்” கூறினார். இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான்.

இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக் கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு... எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் “குரங்கு அணில் முட்டம்” என்றானது என்று இக்கோயியிலின் ஸ்தலபுராணம் தெரிவிக்கிறது.

கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. இங்குள்ள அம்பாள் பெயர் “இறையார்வளையம்மை”. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர்.

சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.

சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார்.

இத்திருத்தலம் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பயணம் செய்யும் போது பாலாற்றைக் கடந்தால் சுமார் 9 கி.மி. தொலைவில் தூசி என்ற கிராமம் வரும். அங்கிருந்து பிரியும் குரங்கணில்முட்டம் பாதையில் 2 கி.மி. சென்றால் கிராமத்தின் எல்லையில் பாலாற்றின் கரைக்கு அருகில் ஆலயம் அமைந்துள்ளது.

கோயில் வாயிலின் முகப்பில் அணிலும் காகமும் வழிபடும் சிற்பம் உள்ளது.

அம்பாள் பெயரை இப்பகுதி மக்கள் “இளையாளம்மன்” என்று அழைக்கின்றனர்.

கோயிலுக்கு சற்றுத் தொலைவில் ஒரு பாறை, குடைக் கோயிலாகக் காட்சியளிக்கிறது.

கல்வெட்டு

கல்வெட்டில் இத்தலம் “காலியூர்க் கோட்டத்து இருகழி நாட்டு மாமண்டூர்ப் பற்றத்துப் பல்லவபுரமான குரங்கணில்முட்டம்” எனக் குறிக்கப்படுகிறது. இறைவன் திருக்குரங்கணில் முட்டமுடைய நாயனார் என்றும், கொய்யாமலர் ஈசுவரதேவர் என்றும் குறிக்கப்படுகிறார்.

கல்வெட்டில், சகம் 1451-ல் பூஜைக்காக கிருஷ்ணதேவராயர் பல்லவபுரம் கிராமத்தை இக்கோயிலுக்கு அளித்ததாக குறிப்புள்ளது.

இப்பகுதி மக்களிடையே “கொய்யாமலை” என்னும் பெயர் பலருக்கு இருப்பதை இன்றும் காணலாம்.

7-ம் நூற்றாண்டைச் சார்ந்த திருஞானசம்பந்தர் பாடல்...

7 ம் நூற்றாண்டைச் சார்ந்த திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, “குரங்கணின்முட்டம்” என்றும், “பறவா வகை வீடு” (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.

இசைலைஞர், திரு சிம்மம் குமார்

திருஞானசம்பந்தர் இத்தலத்தில் இயற்றிய பாடல் இந்த ஸ்தலத்தை பாடல் பெற்ற ஸ்தலத்தின் வரிசையில் சேர்த்துள்ளது. என்னுடைய சென்னை 2000 ப்ளஸ் எனும் அமைப்பு, இத்தலத்திற்கு சென்று அங்கு சம்பந்தரின் பாடலை இசைத்தது. ஒரு சிறந்த இசைகலைஞர், திரு சிம்மம் குமார், பாடி அசத்தினார். அனைவரும் பரவசம் அடைந்தார்கள். 1,300 ஆண்டுகளுக்கு முன்பே இத்தலம் இருந்தது. இக்கோயிலிருந்தது என்பதற்கு திருஞானசம்பந்தர் பாடலே சாட்சி.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டைமண்டலம் என்று அழைக்கப்பட்ட, நவீன காலத்தில்... சென்னை பெருநகர் என்று அழைக்கப்படுகின்ற பகுதிகள், உண்மையிலேயே எவ்வளவு புராதனமானது என்பதை வர்ணிக்க இயலாது. சென்னை பெருநகரின் வயது 382 ஆம்!!!

(தொடரும்)